முதல்வர் விஜய்யின் உடல் மொழி மனித மாண்புக்கு எதிரானது – திருமாவளவன்

Published On:

| By Pandeeswari Gurusamy

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் போது தமிழக முதல்வரின் ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விசக சுட்டிக்காட்டி உள்ளது.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமானவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காவல்துறை மானியத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் மேனாள் முதல்வருமான தளபதி ஸ்டாலின் அவர்களைக் கேலி செய்யும் வகையில் அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் ‘அது உள்நோக்கம் கொண்டதல்ல’ என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறோம்.

ADVERTISEMENT

எந்தவொரு சூழலிலும் ஒருவரின் ‘தன்மதிப்பைக்’ குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு; தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன்மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும்கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதில்லை.

அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்ததாகும். எனவே, மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர் இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.

ADVERTISEMENT

முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கூறிய கருத்து வரலாற்றுப் பிழையாகும்.

மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்றாகும். அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்குள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்குரியதாகும். மாண்புமிகு அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் 2 தினங்களுக்கு பின் இன்று அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விசிக கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share