VIDEO:’தினுசா’ ராவண லீலா கொண்டாடிய காங்கிரஸ்.. என்ன செஞ்சாங்க தெரியுமா?

Published On:

| By Mathi

Congress-Ravan Leela

தசரா பண்டிகையையொட்டி வட இந்தியாவில் ராவணன் உருவபொம்மைகளை எரிப்பது வழக்கம். ஆனால் டெல்லி உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் கடந்த 2 நாட்களாக வித்தியாசமான முறையில் ராவண லீலா நிகழ்ச்சிகளை நடத்தி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

டெல்லி ரெய்சினா சாலையில் உள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று (அக்டோபர் 19-ந் தேதி) ‘Vote Chori Ki Raasleela’ என்ற பெயரில் ராவண லீலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ், இந்த நிகழ்ச்சியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் முகம் பொருத்தப்பட்ட ராவணன் உருவபொம்மையை எரித்தது.

அத்துடன் தெரு நாடகமும் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும், வாக்குத் திருட்டு நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியும் பதாகைகளை ஏந்தி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் முழக்கங்களை எழுப்பினர்.

ADVERTISEMENT

இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய் பானு சிப், தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

‘தலை’களின் முகங்களுடன் ராவணன் உருவபொம்மை

இதனைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 20-ந் தேதி) டெல்லியில் காங்கிரஸின் மாணவர் அமைப்பான தேசிய மாணவர் சங்கம் (NSUI) சார்பில் மற்றொரு ராவண லீலா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோரின் முகங்கள் இடம்பெற்ற உருவபொம்மை எரிக்கப்பட்டது.

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு, வினாத்தாள் கசிவு, வேலையின்மை, மதவாதம், தேசிய வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதேபோல மேற்கு வங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ‘வித்தியாசமாக’ ராவண லீலா நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர்.

இதற்கிடையே இந்திய இளைஞர் காங்கிரஸ் அக்டோபர் 18-ந் தேதி ‘Digital Ravan Dahan’ என்ற இணையவழிப் பிரச்சாரத்தையும் தொடங்கியது. ‘இந்தியாவின் ராவணனுடைய 10 தலைகள் யார்?’ என்ற கேள்வியை முன்வைத்து பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறும் வகையில் இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்று (அக்டோபர் 20-ந் தேதி) இரவு 7.30 மணிக்கு இணையவழியில் ராவண தகன நிகழ்ச்சியை நடத்தவும் இளைஞர் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share