Solomon Pappaiah’s Final Pattimandram: மறைந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையிலான கடைசி பட்டிமன்றத்தில் அரசியல் கருத்துகள் முன்வைக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளது. இதனை கண்டித்து விஜய் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு ‘சாபம்’ கொடுத்து வருகின்றனர்.
சன் டிவி தமது சமூக வலைதளப் பக்கத்தில், “பட்டிமன்றம் என்றாலே நம் நினைவில் தோன்றுவது பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் முகம்தான். அவருக்கென்றே அமைந்த நகைச்சுவை கலந்த அறிவார்ந்த இயல்பான பேச்சு நடை தமிழ் மக்கள் உள்ளங்களைக் கொள்ளைகொண்டது. 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டிமன்றங்களில் ஒலித்த அந்தக் குரல், அந்தத் தமிழ்க் கடல் ஓய்ந்துவிட்டது. தமிழாக வாழ்ந்து மறைந்த ஐயா அவர்களின் தனித்துவமான அந்தக் குரல், அவருடைய புகழ் தமிழ் நெஞ்சங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஐயாவின் தமிழ் என்றும் வாழும்!
பட்டிமன்றம் என்றாலே அவர்தான். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் தலைமையில் ஒளிபரப்பாகும் இந்தச் சிறப்புப் பட்டிமன்றமே, அவர் பங்கேற்ற இறுதிப் பட்டிமன்றம். ஒரு சகாப்தத்தின் கடைசி மேடை” என சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி இன்று செப்டம்பர் 14-ந் தேதி காலை 10 மணிக்கு சன் டிவியில், “ஜென் Z தலைமுறையின் போக்கு – வருந்தத்தக்கதா? வரவேற்கத்தக்கதா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் ஒளிபரப்பானது.
இதில் சாலமன் பாப்பையாவின் குழுவில் எப்போதும் இடம் பெறும் ராஜா, பாரதி பாஸ்கர் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர்.
இந்த பட்டிமன்றத்தில் இடம் பெற்ற சில கருத்துகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சாலமன் பாப்பையாவின் கடைசி பட்டிமன்றத்தில் மறைமுகமாக இடம் பெற்ற அரசியல் கருத்துகள்:

பாரதி பாஸ்கர்
”சில பேர் எதுக்குக் கட்சி மாறுறாங்கன்னு கடைசி மட்டும் நமக்குத் தெரியவே மாட்டுது. சில பேரங்கள் நடந்திருப்பதாகச் சில பேர் பேசிக்கொள்கிறார்கள்”

