மீண்டும் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்! இந்து சமய அறநிலைய துறை தனியாக பிரிப்பு!

Published On:

| By Mathi

27 IAS officers transferred in Tamil Nadu

27 IAS Officers Transferred: தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள், ஆணையர்கள், இயக்குநர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். விருதுநகர், பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 27 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இந்து சமய மற்றும் அறநிலைய துறையை தனித் துறையாக உருவாக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

3 மாவட்ட ஆட்சியர்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஷரண்யா அரி ஐஏஎஸ், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். விருதுநகர் ஆட்சியராக இருந்த டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா மாற்றப்பட்டுள்ளார்.

பொன்னேரி கோட்ட சார் ஆட்சியராக இருந்த எப். அப்துல் ராசிக் ஐஏஎஸ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

செங்கல்பட்டு கோட்ட சார் ஆட்சியராக இருந்த வி. நல்லசிவன் ஐஏஎஸ், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி. ரவிக்குமார் ஐஏஎஸ், வேளாண்மை – உழவர் நலத்துறை இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

உள்துறை கூடுதல் செயலாளராக டி. மோகன்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக இருந்த டி. மோகன் ஐஏஎஸ், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஜே. ஆன் மேரி ஸ்வர்ணா விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டி. மோகனுக்குப் பதிலாக சுற்றுலாத் துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராக இருந்த டாக்டர் வி.பி. ஜெயசீலன் ஐஏஎஸ், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித் துறையில் 2 முக்கிய மாற்றம்

இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ், பள்ளிக்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக (சுகாதாரம்) இருந்த ஸ்ரேயா பி. சிங் ஐஏஎஸ், பள்ளிக்கல்வித் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத் துறை இயக்குநராக ராஜா கோபால் சுங்கரா

நிதித்துறை இணைச் செயலாளராக இருந்த ராஜா கோபால் சுங்கரா ஐஏஎஸ், சுற்றுலாத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் அவர் கவனிப்பார்.

தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளராகவும், ஆர். லில்லி ஐஏஎஸ், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதித் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த பி. சந்திர மோகன் ஐஏஎஸ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக, கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

சரவண வேல்ராஜ் ஐஏஎஸ், அச்சு மற்றும் எழுதுபொருள் துறை ஆணையராகவும், அஜய் யாதவ் ஐஏஎஸ், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஸ். சிவராசு ஐஏஎஸ், பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் (ஆவின்) நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் அவர் கவனிப்பார்.

சேலம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக இருந்த எஸ். சிவானந்தம் ஐஏஎஸ், நிதித்துறை துணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த என். முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்தின் (TANSI) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதித் துறை செயலாளராக இருந்த டி.என். வெங்கடேஷ் ஐஏஎஸ், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (TUFIDCO) நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கே.எஸ். கந்தசாமி ஐஏஎஸ், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் (TAMIN) நிர்வாக இயக்குநராகவும், கவிதா ராமு ஐஏஎஸ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டாக்டர் கே. செந்தில் ராஜ் ஐஏஎஸ், தாட்கோ நிறுவன நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் பொறுப்பையும் அவர் தொடர்ந்து கவனிப்பார்.

சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரியத்திலும் மாற்றம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா ஐஏஎஸ், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை வணிக வரிகள் துறையின் இணை ஆணையராக (மாநில வரி) இருந்த தாக்கரே சுபம் ஞானதேவராவ் ஐஏஎஸ், பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக (சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக உதகமண்டலம் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக இருந்த கே. சங்கீதா ஐஏஎஸ், கோவை வணிக வரிகள் துறை இணை ஆணையராக (மாநில வரி) நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி, வேலூர் மாநகராட்சிகளிலும் மாற்றம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக இருந்த வீர் பிரதாப் சிங் ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் முன்னேற்றக் கழகத்தின் (SIPCOT) செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் திருச்சி மண்டல கூடுதல் ஆணையராக இருந்த என். பொன்மணி ஐஏஎஸ், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SIPCOT செயல் இயக்குநராக இருந்த ஏ. கேத்தரின் சரண்யா ஐஏஎஸ், வேலூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை இனி தனி துறை

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் “இந்து சமய மற்றும் அறநிலையத்துறை” என்ற பெயரில் புதிய தனித் துறையை உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான G.O.(Ms.) No.561, நாள் 08.09.2026 அரசாணையை பொதுத்துறை (சிறப்பு-A) வெளியிட்டுள்ளது.

இதன்படி இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆணையரகம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துறையின் செயலாளர் பொறுப்பு தற்போது தனியாக புதிய அதிகாரிக்கு வழங்கப்படவில்லை. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக உள்ள வி. ராஜாராமன் ஐஏஎஸ், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை செயலாளர் பதவியையும் முழு கூடுதல் பொறுப்பாக (Full Additional Charge) கவனிப்பார். மறு உத்தரவு வரும் வரை அவர் இந்தப் பொறுப்பை வகிப்பார் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வணிக வரிகள், பதிவுத்துறை மற்றும் சமய அறநிலையங்கள் துறை செயலாளராக ஜெ. குமரகுருபரன் ஐஏஎஸ் இருந்து வந்தார். தற்போது இந்து சமய மற்றும் அறநிலையத்துறை தனித் துறையாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் செயலாளர் பொறுப்பு வி. ராஜாராமன் ஐஏஎஸுக்கு முழு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share