அதிகரிக்கும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவல்: தப்பிப்பது எப்படி?

Published On:

| By Kavi

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

ஏடிஎஸ் வகை கொசுக்களால் மனிதர்களுக்கு டெங்கு பரவுகிறது. இந்த கொசுக்கள் பெரும்பாலும் பகல் நேரங்களில் கடிக்கும் இயல்புடையவை. 

ADVERTISEMENT

அதுபோன்று எச்1என்1 இன்புளுயன்சா வைரஸ் தொற்றான பன்றி காய்ச்சல் பாதிப்பும் ஏற்படுகிறது. இது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு மிக வேகமாக பரவும் நோயாகும். 

இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை தரவுகள் கூறுகின்றன. 

ADVERTISEMENT

2013 முதல் 2026 வரை

தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு 6,122 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது உயிரிழப்புகள் ஏதுமில்லை. 

ADVERTISEMENT

2014 ஆம் ஆண்டு 2,804 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு, 3 பேர் உயிரிழந்தனர்.

2015இல் 4,535 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்தனர். 2016 இல் 2,531 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.

2017இல் 23,294 பேர் பாதிக்கப்பட்டு 65 பேர் உயிரிழந்தனர். 2018 ஆம் ஆண்டு 4,486 பேர் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். 

2019 ஆம் ஆண்டு 8,527 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். 

2020 ஆம் ஆண்டு 2,410 பேர் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பு ஏதுமில்லை. 

2021 ஆம் ஆண்டு 6,039 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்தனர்.

2022 ஆம் ஆண்டு 6,430 பேர் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்தனர்.

2023 ஆம் ஆண்டு 9,121 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்தனர். 

2024 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 27,378 பேர் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். 

2025 ஆம் ஆண்டு 23,407 பேர் பாதிக்கப்பட்டு 12 பேர் உயிரிழந்தனர். 

2026 ஜனவரி முதல் ஆகஸ்ட் 30 வரை 13,573 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் ஜனவரி மாதத்தில் 1,722, பிப்ரவரியில் 1,322, மார்ச்சில் 1,228, ஏப்ரலில் 1,201, மே மாதத்தில் 1,062, ஜூன் மாதத்தில் 1,384, ஜூலையில் 2,339, ஆகஸ்டில் 3,315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

2025 ஆம் ஆண்டு ஜூலையில் 1,880 ஆக இருந்த பாதிப்பு 2026 ஜூலையில் 2,339  ஆக அதிகரித்துள்ளது. 

2025 ஆகஸ்டில் 1,832 ஆக இருந்த பாதிப்பு 2026 ஆகஸ்டில் 3,315 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் பதிவான 13,573 தொற்றுகளில் சென்னையில் மட்டும் 2,584 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து கோவையில் 1,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் தொகை அடர்த்தி, சுகாதாரயின்மை காரணமாக பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மழைக்காலம் தொடங்க இருப்பதால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பன்றிக்காய்ச்சல்

பன்றிக்காய்ச்சலைப் பொறுத்தவரை இந்தியாவில் சுமார் 9,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,558 என்ற எண்ணிக்கையுடன் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.பன்றி காய்ச்சல் காரணமாக தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

2024, 2025 ஆம் ஆண்டை விட 2026 ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சல் அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

2024ல் 1,777, 2025-ல் 1,288 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை 1,791 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2025 ஆகஸ்ட்டில் 46 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை 2026 ஆகஸ்டில் 645ஆக அதிகரித்துள்ளது. 

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர் குறைந்தது ஐந்து நாட்களாவது தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

இருமல், தும்மல் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக இந்த காய்ச்சல் பரவுகிறது. சில சமயங்களில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தொடும் பொருட்களை மற்றவர்கள் தொட்டுவிட்டு பின்னர் தங்கள் வாய் அல்லது மூக்கை தொடுவதன் மூலமும் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. 

எனவே உள்ளங்கைகளை நன்கு கழுவ வேண்டும். பொது ஆரோக்கியத்தை பேண வேண்டும். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது நல்லது.

இருமல், தும்மல் வரும்போது மூக்கையும், வாயையும் கர்ச்சீப், டிஷ்யூ பேப்பர்களை கொண்டு மூட வேண்டும். அதை பயன்படுத்திய பிறகு குப்பைத்தொட்டியில் போட்டு விட வேண்டும். 

கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கழுவ வேண்டும். கண்கள் மூக்கு அல்லது வாய் பகுதியை தொடுவதை தவிர்க்க வேண்டும். 

பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது. 

அதேபோன்று இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, குளிர், நடுக்கம், சோர்வு, வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். 

டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

அதுபோன்று டெங்குவை பொறுத்தவரை அதிக காய்ச்சல், தலைவலி, கண்வலி, தசை மற்றும் மூட்டு வலி, மார்பு மற்றும் கை கால்களில் தட்டம்மை போன்ற தடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முக்கிய அறிகுறிகள் ஆகும். 

டெங்குவை பரப்பும் கொசுக்கள் தாங்கள் வசிக்கும் சுற்றுப்புறத்தில் அண்டாமல் இருக்க, வீடு மற்றும் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 

வீட்டைச் சுற்றி சிறிது அளவு கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

தேங்காய் ஓடுகள், பீப்பாய்கள், ஜாடி பானைகள், நீர் தொட்டிகள், டயர்கள், கூரை, குளிர்சாதன பெட்டியின் நீர் வடியும் தட்டுகள் என எங்கும் நீர் தேங்காமல் இருப்பதை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டைச் சுற்றி ரசாயன புழுக்கொல்லிகள் மருந்துகளை தெளிக்கலாம். கொசு மருந்துகளை அடிக்கலாம்.

இந்த நோய்க்கு மருத்துவ ரீதியாக இதுவரை இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை குறையும் போது உயிரிழப்பு அபாயமும் ஏற்படும். 

எனவே காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறு, நிலவேம்பு குடிநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share