சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைமை அலுவலகத்தில், தவெக தோழமைக் கட்சிகளின் கூட்டம் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று (செப்டம்பர் 9) நடைபெற்று முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிபெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்நிலையில்,காங்கிரஸ் , விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் பங்கேற்றுள்ளன; கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
இதற்கிடையே, கடந்த ஜூலை 1-ஆம் தேதி சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தவெக தோழமைக் கட்சிகளின் முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், விசிக, காங்கிரஸ், மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டணிக்கு ஒரு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பனையூர் அலுவலகத்தில் தவெக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று இரண்டாம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், தாரகை கத்பர்ட், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் பங்கேற்றனர். விசிக சார்பில் திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு, ரவிக்குமார், சிந்தனை செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோ மற்றும் ஐயுஎம்எல் (IUML) கட்சி சார்பில் காதர் மொய்தீன், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் இன்று ஒன்றரை மணி நேரம் வரை நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்து வர உள்ள இடைத்தேர்தல் அடுத்தடுத்து வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து விஜய் தலைமையிலான கூட்டணிக்கு மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
