டிஜிட்டல் திண்ணை: இடைத் தேர்தலில் போட்டி- எதிர்த்த நிர்வாகிகள்- ஸ்டாலின் கூட்டத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும், “களம் அழைக்கிறது கார்மேகா! கழகம் காக்க களமிறங்கிடு கார்மேகா!” என வசனங்களை வாசித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. வேற லெவல் பார்மில் இறங்கிட்டீங்க?

ADVERTISEMENT

இல்லைங்க ப்ரோ.. யூடிப்பில் கேட்டதுதான்.. காலமும் இப்ப அப்படித்தானே இருக்கிறது..

நாமதான் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க போகுதுன்னு முதல்ல சொன்னோம்.. அதன்படியே அக்டோபர் 6-ந் தேதி 2 தொகுதிக்கும் எலக்‌ஷன்; அக்டோபர் 9-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்னைக்கு தொடங்குது.. அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருந்த மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா ரெண்டு பேரும் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு தவெகவுக்கு தாவுனதால இடைத் தேர்தல் நடக்குது.. மத்த 5 தொகுதிகளோட இடைத் தேர்தலுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதிச்சுருக்கு..

2 தொகுதி இடைத் தேர்தல் அறிவிச்சதும் அதிமுகவில் விருப்ப மனு வாங்குறாங்க.. அதே கையோட பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்திச்சு, ஆதரவு கொடுங்கன்னு லெட்டர் கொடுத்தாங்க அதிமுகவின் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் டீம். அதேபோல புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகத்தையும் இந்த டீம் சந்திச்சது..

ADVERTISEMENT

ஒவ்வொரு கூட்டணி கட்சி தலைவர்களையா அதிமுக டீம் சந்திக்க, திமுக என்ன முடிவு எடுக்கப் போகுதுன்னு எல்லாரும் எதிர்பார்ப்பா இருந்தாங்க.. திமுக இந்த இடைத் தேர்தலை புறக்கணிச்சுடும்ன்னு கூட சிலர் சொல்லிகிட்டு இருந்தாங்க..

இப்படி எல்லா கண்களும் திமுகவையே எதிர்பார்த்துகிட்டு இருந்த நேரத்துல டக்குன்னு தாராபுரத்தில் சுகன்யா, மதுராந்தகத்தில் பரந்தாமன் வேட்பாளர்களுன்னு ஸ்டாலின் அறிவிச்சுட்டார்..

இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமான சர்க்கிளில் பேசுனப்ப, “சட்டசபை தேர்தல் முடிஞ்ச பின்னாடி ஏராளமான கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் பலரும் ஸ்டாலினை சந்திச்சுகிட்டு இருக்காங்க.. இவங்க எல்லாமே, “எங்களைப் பொறுத்தவரைக்கும் திமுகதான் எலக்‌ஷன்ல ஜெயிக்கும்னு நினைச்சோம்.. ஏன்னா மக்களும் அப்படித்தான் இருந்தாங்க.. அதே நேரத்துல வீட்டுல இருக்கிற பிள்ளைக பேச்சை கேட்டுட்டுவிஜய்க்கும் ஓட்டுப் போடுவோமேன்னுதான் ஓட்டு போட்டாங்க.. அது அவங்களை ஜெயிக்கவே வெச்சிடுச்சு.. ஆனா இன்னைக்கும் எலக்‌ஷன் நடந்தா நிச்சயம் நீங்கதான் ஜெயிப்பீங்க.. திமுகதான் ஜெயிக்கும்”-னு பலரும் சொன்னாங்க.. இதை சீனியர் லீடர்ஸ்கிட்டேயும் ஸ்டாலின் ஷேர் செஞ்சு, “மக்களோட ஒப்பீனியன் இப்படிதான் இருக்குது”ன்னு சொல்லிகிட்டு இருந்தார்.

அதே நேரத்துல இந்த 2 தொகுதி இடைத்தேர்தலைப் பொறுத்தவரைக்கும், “போட்டியிடலாமா? இல்லையா”ன்னு ஸ்டாலின் ரொம்பவே திறந்த மனசுடன்தான் இருந்தார்..

நேத்து நைட்டு கூட சில பத்திரிகையாளர்கள்கிட்ட ஸ்டாலின் ஆலோசனை நடத்துனாரு.. அப்ப, “திமுக இந்த தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடனும்.. அதுதான் கட்சிக்கும் நல்லது”ன்னு அந்த பத்திரிகையாளர்கள் சொன்னாங்க..

இதுக்கு அப்புறமா இன்னைக்கு ஸ்டாலின் வீட்டுல ஆலோசனை கூட்டம் நடந்துச்சு.. இதுல துரைமுருகன், உதயநிதி, கே.என்.நேரு, கனிமொழி, எ.வ.வேலு காஞ்சி மா.செ.க்கள் தா.மோ. அன்பரசன், சுந்தர் எல்லாம் கலந்துகிட்டாங்க..

இந்த டிஸ்கஷனில் துரைமுருகன் பேசும் போது, “நாம கண்டிப்பாக இந்த எலக்‌ஷன்ல போட்டி போடனும்.. அதுதான் சரியா இருக்கும்”ன்னு சொன்னார்.

