மெட்ரோ ரயிலில் ‘Girlfriend’ விளம்பரப் பலகை : எப்படி அனுமதித்தீர்கள்? எம்.பி.க்கள் கேள்வி!

Published On:

| By Kavi

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்ட விளம்பரத்துக்கு திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். இதில் மெட்ரோ நிர்வாகம் ரயில்கள், ரயில் நிலையங்களில் விளம்பரங்களுக்கு அனுமதித்து வருவாய் ஈட்டுகிறது. 

ADVERTISEMENT

இந்தநிலையில்  ’Girlfriend may give 0% interest, but our FD gives 14.40%’  என்று குறிப்பிட்டு  thecos வங்கியின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. 

அதாவது, “உங்கள் பெண் தோழி உங்கள் மீது பூஜ்ஜியம் சதவீத (0%) ஆர்வத்தையே காட்டலாம். ஆனால் எங்கள் நிலையான வைப்பு நிதி (FD) உங்களுக்கு 14.40% வட்டி (Interest) தரும்” என்ற இரட்டை அர்த்தச் சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

”மெட்ரோ ரயில் நிர்வாகம் இத்தகைய விளம்பரத்தை எப்படி அனுமதித்தது என்பது கேள்விக்குரியது. இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றுமாறும், இதனை காட்சிப்படுத்த அனுமதிக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்,  ”சென்னை மெட்ரோ இரயிலுக்குள் இடம்பெற்றுள்ள ஒரு விளம்பரம் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்களை ஒரு பொருளாகச் சித்தரிக்கும் வகையிலும் குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

பொது இடங்களில் பெண்களின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு விளம்பரங்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

இத்தகைய விளம்பரத்தை சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் எவ்வாறு அனுமதித்தது என்பது கேள்விக்குரியது. இந்த விளம்பரத்தை உடனடியாக அகற்றி, இதுபோன்ற விளம்பரங்கள் இனி இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share