ராஜா
“இவங்க காதலுக்கு வேற ஒரு புது விளக்கம் சொல்றாங்க. ‘நீங்களெல்லாம் காதலிச்சது காதலா? நாங்கள் எப்படி காதலிக்கிறோம் தெரியுமா? அந்தம்மா இல்லாட்டி இந்தம்மா!’
நான் எவ்வளவு ஜாக்கிரதையாகச் சொல்கிறேன் பார்த்தீங்களா? நமக்கு எதுக்குப் ப்ரோ இந்த வம்பு? நாமெல்லாம் வந்தோமா, இருந்தோமா, போனோமான்னு இருக்கணும்”
“சார், எந்தத் தலைமுறையாக இருந்தாலும் முந்தைய தலைமுறையை மதிக்காத அடுத்த தலைமுறை எப்படி முன்னேற முடியும்?”
“நீங்களெல்லாம் என்ன, உங்க அப்பாகிட்ட காசு திருடுனீங்களா? உங்க அப்பா திருடுனதை நீங்க பார்த்தீங்களா, தம்பி? சொல்லுங்க. உங்க முந்தைய தலைமுறை திருடும்போது நீங்க பிறந்தீங்களா? பிறக்கலை அல்லவா? அப்படியென்றால், நீங்க என்ன செய்றீங்களோ அதைத்தான் உங்க அப்பாவும் செஞ்சிருப்பாருன்னு நம்புறீங்க.”
“அந்த அம்மா பாவம்! கொஞ்ச நாட்களுக்கு முன்னாடியே யோசிச்சிருந்தால் ஒருவேளை மந்திரியாகியிருக்கலாம்.”
சாலமன் பாப்பையா குறுக்கிட்டு “ரகசியங்கள் வெளியே விடப்படாது”
ராஜா
“இங்கே பாருங்க. உங்ககிட்ட ஒரு தப்பு இருக்குன்னா, அது சரியா, தப்பான்னு நீங்க பார்க்கணுமே தவிர, ‘நீ செய்யலையா? நீ செய்யலையா?’ன்னு திரும்பக் கேட்கிறது என்ன நியாயம்?”
“அங்கேதான் அப்படிப் பேசுறாங்கன்னா, இங்கேயுமா?”
சாலமன் பாப்பையா குறுக்கிட்டு:
“அங்கேதான்!”
ராஜா
“எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா? நம்ம ஆளுங்க எப்படித் திக்கித் திணறுறாங்கன்னு இப்போதானே தெரியுது!”
“நம்மூரில் ஒரு பழமொழி இருக்குங்க: ‘சிறியார் இட்ட வெள்ளாமை விளைந்தாலும் கைக்கூடாது.’ இப்ப கரப்பான் பூச்சி இரண்டாயிருச்சு தெரியுமா, இல்லையா? சின்னப் பையன்களைச் சேர்த்தால் இப்படித்தான் நடக்கும்!”
“ஆனால் அவங்க நோக்கம் தப்புன்னு நான் சொல்லலை. சூப்பர்தான் அது. அவங்களுக்குன்னு ஒரு மொழிநடை இருக்கு. ஒரு சென்டென்ஸ், ஒரு வாக்கியத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ சரியாகப் பிழையில்லாமல் எழுதத் தெரியலை.”
சாலமன்பாப்பையா குறுக்கிட்டு.. “பேசவும் தெரியவில்லை; வாசிக்கவும் தெரியவில்லை.”
ராஜா
“இந்த ஆண்டு ஷேர் மார்க்கெட்டில் அதிகமாகப் பணத்தைத் தொலைத்தது ஜென் Z தலைமுறை. ஒரு ஆண்டில் எவ்வளவு பணம் தெரியுமா? ரூ.1.05 லட்சம் கோடி! நான் சரியாக வாசித்தேனா?”
சாலமன் பாப்பையா குறுக்கிட்டு “ரொம்பச் சரி”
ராஜா
“அவர்களில் ஒரு பத்து சதவீதம் பேர் நல்லா இருக்காங்க. மீதி 90 சதவீதப் போக்கு என்ன?
‘ப்ரோ, வாட் ப்ரோ?’
ரொம்ப ராங், ப்ரோ!”

சாலமன் பாப்பையா
கொஞ்ச நேரம் நாமெல்லாம் திகைச்சுத்தான் போயிருக்கோம். இப்படியா இருக்கு? நம் வீட்டுப் பிள்ளைகள் இப்படிப் போயிட்டு இருக்காங்களே, இனி என்ன ஆகப்போகிறோம்? நாளைக்கு என்ன நடக்கப்போகுதோ என்று நம்மை நினைக்க வைத்து, மனசைப் போட்டு அலட்டிக்கிற அளவுக்கு ராஜா நம்மை மிரட்டியிருக்கிறார். வருந்தத்தக்கது அல்ல; வரவேற்கத்தக்கது.
சன் டிவியில் ஒளிபரப்பான இந்த பட்டிமன்றத்தின் கருத்துகளை சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்கள் மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மறைந்த ‘சாலமன் பாப்பையா’வுக்கு ‘சாபம்’ கொடுக்கிற தவெகவினரின் பதிவுகளும் (வெளியிட முடியாத அளவுக்கான வசைகளுடன்) சமூக வலைதளங்களில் இடம் பெற்றுள்ளன.
