இதுவே மைனாரிட்டி ஆட்சி… வேட்பாளராக அறிவித்த பின் பரந்தாமன் பேட்டி!

Published On:

| By Kavi

இடைத்தேர்தலில் திமுக 100 சதவிகிதம் வெற்றி பெறும் என்று திமுக வேட்பாளரும் வழக்கறிஞருமான பரந்தாமன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

இதை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதியில் திமுக வழக்கறிஞர் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யாவும் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைமை அறிவித்தது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “திமுகவுக்கு 100% வெற்றி வாய்ப்பு இருக்கிறது. முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர், இளைஞரணி செயலாளர், பொதுச் செயலாளர் அனைவரும் என்னை மதுராந்தகத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிற நான், இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி வெற்றி பெறுவேன். அந்த வெற்றிகனியை தலைவரிடத்தில் சமர்ப்பிப்பேன்.

திமுகவினர் களத்தில் வலிமையாக இருக்கக்கூடியவர்கள். கடந்த மூன்று நாட்களாக இந்த அரசு எப்படிப்பட்ட அவல நிலையை மேற்கொண்டிருக்கிறது என்று தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியும்.

சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் என்று சொல்லி வருகிறார்கள்.

அரசின் திட்டங்கள் சென்றடையவில்லை, விலைவாசி அதிகமாக உயர்ந்திருக்கிறது, மின்கட்டணம் அதிகமாக உயர்ந்திருக்கிறது, அரசினுடைய சமூக நலத்திட்டங்கள் எல்லாம் எந்த தனிநபரையையும் சென்றடையவில்லை.

முதியோர் உதவித்தொகை பலருக்கு கிடைக்கவில்லை, கைம்பெண்கள் உதவித்தொகை பலருக்கு கிடைக்கவில்லை. இதுபோன்ற எண்ணற்ற பிரச்சினைகள் இருக்கிறது. இவற்றையெல்லாம் நாங்கள் வீடு வீடாகச் சென்று எடுத்துச் சொல்லி வெற்றிக் கனியைப் பறிப்போம்.

இந்த அக்டோபர் முதல் மதுராந்தகம், தாராபுரம் திமுக தொகுதிகளாக மாறும்” என்று கூறினார்.

பொதுவாக இடைத்தேர்தல் வந்தால் ஆளும் கட்சிக்குதான் கூடுதல் பலம் இருக்கும். இதை நீங்கள் சவாலாக பார்க்கிறீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு…

இதுவே மைனாரிட்டி ஆட்சி. அவர்களுக்கு என்ன பெரிய பலம் இருக்கப் போகிறது என்று குறிப்பிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share