‘பட்டிமன்றத்தின் முகம்’ பேராசிரியர் சாலமன் பாப்பையா

Published On:

| By Mathi

Solomon Pappaiah

தமிழகத்தில் ‘பட்டிமன்றம்’ என்ற வார்த்தையை கேட்டவுடனேயே நம்முடைய நினைவுகளில் வந்து அமரும் முகங்களில் முதன்மையானவர் மதுரை மண்ணின் மைந்தர் பேராசிரியர் சாலமன் பாப்பையா இன்று (செப்டம்பர் 11) 90 வயதில் காலமானார்.

மதுரையில் தொடங்கிய வாழ்க்கை

சாலமன் பாப்பையா 1936 பிப்ரவரி 22-ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் பிறந்தார். அவரது பெற்றோர் அ. சுந்தரம் – பாக்கியம். 12 குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் 9-வது குழந்தையாகப் பிறந்தவர் சாலமன் பாப்பையா.

ADVERTISEMENT

அவரது தந்தை ஆலைத் தொழிலாளி. பெரிய குடும்பம் என்பதால் பொருளாதார வசதி நிறைந்த குழந்தைப் பருவம் அவருக்கு அமையவில்லை. கல்வியைத் தொடர்வதற்கே போராட வேண்டிய சூழல் இருந்தது. நண்பர்களின் உதவியுடனும் தனது முயற்சியுடனும் அவர் படிப்பைத் தொடர்ந்தார்.

பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர் எழுதிக் கொடுத்ததை மனப்பாடம் செய்து பேசுவார். நாடகங்களிலும் பங்கேற்றார். அமெரிக்கன் கல்லூரிப் பள்ளியில் திருவள்ளுவர் கழகத் தலைவராக இருந்தபோதும் மேடைகளில் பேசினார்.

ADVERTISEMENT

பொருளாதார மாணவர்- தமிழ்ப் பேராசிரியர்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சாலமன் பாப்பையா, பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். (ஆதாரம்: 2021, மார்ச் 7 தினமணி பேட்டி)

தியாகராசர் கல்லூரியில் தொடங்கப்பட்ட முதல் எம்.ஏ. தமிழ் வகுப்பில் சேர்ந்தார். அவரது வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை மீண்டும் அமெரிக்கன் கல்லூரியிலேயே ஏற்பட்டது.

ADVERTISEMENT

அங்கு முதலில் பயிற்றுநராகப் பணியாற்றிய அவர், பின்னர் தமிழ்ப் பேராசிரியராக உயர்ந்தார். தொடர்ந்து தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வகுப்பறையில் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் கற்பித்த பேராசிரியர், வகுப்பறைக்கு வெளியே அதே இலக்கியத்தை சாதாரண மக்களிடம் எடுத்து செல்லத் தொடங்கினார்.

பட்டிமன்ற மேடையில் முதல் பயணம்

1960-களில் அவரது மேடைப் பயணம் தீவிரமடைந்தது. அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தபோது பேச்சுக்கலை தொடர்பான பாடத்தை நடத்தினார். எட்டையபுரம் பாரதி விழா அவரது பேச்சுப் பயணத்தில் குறிப்பிடத்தக்க திருப்பமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக குன்றக்குடி அடிகளார் தலைமையிலான பாரதி விழா பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு மேடைகளில் பேசத் தொடங்கினார்.

1970-களிலேயே தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளின் இலக்கிய நிகழ்ச்சிகளில் சாலமன் பாப்பையாவின் பெயர் இடம் பெற்றன. ஆரம்பத்தில் அவருக்கு பட்டிமன்றத்தில் பேச்சாளராக இருப்பதில்தான் அதிக விருப்பம் இருந்தது. பின்னர் நடுவர் பொறுப்பு அவரது அடையாளமாகவே மாறியது.

பட்டிமன்றத்தை மாற்றிய பாப்பையா

சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தைகண்டுபிடிக்கவில்லை. அவருக்கு முன்பே தமிழகத்தில் வளமான பட்டிமன்ற மரபு இருந்தது. ஆனால் அந்த வடிவத்தை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவருக்குத் தனித்த இடம் இருக்கிறது.

ஒரு காலத்தில் இலக்கிய விழாக்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள் போன்றவற்றை மையமாகக் கொண்டிருந்த பட்டிமன்றம், தொலைக்காட்சி வளர்ச்சிக்குப் பிறகு குடும்ப நிகழ்ச்சியாக மாறியது.

அந்த மாற்றத்தின் முக்கிய முகமாக சாலமன் பாப்பையா இருந்தார். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது பட்டிமன்றங்கள் தமிழகக் குடும்பங்களின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மாறின.

