சென்னை திருவொற்றியூரில் 26 வயது இளைஞர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ், திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தன்னைப் படுகொலை செய்ய முயற்சிப்பதாகவும், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குடும்பத்துடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 15 ஆண்டுகளாக இந்த ஏரியாவில் வசித்து வருகிறோம். என் அம்மா கடன் வாங்கியதால், அதற்கு என்னை அழைத்து, சம்பந்தப்பட்டவர்கள் சில ரவுடிகளை வைத்து மிரட்டுகின்றனர். திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தோம். சென்னை கமிஷனர், துணை கமிஷனர், எஸ்பி அலுவலகத்திலும் புகார் கொடுத்திருந்தோம்.
இதில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பு, நாங்கள்தான் அவர்களைத் தாக்கியதாகப் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றம் சென்று வழக்கிலிருந்து தீர்வு கண்டேன்.
இதன் பிறகு திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் என்னை அழைத்து, ‘உங்களுக்குள் பகை இருக்கிறது. மாறி மாறி வெட்டிக் கொள்வீர்கள் எனத் தகவல் வருகிறது’ எனக் கூறினார். நான் அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, ‘நீ என்ன பெரிய ஆளா? கையை, காலை உடைத்து விடுவேன். உயிரோடு இருக்க மாட்டாய். உன்னைச் சுட்டு விடுவேன். வெட்டி திருச்செந்தூர் கடலில் கரைப்பேன். பொய் வழக்கு போட்டுக் கைது செய்வேன்’ என்று மிரட்டுகிறார்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறினேன். பதிலுக்கு ரவுடி ராதாகிருஷ்ணனிடம் என்னைப் பேசச் சொன்னார். ‘நீ முதலமைச்சரிடம் வேண்டுமானாலும் போய் புகார் சொல்லிக்கொள். உனக்காக வரும் வழக்கறிஞரால் என்ன செய்ய முடியும்? அவர்களால் நீதிமன்றத்தில் மட்டுமே பார்க்க முடியும். இது காவல் நிலையம். எனக்கு ஆகாத வழக்கறிஞரைக் கூட்டி வந்திருக்கிறாய்’ எனச் சொல்லி காவல் ஆய்வாளர் மிரட்டி என்னை அடித்தார். வெளியில் இருந்த போலீசை அழைத்து இவன் கை, காலை உடைத்து ரிமாண்ட் செய்யுங்கள். பொய் வழக்கு போடுங்கள் என்றார்.
இது ஜனநாயகமா? இதற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். என் அம்மா கைநீட்டி அவருக்காகப் பணம் வாங்கவில்லை. அடுத்தவர்களுக்கு வாங்கிக் கொடுத்ததால் நாங்கள் இந்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டோம். ரூபாய் 18 லட்சம் வாங்கியதாகக் கூறி, அதிக வட்டி வாங்குகிறார்கள். இதற்குத் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் துணை போகிறார்” எனக் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பிரதீப் ராஜ் நேற்று இரவு ஸ்கூட்டரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு பைக்கில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரது ஸ்கூட்டர் மீது மோதினர். இதில் நிலைதடுமாறி பிரதீப் ராஜ் கீழே விழுந்தார். அப்போது பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல் ஆய்வாளர் மீது புகார் அளித்த மறுநாளே அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