ஆனால், “அதிமுக எம்.எல்.ஏ.க்களை தவெக குதிரை பேரம் நடத்தி விலைக்கு வாங்குனதால திணிக்கப்பட்டதுதானே இந்த தேர்தல்.. இந்த தேர்தலுக்கு நாம ஏன் முக்கியத்துவம் கொடுக்கனும்? நாம போட்டி போட்டாமலேயே இருந்துடுவோம்”ன்னு ஒரு தரப்பு பதில் சொன்னது.

இந்த மாதிரி டிஸ்கஷன் நடந்தாலும், பெரும்பாலானோர், “நாம பெரிய கட்சி.. நாம போட்டியிடாம இருக்கக் கூடாது. நாம போட்டி போடனும்.. வேட்பாளர்களை அறிவிச்சு களத்துல இறங்கி வேலை செய்யனும் அப்படிங்கிறதுதான் தொண்டர்களோட எதிர்பார்ப்பு.. நாம போட்டியிடாமல் போனா நல்லா இருக்காது” அப்படிங்கிற கருத்தை முன்வைச்சாங்க..

அதோட, “நாம தேர்தலில் போட்டியிடாம இருந்தால், “திமுக பயந்துகிட்டு ஒதுங்கிடுச்சு”ன்னு தவெக பிரசாரம் செய்யும் அப்படின்னும் ஒரு தரப்பு ரொம்பவே அழுத்தமா சொன்னது.

அதேநேரத்துல, “எலக்‌ஷன்ல தாராபுரத்துல 2-வது இடத்துக்கு வந்தோம்; மதுராந்தகத்துல 3-வது இடத்துக்கு வந்தோம்.. இப்ப போட்டியிட்டு தாராபுரத்துல 3-வது இடத்துக்கு போயிட்டா நல்லா இருக்காதே” அப்படிங்கிற எதிர் கருத்தும் முன்வைச்சாங்க..

இதுக்கு, “அந்த மாதிரி நிச்சயம் போகாது.. நாம முழு வீச்சுல இறங்கி வேலை செஞ்சா போதும்.. நல்ல ரிசல்ட் நிச்சயம் கிடைக்கும்”ன்னு பதில் வந்தது.

அதே மாதிரி, நாமும் அதிமுகவும் பிரிஞ்சு நிற்கிறதால தவெக ஈஸியா ஜெயிக்காதா? ”இதோ பாருங்க.. 2 பெரும் திராவிட கட்சிகளை தோற்கடிச்சுட்டோம்” அப்படின்னு தவெக பேசுமேன்னும் ஒரு கேள்வி வந்தது.

அதுக்கு, “அப்படி எல்லாம் நடக்காது.. நாம ஜெயிப்போம்.. இல்லைன்னா அதிமுக ஜெயிக்கும்.. அதுதான் நடக்கும்.. இந்த முறை தவெக 2 தொகுதிகளிலும் ஜெயிக்காதுங்க தலைவரே”ன்னும் சொன்னாங்க..

இந்த டிஸ்கஷன் எல்லாம் முடிஞ்சபிறகு, “சரி இடைத் தேர்தலில் போட்டி போடலாம்”ன்னு ஸ்டாலின் முடிவு செஞ்சாரு.

அப்ப யாரு வேட்பாளர் அப்படின்னு கேள்வி வந்தது.. இந்த டிஸ்கஷனில், “ எழும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் பேரு வேகமாக சொல்லப்பட்டது.. அவரு இப்ப டிஜிட்டல் மீடியாவில ரொம்ப பாப்புலரா இருக்கிறார்.. தொண்டர்கள் மத்தியிலும் நல்ல பேரு இருக்குது.. எலக்‌ஷனில எழும்பூரில போட்டி போட மறுபடியும் நாம அவருக்கு வாய்ப்பு கொடுக்கலை. .அதனால மதுராந்தகத்துல அவர் போட்டியிடட்டும்”ன்னு சொல்லப்பட்டது.

தாராபுரத்துல போட்டியிடுவதற்கு, வழக்கறிஞர் சுகன்யா செலக்ட் செய்யப்பட்டாங்க.. அவங்க ஒன்றிய அளவில் அணி செயலாளராக இருக்கிறாங்க.. அவங்க பீல்ட் ஒர்க் பண்ணுவாங்கன்னு சொன்னாங்க.. இதுக்கு அப்புறம்தான் பரந்தாமன், சுகன்யா 2 பேரையும் வேட்பாளர்களாக அறிவிச்சாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ..

இன்னொரு தகவலையும் சொல்றேன் ப்ரோ.. தாராபுரத்துல கொமதேகவுக்கு கணிசமான செல்வாக்கு இருக்கு.. கொமதேக தங்களோட இருக்கிறது பலம்னு திமுக நினைக்குது..

மதுராந்தகம் தொகுதியில பாமகவுக்கு கணிசமான வாக்குகள் இருக்கிறது.. அதனால ’கூட்டணி’ங்கிற கணக்குல பாமகவோட வாக்குகளை பெறுவதற்கான முயற்சியில அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ரொம்பவே தீவிரமா இருக்கிறார்..

இன்னொரு பக்கம், திமுக கூட்டணியில இருக்கிற எல்லா கட்சிகளையும் சேர்த்துகிட்ட தவெக, அதிமுக-பாஜக அணியில இருக்கிற பாமகவிடமும் இப்ப தீவிரமா பேசிகிட்டு இருக்கிறதாம்.. அதனால பாமகவின் முடிவு என்னான்னு ரொம்பவே எதிர்பார்ப்பா இருக்குதுங்க ப்ரோன்னு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share