ஸ்ரீராம் திருவரங்கம்
எட்டயபுரத்தில் பிறந்து காசி மாநகர் கடந்து திருவல்லிக்கேணி மண்ணைத் தேர்ந்தெடுத்து விண்ணேறிய புரட்சி சித்தர்.
தமிழை ஆழ அளந்த ஞானாசிரியர்.
வறுமையைப் புறந்தள்ளி அளப்பரிய படைப்புகளைத் தமிழுக்கு அள்ளித் தந்து நாற்பதே வயதுக்குள் தன் கர்மாவை முடித்துக்கொண்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுமேடையேறி “வந்தேன்” என எரிந்து நிறைந்தவர் மகாகவி பாரதியார்!
“அந்தணன் என்போன் அறவோன்” என்னும் குறளின் பொருளைப் பாருக்கு உணர்த்தி நின்று வாழ்ந்து காட்டிய இந்தியத் தமிழ் மண்ணின் ஈடுஇணையற்ற பெருங்கவி பாரதியார்.
அவரது பண்பறம், படிப்பறம், தமிழறம், சொல்லறம், சமூக அறம், காதல் அறம், பெண்ணறம், அரசியல் அறம், காவிய அறம், வேதாந்த தத்துவ ஞான அறம் அனைத்தும் உயிர் உள்ளளவும் ஊன்றியூன்றிக் களிக்கத்தக்கன.
இன்று மகாகவியின் நினைவு நாள்!
பள்ளி செல்லும் காலத்தில் திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த வீட்டுக்கு வெளிப்புறத்தில் வரிசையாக வேல் போன்று அமைந்த வேலியில் எனது மர ஸ்கேலைப் படபடவென உரசியபடியே சென்று இறுமாந்தவன் நான்.
என்னைப் பொறுத்தவரை கண்ணன் பரம்பொருள் என்றால் பாரதியும் அவ்வாறே.
மாபாரத காலத்து நர – நாராயணர் போலக் கண்ணனோடு இரண்டறக் கலந்தவர் பாரதியார் என்பது எளியேனின் துணிபு.
பாரதியும் – கண்ணனும் வங்கக்கடல் என்றால் அடியேன் அந்தக் கடற்கரை மணற்வெளிக்கப்பால் தார் ரோட்டில் சுமார் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் பொடியன். அவ்வளவே.
பாரதியார் வாழ்ந்த அதே தெருவில் நானும் சில காலம் வாழ்ந்தேன் என்னும் சலுகை மட்டுமே அவரைக் குறித்து எழுதிவிடப் போதுமா? ஆசைதான் வெட்கமறியுமா?
துணிகிறேன். வழிநடத்துக பரம் பொருளே!
கம்பன், ஔவை, ஆண்டாளுக்கு ஈடாக சொல் பொருள் ஆட்சியோடு தமிழை ஆண்ட பரப் பிரம்மமாகவே பாரதியாரை உணர்கிறேன்.
பாரதியாரின் அகண்ட கவி உள்ளத்தைக் காண ஓர் ஆயுள் போதாது.
பாரதியின் கண்ணன் பாடல்களை அவரது வாக்குமூலமாகவே கொண்டு அவரது எண்ணத்தை, ஏக்கத்தை என் வழியே இங்கே சுருங்கப் பதிக்க முயல்கிறேன்.
பாரதியாரின் அன்னை!

கண்ணபெருமானைத் தன் அன்னையாக வரித்துக்கொண்ட பாரதியார் இவ்வாறு நெகிழ்கிறார்…
உயிரே அவளது முலை! உணர்வே அவளது பால்!. அதனை வந்து, வந்து வலிந்து ஊட்டிவிடும் பாசத்தின் சிகரம் அவள்!
ஊட்டிவிடும் போதினில் சந்திர சூரிய அண்ட சராசரக் கதைகளை எனக்குச் சொல்வாள்.
எனக்குச் சலிப்பு மேலிடும்போதெல்லாம் சுதாரித்துக்கொள்வாள்.
மேலும், எனக்கு சுவாரஸ்யம் ஊட்ட எண்ணி பற்பல பொய்க் கதைகளையும் பூதக் கதைகளையும் சொல்லி நகைப்பூட்டுவாள்.
கோத்த பொய் வேதங்களும் – மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய் நடையும் – இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்.
அவை புனைவுகள்தான் என்று தெரிந்தும் அவளது முலைப் பாலை விரும்பி ஏற்றேன். எனக்குத் தெரியும். அவள் என்னை விட்டுக் கொடுத்துவிட மாட்டாள்.
ஆண்டருள் புரிந்திடுவாள் – அண்ணன்
அருச்சுனன் போலெனை ஆக்கிடுவாள்
பகவத் கீதையின் விபூதி யோகத்தில் “பாண்டவர்களுள் நான் அர்ஜுனன்” என்கிறான் கண்ணன். அந்த உச்சப் பதவியை எனக்கும் கொடுத்து அருள் செய்வாள் என் தாய் என்கிறார் பாரதியார்!
பாரதியாரின் தந்தை!
