தமிழ்நாட்டில் வீட்டு மின் நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் உயர்வோ அல்லது குளறுபடிகளோ ஏற்படுவதைத் தடுக்க, மின் கட்டண வசூலைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து நேரில் மறுசரிபார்ப்பு செய்யும் புதிய நடைமுறையைத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அமல்படுத்தியுள்ளது
தமிழகத்தில் வீட்டு மின் இணைப்பைப் பொறுத்தவரை இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்தது. முதல்வர் விஜய் முதல்வராக பதவியேற்ற உடன் இரண்டு மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்த நடைமுறை கடந்த மே மாதம் பத்தாம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில், முதல்வர் விஜய் ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு இடங்களில் மின்தடை என்பது பூதாகரமான விவகாரமாகியது. இரவு நேரங்களில் மின்சாரம் தடைசெய்யப்பட்டதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயம், பல்வேறு இடங்களில் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்ட நிலையிலும், கடந்த ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலவச மின்சார சலுகை 200 யூனிட்டாக உயர்த்தப்பட்டிருந்த போதிலும், முந்தைய மாதங்களை விட அதிக அளவில் கட்டணம் வந்துள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சில இடங்களில் வீட்டு வாடகையை விட மின்கட்டணம் அதிகமாக வந்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. சென்னை தண்டையார்பேட்டையில் ஆளில்லாத வீடுகளுக்கும் மின்சாரக் கட்டணம் வந்துள்ளதாகப் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், வழக்கமான கட்டணத்தை விட இரண்டு முதல் மூன்று மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளதாகவும், இதில் குளறுபடி இருப்பதாகவும் பல தரப்பினரும் குற்றம் சாட்டினர். இதனைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசை நோக்கி கடும் விமர்சனங்களை முன்வைத்தன. சில பகுதிகளில் களப்பணியாளர்கள் மீட்டர் ரீடிங் எடுப்பதில் ஏற்பட்ட காலதாமதம், முந்தைய கணக்கீடுகளில் ஏற்பட்ட வேறுபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் சிலருக்கு அதிக கட்டணம் வந்திருக்கலாம் என்று மின்சார வாரியம் தரப்பில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், புதிய கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகளை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழகக் கணக்குப் பிரிவு சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்படும் வீட்டு மின் நுகர்வோரின் இணைப்புகள் தனியாகக் கணக்கிடப்படும். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத மின் பயன்பாட்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாத மின் கட்டணம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்திருந்தால், அந்த கட்டணத்தைச் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு பட்டியலிடப்படும் இணைப்புகளுக்கு அதிகாரிகள் நேரடியாக மறு சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும்.
மின் கட்டணம் அதிகரித்துள்ள தொகையின் அடிப்படையில் மறு சரிபார்ப்பு பணிகள் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரூபாய் 1000 வரை அதிகரித்திருந்தால் மின் ஆய்வாளர் அல்லது வருவாய் மேற்பார்வையாளர், ரூபாய் 1001 முதல் 2000 வரை அதிகரித்திருந்தால் வருவாய் பிரிவு உதவி கணக்கு அலுவலர், 2001-க்கு மேல் 5000 வரை அதிகரித்து இருந்தால் உதவி கருவூல அலுவலர், 5001 முதல் 10000 வரை அதிகரித்து இருந்தால் உதவி கணக்கு அலுவலர், ரூபாய் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரித்து இருந்தால் உதவி செயற்பொறியாளர் ஆய்வு செய்வார்கள்.
இதில் மறு சரிபார்ப்பின் போது தவறான மீட்டர் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதே நாளிலோ அல்லது அடுத்த வேலை நாளிலோ மறு மதிப்பீடு செய்ய வேண்டும். மீட்டர் ரீடிங் சரியாக இருந்தால் அதன் அடிப்படையில் மின் கட்டணம் தானாக உருவாக்கப்படும். நுகர்வோர் கட்டணத்தை ஏற்க மறுத்தால் வழக்கமான நடைமுறையின்படி மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை இருந்தால் அடுத்த மின்கட்டணத்தில் ஈடு செய்ய வேண்டும். செல்போன் செயலி முறையில் தானாகப் பதிவு செய்யப்பட்ட மீட்டர் ரீடிங்குகளுக்கு இந்த கட்டணத் தடுப்பு நடைமுறை பொருந்தாது. மறு சரிபார்ப்பு, பில் திருத்தம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மூன்று வேலை நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். தவறான மீட்டர் பதிவு செய்யும் அதிகாரிகள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் தலைமையிலான அரசு அமைந்தவுடன் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவருக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் அதிக அளவில் வரவேற்பு அளித்தனர். ஆனால் கடந்த 4 மாதங்களில் மின் கட்டண விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில், பழைய கட்டண முறையே மேலானது என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
