மோடி அரசுக்கு ‘அலாரம்’? டெல்லி அரசியலில் அனல் பறக்கும் ‘Regime Change’ விவாதம்!

Published On:

| By Mathi

Regime Change- Delhi

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுவே, ‘Regime Change’ எனப்படும் ஆட்சி மாற்றம் குறித்த விவாதம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்த் பூஷண் பேசியது என்ன?

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 16-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT

இது தொடர்பாக பிரசாந்த் பூஷண் கூறுகையில், இந்தியாவில் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் போராடுகிறோம். இந்தப் போராட்டங்களை அரசு ஒடுக்க முயன்றால், ஆட்சி மாற்றத்துக்கான போராட்டம் மேலும் தீவிரமடையும்.

ஆட்சி மாற்றத்தை விரும்புவதில் என்ன தவறு இருக்கிறது? பாஜகவும் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றத்துக்கான போராட்டங்களை நடத்தியுள்ளது. ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கோருவது மக்களின் உரிமை என்றார்.

ADVERTISEMENT

பிரசாந்த் பூஷணின் இந்தக் கருத்துதான் இப்போது டெல்லி அரசியலில் ‘பிரளயத்தை’ ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் அக்டோபர் 17-ந் தேதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைக் கேட்டதும் பாஜக ஏன் இவ்வளவு கோபப்படுகிறது? ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் என்பது இயல்பான ஒன்றுதான்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா மாறுபட்ட கருத்தை முன்வைத்தார். அக்டோபர் 18-ந் தேதி சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மா, ஜனநாயகத்தில் அரசுகள் தேர்தல் மூலமாகத்தான் மாற்றப்படுகின்றன. ஆட்சி மாற்றம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது. அந்தச் சொல்லுக்கு அரசை மாற்றுவது என்பதைத் தாண்டி அரசியலமைப்பு சார்ந்த பொருள் இருக்கிறது என்றார்.

மேலும், பொறுப்பற்ற முறையில் ஆட்சி மாற்றம் குறித்துப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு, சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்வதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேபோல காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அக்டோபர் 19-ந் தேதி பேசுகையில், “இந்தியா, வங்கதேசமோ பிரான்ஸோ அல்ல. வன்முறை மூலம் ஆட்சியை மாற்றுவது எங்கள் நோக்கமல்ல. அமைதியான போராட்டங்களிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தலிலும்தான் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.

பாஜக கொந்தளிப்பு

பிரசாந்த் பூஷணின் ஆட்சி மாற்றக் கருத்துக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்டோபர் 16-ந் தேதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வங்கதேசத்தைப் போல இந்தியாவிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், இளைஞர்களைப் பயன்படுத்தி அரசியல் குழப்பத்தை உருவாக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

பாஜக தலைவர் நிதின் நபின், இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டுமானால் அது தேர்தல் மூலமாகத்தான் நடைபெற வேண்டும். போராட்டங்கள் மூலம் ஆட்சியை மாற்ற முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அக்டோபர் 17-ந் தேதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகப் பேசுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியா ஒன்றும் வங்கதேசம் அல்ல. இந்திய இளைஞர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் நாட்டை அழிக்க மாட்டார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவார்கள்” என்று தெரிவித்தார்.

இன்று நடந்தது என்ன?

ஆட்சி மாற்றம் குறித்த விவாதம் தேசிய அரசியலில் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று (அக்டோபர் 20-ந் தேதி) நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் விஜயதசமி விழாவில் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

பிரான்ஸ், அல்பேனியா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களைக் குறிப்பிட்ட மோகன் பகவத், மேற்கத்திய நாடுகளிலிருந்து உருவாகியுள்ள ஒரு சக்தி, உலக நாடுகளின் அரசியல் அமைப்புகளையும் பண்பாட்டு விழுமியங்களையும் சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், ”ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நாட்டின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று கூறுகின்றனர். ஆனால் கடந்த காலங்களிலும் அப்படி நடக்கவில்லை. இப்போதும் நடக்கவில்லை.

இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சக்திகள், நாட்டையும் இந்துக்களையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் பலவீனப்படுத்தத் திட்டமிடுகின்றன. அதிகார ஆசை கொண்ட சில அரசியல் தலைவர்களும் இந்த முயற்சிகளுக்குத் துணைபோகின்றனர்.

ஜனநாயகத்தில் பிரச்சினைகள் இருந்தால் போராட்டங்கள் நடைபெறுவது இயல்புதான். ஆனால் போராட்டங்களின் நோக்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக இருக்க வேண்டும். நாட்டில் பிரிவினையையும் பகைமையையும் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது என்றார் மோகன் பகவத்.

இந்த நிலையில், கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (அக்டோபர் 20-ந் தேதி) பேசுகையில், வலிமையான இந்தியாவை விரும்பாத சக்திகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டினார். வன்முறையையும் அராஜகத்தையும் தூண்டும் முயற்சிகளை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பற்ற வைத்த சஞ்சய் ராவத்

இந்த விவாதத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ராவத்தும் இணைந்துள்ளார். இன்று (அக்டோபர் 20-ந் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “ராகுல் காந்தி வியட்நாமிலிருந்து திரும்பிய பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஆட்சி மாற்றம் ஏற்படும். பொறுத்திருந்து பாருங்கள். மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியை மாற்றி நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் அதிகாரத்துக்கு வந்த பிறகும் நாட்டின் நிலைமை மாறவில்லை. மாறாக மோசமடைந்துள்ளது என்றும் சஞ்சய் ராவத் விமர்சித்தார்.

சமூக வலைதளங்களிலும் ‘Regime Change’ குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share