கடினமான தமிழை எளிய தமிழாக்கியவர்

சாலமன் பாப்பையாவின் வெற்றிக்கு முக்கியமான காரணம் அவரது மொழிநடை. தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை இருந்தாலும், மேடையில் அதை வெளிப்படுத்தும்போது மிகக் கடினமான இலக்கிய மொழியை அவர் தேர்வு செய்வதில்லை.

திருக்குறளையோ, சங்க இலக்கியத்தையோ, கம்பராமாயணத்தையோ எடுத்துக்கொண்டாலும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் ஒரு சம்பவத்துடன் இணைத்து விளக்குவார்.

அதற்குள் மதுரைக்கே உரிய இயல்பான பேச்சுத்தமிழும் நகைச்சுவையும் கலந்து வரும்.
இதன் காரணமாக இலக்கியம் படிக்காதவர்களும் அவர் சொல்லும் இலக்கியக் கருத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வகுப்பறைகளுக்குள் இருந்த தமிழை கடைக்கோடி மக்களிடம் அறிமுகப்படுத்தியவர்.

சிரிக்க வைத்தபடியே சிந்திக்க வைத்த தீர்ப்புகள்

சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றங்களில் தலைப்புகளும் காலத்துடன் மாறின.
இலக்கியம் சார்ந்த தலைப்புகளைத் தாண்டி குடும்பம், கணவன்–மனைவி உறவு, பெற்றோர்–பிள்ளைகள், கல்வி, பணம், காதல், திருமணம், நவீன வாழ்க்கை, தொழில்நுட்பம், தலைமுறை மாற்றம் போன்ற சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புடைய தலைப்புகள் அதிகரித்தன.

இரு அணிகளும் வாதங்களை முன்வைத்த பிறகு நடுவராக அவர் வழங்கும் தீர்ப்புதான் நிகழ்ச்சியின் உச்சம். ஒரு அணியை வெற்றியாளராக அறிவிப்பதைவிட இரு தரப்பின் வாதங்களிலும் உள்ள உண்மைகளை எடுத்துச் சொல்லி, நகைச்சுவையுடன் சமூகச் செய்தியைச் சொல்லும் பாணி அவருடைய தனித்துவமாக அமைந்தது.

இதன் மூலம் பட்டிமன்றம் வெறும் வாதப் போட்டி என்ற நிலையிலிருந்து குடும்பத்துடன் பார்க்கக்கூடிய அறிவார்ந்த பொழுதுபோக்கு வடிவமாக மாறியது.

ராஜா, பாரதி பாஸ்கர் உள்ளிட்ட அடுத்த தலைமுறை

சாலமன் பாப்பையா மேடையின் இன்னொரு முக்கியமான அம்சம், அவருடன் தொடர்ந்து பயணித்த பேச்சாளர்கள்.

பட்டிமன்றம் ராஜா, பாரதி பாஸ்கர் உள்ளிட்ட பலர் தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் மூலம் தமிழகம் முழுவதும் அறிமுகமானார்கள்.

ஒரு நடுவரின் புகழில் மட்டும் நின்றுவிடாமல், பல பேச்சாளர்களுக்கும் பொதுமக்களிடம் தனித்த அடையாளம் உருவாகும் மேடையாக அவரது பட்டிமன்றங்கள் அமைந்தன.

அதனால் சாலமன் பாப்பையாவின் பங்களிப்பை தனி மனிதரின் மேடை வெற்றியாக மட்டும் பார்க்க முடியாது. தொலைக்காட்சி பட்டிமன்றத்துக்கான ஒரு தலைமுறையையே உருவாக்கியதில் அவரது பங்கும் குறிப்பிடத்தக்கது.

திருக்குறளுக்கு உரை

பட்டிமன்றத்தைத் தாண்டி சாலமன் பாப்பையாவின் முக்கியமான தமிழ் இலக்கியப் பணிகளில் ஒன்று திருக்குறளுக்கான அவரது உரை.

‘திருக்குறள் உரையுடன்’ என்ற அவரது நூல் வெளியிடப்பட்டுள்ளது. சமகால சமூக வாழ்க்கை மற்றும் நடைமுறை அனுபவங்களை இணைத்து திருக்குறளை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவர் உரை எழுதினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்-ஓர் பார்வை, உரை மலர்கள், உரைக்கொத்து, புறநானூறு புதிய வரிசை வகை உள்ளிட்ட நூல்களும் அவரது படைப்புகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேடையில் அவர் செய்ததையே நூலிலும் செய்தார்.. அதாவது இலக்கியத்தை வாசகருக்கு அருகில் கொண்டு வருவது என்கிற பெரும் பணியை செய்தவர் சாலமன் பாப்பையா.