எனது தந்தை மறக்குல வீரன் என்று மீசை முறுக்குகிறார் பாரதியார்.
பிறந்தது மறக்குலத்தில் – அவன்
பேதமுற வளர்ந்ததும் இடைக் குலத்தில்
எனது தந்தையை மாடுகள் மேய்க்கும் இடைக் குலத்தில் பிறந்தவன் என்பீர்களாயின் அதனை அவனது யதுகுல வரலாற்றுச் சாபமாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்பவர் அடுத்த வரியில்,
சிறந்தது பார்ப்பனருள்ளே!
என நெஞ்சு நிமிர்த்துகிறார்.
வித்தையில் சிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்பீர்களேயாயின் அவர்களுக்கும் சேர்த்து கீதையுரைத்தவன் என் தகப்பனே என்று தன் பரம்பரை சுகத்தைச் சொல்லி நெக்கிழைகிறார்.

என் தகப்பன் மிக நல்லவன்தான். ஆனாலும் செல்லம் கொஞ்சி அள்ளிக் கொடுத்துவிடும் தகப்பன் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள் என்று கிசுகிசுக்கிறார்.
சில செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு
எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் முதலில் வறுமையைக் காட்டிப் பின் செழுமையைக் காட்டித்தரும் பொல்லாத தகப்பன் கண்ணன் என்று பிள்ளை மனம் கொண்டு குமைகிறார்.
கண்ண தகப்பன் பாரதிக்குச் சொன்ன ஆகச் சிறந்ததொரு அறிவுரையோடு முடிக்கிறார்…
அன்பினைக் கைக்கொள் என்பான்; துன்பம்
அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்!
கண்ணத் தகப்பன் தலைகோதி புத்தி புகட்ட “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்றதனைத் தன் மனமெங்கும் நிறைத்துக்கொண்டதால்தான் சோற்றுக்கு வைத்திருந்த கையளவு அரிசியையும் வந்தமர்ந்த சிட்டுக் குருவிகளுக்கு வாரியிறைத்தார் எட்டயபுரத்தார்.
பாரதியாரின் குரு!
யமுனா நதி தீரத்தில் மோனத் தவமாடி வரும் ஒரு பொழுதில் கிழவன் ஒருவன் பாரதியின் அருகே வந்து, தோள் தொட்டு
“உன்னை ஆதரிக்க வல்ல குரு மதுராபுரியில் இருக்கிறான் போ” என்றான்.
ஆசை ஆசையாய் மதுராவுக்கு ஓடோடிச் சென்ற பாரதியார் அங்கே ராதையைக் கூடும் காமனாகக் கண்ணனைக் காண்கிறார்.
ஆடலும் பாடலுமாக இருக்கும் ஒரு லோலனைப் போய் குருவாகக் கொள் எனச் சொன்னாயே அடேய் கிழவா என அந்த யமுனா நதி தீரத்தானைத் தேடிக் கொல்லப் புறப்பட்டே விட்டார் பாரதியார்.
அந்த நேரம் அசரீரி ஒன்றைக் கேட்கிறார்…
சித்தத்திலே சிவம் நாடுவார் – இங்கு
சேர்ந்து களித்துல காளுவார் – நல்ல
மத்த மதவெங்களிறு போல் – நடை
வாய்ந்திறு மாந்து திரிகுவார்.
சிவம் என்னும் அன்பை சித்தத்தில் நிறுத்தி மதுராபுரி சன்னதியில் நின்று பார். பிறகு நீ நடக்கும் நடையெல்லாம் யானை நடை போலாகும்!
விலங்குகளில் யானை நடைக்கு என்றொரு சிறப்பு இயல்பு உண்டு. அது, எப்போதும் ஒருபக்கக் கால்களை ஒன்று போலவே எடுத்து வைத்து நடக்கும்.
போலவே, இப்பிறவியில் கொண்ட உன் அறிவையும் ஊழ்வினைப்பட்ட உன் மனதையும் ஒருபோல உணர்ந்து எடுத்து வைக்கப் பழகு.
அறிவும் மனமும் ஒன்றிணைந்து நகரும் அதுபோதில் உன்னுள் ஞானோபதேசம் ஒலிக்கக் கேட்பாய். பேரானந்தம் பெருகக் காண்பாய் .
இந்தச் சின்னஞ்சிறு உலகில் இறுமாந்து திரியும் சுகத்தை அப்போது அடைவாய்.
யானை நடையின் சூட்சுமம் அப்போது விளங்கும்.
சரணாகதிதான் அதன் அங்குசம்!
பாரதியாரின் குலதெய்வம்!

கண்ணனை மாதாவாக, பிதாவாக, குருவாகவும் அறிந்த பாரதியார், வரிசையின் கடைசியாகத் தன் தெய்வத்தைக் காண முண்டுகிறார்.
“எங்கே எங்கே என் தெய்வம்…” எனத் தன் முதுகெலும்பெங்கும் ஏறி இறங்கித் தேடுகிறார்.
அங்கும்கூடக் கண்ண பெருமானையே காண்கிறார்.
