தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் 117 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளிடம் நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளை பெற்று தருவதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த பதிவு பெறாத சங்கத்தின் தலைவரான பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்க பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துக்குமார் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய குற்றப்பிரிவு போலீசார், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி மோசடி செய்ததாக இதுவரை 117 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த மனு மீது பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவல்துறை பதிலளிக்க அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை நாளை செப்டம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