சினிமாவிலும் சாலமன் பாப்பையா

தமிழ் மேடையில் பெரும் அடையாளத்தைப் பெற்ற பிறகு திரைப்படங்களிலும் சாலமன் பாப்பையா தோன்றினார். இயக்குநர் ஷங்கரின் ‘பாய்ஸ்’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ஆனாலும் சினிமா அவரது பிரதான அடையாளமாக மாறவில்லை.

திரைத்துறைக்குச் சென்ற ஒரு பட்டிமன்றப் பேச்சாளர் என்பதைவிட, திரைப்பட உலகத்தைச் சேர்ந்தவர்களையும் பட்டிமன்ற மேடைக்கு வரவழைக்கும் அளவுக்கு தனது மேடையைப் பிரபலப்படுத்திய தமிழ்ப் பேராசிரியர் என்ற அடையாளமே அவருக்கு நிலைத்தது.

கலைமாமணி முதல் பத்மஸ்ரீ வரை

தமிழுக்கான அவரது நீண்டகாலப் பணிக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு 2000-ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கியது. 2010-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ விருதை வழங்கியது.
2021-ஆம் ஆண்டு மத்திய அரசு சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

ஒரு சாதாரண தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, கல்விக்காகப் போராடி, பேராசிரியராகி, தமிழ் மேடைகளில் பயணித்து, இறுதியில் நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றைப் பெறும் நிலைக்கு உயர்ந்தார்.

குடும்ப வாழ்க்கை

சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நீண்டகாலம் அவரது இலக்கிய மற்றும் மேடைப் பயணத்திற்கு குடும்பம் ஆதரவாக இருந்தது. ஜெயபாய் 2025 ஜனவரி 12-ஆம் தேதி மதுரையில் காலமானார்.

சாலமன் பாப்பையா ஏன் தனித்துவமானவர்?

சாலமன் பாப்பையாவைப் பட்டிமன்ற நடுவர் என்ற ஒரே அடையாளத்திற்குள் அடக்கிவிட முடியாது. அடிப்படையில் அவர் ஒரு ஆசிரியர். கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்தவர். பின்னர் மேடையில் மக்களுக்கு பாடம் எடுத்தார்.
தொலைக்காட்சி வந்தபோது தமிழகம் முழுவதற்கும் இப் பணியை செவ்வனே செய்தார்.

சாலமன் பாப்பையா மேடையில் பயன்படுத்திய மிகப்பெரிய ஆயுதம் எளிமை.
தமிழின் ஆழத்தைக் குறைக்காமல், அதைப் புரிந்துகொள்ளும் சிரமத்தை மட்டும் குறைத்தார். அதனால்தான் திருக்குறளையும் குடும்ப வாழ்க்கையையும் ஒரே மேடையில் பேச முடிந்தது. சங்க இலக்கியத்தையும் கணவன்–மனைவி நகைச்சுவையையும் ஒரே உரையில் இணைக்க முடிந்தது.

தலைமுறைகளை இணைத்த தமிழ் மேடை

1936-ல் பிறந்த சாலமன் பாப்பையாவின் வாழ்க்கையைப் பார்த்தால் தமிழகத்தின் ஊடக வரலாற்றின் ஒரு பகுதியையும் பார்க்க முடியும். ஒலிபெருக்கி முன் நடைபெற்ற இலக்கியக் கூட்டங்கள்… கல்லூரி பட்டிமன்றங்கள்… ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட பொதுமேடைகள்… வானொலி… தொலைக்காட்சி… பின்னர் இணையம், YouTube, சமூக ஊடகங்கள்… ஊடகம் மாறிக்கொண்டே இருந்தது.

ஆனால் சாலமன் பாப்பையாவின் அடிப்படை உத்தி மாறவில்லை. மக்களுக்குப் புரியும் தமிழில் பேசுவது. அதனால்தான் பேராசிரியர் சாலமன் பாப்பையா என்பது ஒரு தலைமுறையின் பெயராக மட்டும் நின்றுவிடவில்லை. தாத்தா–பாட்டி ரசித்த அதே மனிதரை பெற்றோர் ரசித்தார்கள்; அவர்களுடன் அமர்ந்து அடுத்த தலைமுறையும் பார்த்தது. தமிழ் இலக்கியத்தைப் பாமரனுக்கும் புரியச் செய்ய முடியும்; நகைச்சுவையால் சிரிக்க வைத்துக்கொண்டே சமூகத்தைச் சிந்திக்கவும் வைக்க முடியும் என்பதை பல தசாப்தங்களாக நிரூபித்த மேடை ஆசிரியர் அவர்.

தமிழகத்தின் பட்டிமன்ற வரலாற்றை எழுதும்போது சாலமன் பாப்பையாவுக்கு ஒரு அத்தியாயம் ஒதுக்க வேண்டியதில்லை; அவரைத் தவிர்த்து அந்த வரலாற்றையே முழுமையாக எழுத முடியாது என்பதே நிஜம்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share