20 வயதே ஆன இளைஞர்கள் செய்த கொடூரம்… தவெக நிர்வாகி கொலை வழக்கின் பின்னணி!

Published On:

| By Kavi

தமிழக தலைநகரை உலுக்கிய கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான கண்ணன்  நேற்று இரவு வண்ணாந்துறை பகுதியில்  சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் தமிழக சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பியிருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த கொலை குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில்,  ” சென்னை, வண்ணான்துறை பகுதியில் கண்ணன் வசித்து வந்தார். இவர் IT நிறுவனங்களுக்கு கார்களை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். இவர் J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்பதினால் போலீசார் இவரது நடவடிக்கைகளை தொடர்ந்து நேரடியாகவும், ரகசியமாகவும் கண்காணித்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் 05.09.2026 அன்று இரவு வண்ணான்துறை, ராமசாமி அவென்யூ, எல்லையம்ன் கோயில் தெருவில் நின்று கொண்டிருந்த போது. அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கண்ணனை கக்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தாக்குலில் காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இது குறித்து கொலையுண்ட கண்ணனின் சித்தி மகன் புருஷோத்தமன்,  J-5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து  போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவிட்டதின் பேரில் அடையார் காவல் மாவட்ட துணை ஆணையாளர் கண்காணிப்பில் உதவி ஆணையாளர் மற்றும் J-5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய  அடையாறு ருக்மணி நகரைச் சேர்ந்த பரணி(20), கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்த ராகேஷ் (20), பெரியார் நகரைச் சேர்ந்த நரேஷ்(20), கோட்டூரைச் சேர்ந்த மணிகண்டன்(20), இந்திரா நகரைச் சேர்ந்த ஹரிஹரன்(20) ஆகியோரை கைது செய்தனர். 

மேலும் விசாரணையில் கடந்த 2009ம் ஆண்டு அடையார் பகுதியில் பரணியின் பெரியப்பா சிவா, கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டார். அதன் பிறகு பரணியின் தந்தை வேலு கடந்த 2016ம் ஆண்டு சைதாப்பேட்டை பகுதியில் கொலை செய்யப்பட்டார்.

இந்த முன்விரோதம் காரணமாகவே பரணி தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணனை கொலை செய்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளனர். 

நாளை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பதிலுரை ஆற்றவிருக்கும் நிலையில், நடைபெற்ற இந்த கொலை தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தசூழலில்  சாஸ்திரி நகர் காவல் ஆய்வாளர் ரோகினி மற்றும் அடையார் துணை ஆணையர் கார்த்திகேயன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது பிட்டு தபாஹி என்ற இளைஞர், பல மாதங்களாக மாசடைந்த நதியை தனியாளாகச் சுத்தப்படுத்தி இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பாராட்டை பெற்று வருகிறார். ஆனால் தமிழ்நாட்டில் அதே 20 வயதுடைய 5 இளைஞர்கள் பழிக்கு பழி கொலையில் ஈடுபட்டிருப்பது பொதுமக்கள், பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share