“கண்ணம்மா, நீயே என் குலதெய்வம்” என்று ஆனந்தமாகக் கதறுகிறார்.
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென முறையிட்டபடியே ஓடோடி வந்து “நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா” என சாஷ்டாங்கமாக வீழ்ந்து சரணடைந்து புரள்கிறார்.
அந்தப் பாடலுக்கு அவர் தேர்ந்தெடுத்த ராகம் புன்னக வராளி.
புன்னக வராளி என்பது நாகத்துக்கு உண்டான ராகம்.
நாகம் என்று பாரதியார் அடையாளப்படுத்துவது குண்டலினியை என்று புரிந்துகொள்ள வேண்டும்.
குண்டலினி என்பது யோகத்தின் மூலம் – உச்சம்.
யோக சாஸ்திரத்தின் உச்ச தேவதையான குண்டலினியைக் கண்ணபெருமான் வடிவில் குலதெய்வமாகக் கண்டுகொண்டு சரணாகதியாகி நிறைந்து மறைந்தார் பாரதியார் என்னும் அந்த அகண்டப் பேரறிவாளர்.
பாரதியை மறப்போமோ?
இந்த நாட்டின் பெருங்கவியாக தாகூர் போற்றப்படுகிறார். நாமும் போற்றுவோம்.
ஆனால், அவருக்கு ஈடான, சொல்லப் போனால் அவருக்கும் மேலான படைப்பாற்றல் கொண்ட பாரதியாரை இந்த மண் மிக மோசமாக விட்டுக்கொடுத்துவிட்டதே…
தாகூர் அவர்களோ லண்டன் சர்வகலா சாலையில் பயின்ற பெரும் பணக்காரர். பாரதியாரோ ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்த ஏழை என்பதுதான் காரணமோ?
தாகூரும் பிராமணரே. வங்காள மண்ணின் மைந்தர்கள் சாதி மாச்சரியம் பார்க்காமல் அவரை உயர்த்திப் பிடித்தார்கள். கூடவே, பொருளாதார வசதியும் சேர அன்று அந்த நேருவின் கண்ணில் அவர் பட்டுவிட்டார்.
அன்றைய தமிழ்நாட்டு மேட்டுக்குடிகள் எல்லோரும் வட நாட்டு அரசியலாளர்களிடம் வலிந்தோடிச் சென்று “ஐயன்மீர் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். நீங்கள் தங்குவதற்கு எங்கள் பங்களாவைக்கூட எடுத்துக் கொள்ளுங்கள்…” என்று பல்லிளித்துக் கம்பளம் விரித்துக்கொண்டிருந்தனர்.
ஆனால், இங்கே தேச விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த பாரதியாரின் ஒருவேளை கஞ்சிக்குக்கூட வழி செய்து கொடுக்க மனமில்லாமல் ஜிம்கானா கிளப்பில் உணர்வின்றிக் கிடந்தனர்.
கடந்த காலத்தைத் தூற்றிப் பலனில்லை. இனியேனும் பாரதியாரை அறிவோம். இன்றைய இலக்கிய ஆர்வலர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
தயவுசெய்து பாரதியின் குயில் பாட்டு என்னும் அற்புதக் காவியத்தைப் படித்துப் பாருங்கள்.
குயில் பாட்டை எனது 19ஆம் வயதிலேயே ஓரளவு மனப்பாடம் செய்தவன் என்னும் முறையில் சொல்கிறேன்… மேல்நாட்டுக் காவியங்களில் காணக் கிடைக்காத ஏகாந்தச் சரக்கெல்லாம் அதில் கொட்டிக் கிடக்கின்றன.
காலப்போக்கில் பற்பல மேற்குலக இலக்கியங்களை என்னளவில் படித்து வியந்திருக்கிறேன். ஆனாலும், கடந்த நூற்றாண்டில் படைக்கப்பட்ட பாஞ்சாலி சபதத்துக்கு ஈடானதோர் காவியத்தை இன்னமும் நான் காணவில்லை.
காரணம், இந்த மண்ணிற்கே உண்டான அதன் ருசி.
பாரதியாரின் படைப்பில் தமிழ் வளத்தைக் கடந்து சமூகவியல் உள்ளது. அறிவியல் உள்ளது. தாய்மண் பற்றும் தேசியமும் உள்ளது. வாழ்வியல் குறித்த பெருஞ்செய்தி உள்ளது. அண்ட சராசரம் குறித்த விஞ்ஞானம் உள்ளது. மேலும், இந்த மண்ணுக்கே உரித்தான தத்துவ ஞான விசாரம் கொட்டிக் கிடக்கிறது.
உள்ளார்ந்து படிக்கப்படிக்க இன்னும் பலவும் இருக்கக் கூடும்.
கொண்டு கொண்டாடிப் பாருங்கள் பாரதியை. அவரது சந்தம் சிந்தையில் ஏறினால் சுந்தரமாகும் வாழ்க்கை.
வாழிய பாரதி!
ஓங்குக பாரதியின் தமிழ்த் தேசிய தாகம்!
