ஆயுத பூஜைக்காக கோவை பெரியார் அறிவுலகத்துக்கு லீவா? பெரியாரிய உணர்வாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை பெரியார் அறிவுலகம் அரசு விடுமுறை நாட்களில் மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதற்கு சுப. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த அக்டோபர் 16ம்தேதி முதல்வர் விஜய் பெரியார் அறிவுலகத்தை திறந்து வைத்தார். இந்நிலையில் பெரியார் அறிவுலகம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி அரசு விடுமுறை என்பதால் நேற்றும் இன்றும் மூடப்பட்டுள்ளது. இதனை அறியாத பல்வேறு பொதுமக்கள் பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட வந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் பதிவில், “ஆயுத பூசைக்கு பெரியார் அறிவுலகத்திற்கே ‘லீவு விட்ட’ அறிவார்ந்த ஆட்சி இன்றைய TVK ஆட்சி!

பேஷ்! பேஷ்! ஆனால், அறிவாலயத்துக் கலைஞர் திறந்து வைத்த அண்ணா நூற்றாண்டு நூலகம் இன்றும் திறந்திருக்கிறது! அது சரி அறிவுக்கு விடுமுறை விட்டிருக்கும் ஆட்சியில் இது அதிசயம் அல்லவே” என தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், எழுத்தாளர் கவுதமன் உள்ளிட்ட அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பெரியார் அறிவுலகத்திற்கு வருகை புரிந்தனர். அப்போது, அரசு விடுமுறை நாட்களில் பெரியார் அறிவுலகம் மூடப்பட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். அதேசமயம், பெரியார் அறிவுலகத்தை அமைக்கக் காரணமாக இருந்த திமுக அரசையும், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் வாழ்த்தி முழக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப. வீரபாண்டியன், “பெரியார் அறிவுலகத்தை யார் திறந்து வைத்தார்கள் என்பதைவிட, யார் இதனை உருவாக்கினார்கள் என்பதுதான் வரலாற்றில் இடம்பெற வேண்டிய குறிப்பு. இந்த அறிவுலகத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் நண்பர்களுடன் வந்தேன். குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தேன். விடுமுறை நாள் என்பதால் நீண்ட நேரம் இங்கு பார்வையிடலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், நவராத்திரி, விஜயதசமி ஆகியவற்றைக் காரணம் காட்டி அறிவுலகம் மூடப்பட்டிருப்பது, இந்த அரசு எப்படிப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

ADVERTISEMENT

நூலகங்கள் விடுமுறை நாட்களில்தான் திறக்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைவரும் வந்து படிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும். அனைவரும் படித்துவிடுவார்களோ என்று அரசு அச்சப்படுகிறதா என்று தெரியவில்லை. இந்த நிகழ்வு அறிவுலகத்திற்கு எதிரானதாக உள்ளது. மூடநம்பிக்கையின் அடிப்படையில் அறிவுலகம் மூடப்பட்டிருப்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன்.

விடுமுறை நாட்களிலும் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பயன்படக்கூடிய இந்த அறிவுலகத்திற்குத் தடையாக இருக்க வேண்டாம்” என்றார்.

பெரியார் அறிவுலகம் நூலகத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அரசு விடுமுறை நாட்களில் மூடப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளதாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த சுப. வீரபாண்டியன், “இதற்கு விளக்கம் தேவையில்லை. மக்களுக்கு எது பயன்படும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கும் பொதுமக்களுக்கும் எது பயன்பட வேண்டும் என்பதுதான் முதன்மையானது. எப்படி வேண்டுமானாலும் விளக்கம் கூறலாம். ஆனால், விளக்கத்திற்காக அல்ல மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக விடுமுறை நாட்களிலும் பெரியார் அறிவுலகம் திறந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறேன்” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share