ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக் கழக முன்னாள் பெண் நிர்வாகி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்த பெண் சமரசமாக செல்வதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நிர்வாகி, அதே கட்சியை சேர்ந்த இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த மே 3ம் தேதி வேலை வாங்கி தருவதாக கூறி பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயபால் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
தனக்கு ஏற்பட்ட இந்த கொடுமைக்கு ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ சரவணனும் உடந்தையாக இருந்தார் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயபால் மற்றும் பாலசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டை காவல்துறை மறுத்து, மேற்குறிப்பிட்ட இருவருக்கு மட்டுமே தொடர்பு என்று கூறியது.
இந்த சூழலில் புகார் அளித்த பெண்ணும் கைதான இருவரும் சமரசமாக செல்வதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை நேற்று (செப்டம்பர் 5) விசாரித்த நீதிபதி ஆர். விஜயகுமார், இந்த பாலியல் குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.
