“இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?” – மதுரை மாணவர் மரணத்தில் சீறும் கனிமொழி எம்.பி!

Published On:

| By Pandeeswari Gurusamy

kanimozhi

மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11-ஆம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், “தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன?” என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரை கூடல் நகர், வாடாகோவில் தெருவில் வசித்து வரும் யோகலட்சுமி – கருப்பசாமி தம்பதியின் மகன் தமிழ்ச்செல்வன். இவர் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். தந்தை வெளியூரில் பணிபுரிந்து வந்த நிலையில், யோகலட்சுமி, தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது சகோதரி ஆகிய மூவரும் வீட்டில் வசித்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், கிரிக்கெட் விளையாடச் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்ற தமிழ்ச்செல்வன் வீடு திரும்பாததால், கூடல் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்த தேடுதல் வேட்டையில், ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே உள்ள அப்துல் கலாம் தெரு முட்புதரில் காயங்களுடன் தமிழ்ச்செல்வன் சடலமாக மீட்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், மாணவன் தமிழ்ச்செல்வன் வேறு சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருடன் நட்பு ரீதியாகப் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அம்மாணவியின் தந்தை, சில தினங்களுக்கு முன் தமிழ்ச்செல்வனைச் சந்தித்து மாணவியிடம் பேசக் கூடாது என்று கண்டித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, முட்புதரில் மாணவன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில், “மதுரை ஆனையூர் அருகே காணாமல் போன 11-ஆம் வகுப்பு மாணவன் கழிவுநீர்க் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தவெக அரசின் அலட்சியப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என்ற கேள்வி எழுகிறது.

ADVERTISEMENT

மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share