கலைஞர் உருவாக்கிய 55 ஆண்டுகால மாநில திட்டக் குழுவை கலைக்கிறதா விஜய் அரசு?

Published On:

| By Mathi

மாநில திட்டக் குழுவை கலைக்கும் விஜய் அரசு?

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், பொருளாதாரக் கொள்கைகள், சமூக நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும் 55 ஆண்டுகால மாநில திட்டக் குழுவை கலைப்பது குறித்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநில திட்டக் குழுவைத் தொடர்ந்து நடத்துவதற்குப் பதிலாக, அரசு எதிர்கொள்ளும் ஒவ்வொரு முக்கியத் தேவைக்கும் அந்தந்த துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களைக் கொண்டு தனித்தனி குழுக்களை அமைக்கும் அணுகுமுறை குறித்தும் விஜய் அரசு ஆலோசித்து வருகிறது.

ADVERTISEMENT

கலைஞர் ஆட்சியில் உருவான மாநில திட்டக் குழு

தமிழ்நாடு மாநில திட்டக் குழு 1971-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு செயல்படும் உயர்மட்ட ஆலோசனை அமைப்பாக மாநில திட்டக் குழு வடிவமைக்கப்பட்டது.

புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் தமிழகத்தின் முழுமையான வளர்ச்சிக்கு அரசுக்கு ஆலோசனை வழங்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

ADVERTISEMENT

தமிழகத்தின் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, சமூக நலன் மற்றும் புத்தாக்கம் தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் அரசுக்கு உதவுவதும் மாநில திட்டக் குழுவின் முக்கியப் பணிகளாகும்.

அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ஆய்வு செய்து மதிப்பீடு செய்வதுடன், அந்தத் திட்டங்கள் கடைக்கோடி மக்களைச் சென்றடைவதில் உள்ள தடைகள் மற்றும் சவால்களைக் கண்டறிந்து, திட்டங்களின் பயன்கள் அடித்தட்டு மக்களையும் சென்றடைவதற்கான ஆலோசனைகளையும் இந்த அமைப்பு வழங்குகிறது.

ADVERTISEMENT

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளைக் கண்காணிப்பது, புதிய திட்டங்களை உருவாக்குவது, நடைமுறையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அரசுக்கு ஆலோசனை வழங்குவது ஆகியவையும் திட்டக் குழுவின் பணிகளாக உள்ளன.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2030 மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் 2030 ஆகியவற்றின் இலக்குகள் மற்றும் குறியீடுகளைக் கருத்தில் கொண்டு துறைசார் உத்திகள் மற்றும் மாநிலக் கொள்கை வரைவுகளை உருவாக்குவதிலும் திட்டக் குழு பங்காற்றுகிறது.

மனித மேம்பாட்டுக் குறியீடு, பாலின மேம்பாட்டுக் குறியீடு உள்ளிட்ட குறியீடுகள் மூலம் மாநிலத்தின் முன்னேற்றத்தைக் கண்காணித்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதும் அதன் பணியாகும்.

மேலும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதித் திட்டம், தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம், தமிழ்நாடு மாநில நிலப் பயன்பாட்டு வாரியத் திட்டம் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பும் மாநில திட்டக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது திட்டங்களை வகுப்பது மட்டுமின்றி, இலக்குகளை நிர்ணயிப்பது, செயல்பாடுகளைக் கண்காணிப்பது, திட்டங்களை மதிப்பீடு செய்வது, கொள்கைப் பரிந்துரைகளை வழங்குவது, அரசுத் துறைகளுக்கு இடையே கொள்கை ஒத்திசைவை ஏற்படுத்துவது என விரிவான பணிகளை மேற்கொள்ளும் அமைப்பாக மாநில திட்டக் குழு செயல்பட்டு வந்துள்ளது.

மத்தியில் Planning Commission கலைப்பு… தமிழகத்தில் என்ன நடந்தது?

மத்திய அரசின் Planning Commission 1950-ல் உருவாக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2015 ஜனவரி 1-ஆம் தேதி அதற்குப் பதிலாக NITI Aayog என்ற புதிய அமைப்பை உருவாக்கியது.

ஆனால் தமிழகத்தில் மாநில திட்டக் குழு உடனடியாகக் கலைக்கப்படவில்லை.

2017-ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மாநில திட்டக் குழுவை மறுசீரமைக்க முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக 2020-ல் State Planning Commission, State Development Policy Council (SDPC) — மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவாக மாற்றியமைக்கப்பட்டது.

மு.க. ஸ்டாலின் ஆட்சியில் 10 வல்லுநர்களுடன் மறுகட்டமைப்பு

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானதைத் தொடர்ந்து, அப்போது State Development Policy Council என்ற பெயரில் இருந்த அமைப்பு மறுகட்டமைக்கப்பட்டது.

மாநில திட்டக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, 2021 ஜூன் மாதம் 10 வல்லுநர்களைக் கொண்ட புதிய உறுப்பினர் குழு உருவாக்கப்பட்டது. ஏழு முக்கியத் துறைகளில் தொடர்புடைய பங்குதாரர்களுடன் இணைந்து திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்கும் வகையில் இந்தக் குழு செயல்படத் தொடங்கியது.

பொருளாதார ஆய்வறிஞர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் துணைத் தலைவராகவும், பேராசிரியர் ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனர்.

பேராசிரியர் ம.விஜயபாஸ்கர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், சித்த மருத்துவர் கு.சிவராமன், பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ், தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜெ.அமலோற்பவநாதன் மற்றும் அப்போதைய மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் 2021 ஆகஸ்ட் 25-ஆம் தேதி State Development Policy Council என்ற பெயரை மாற்றி மீண்டும் State Planning Commission — மாநில திட்டக் குழு என்ற பழைய பெயரை திமுக அரசு கொண்டுவந்தது.

2024-ல் மீண்டும் மறுசீரமைப்பு

2024 செப்டம்பரில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டு, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையும் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து 2024 நவம்பர் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட G.O.(Ms) No.162 மூலம் மாநில திட்டக் குழு மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவராகத் தொடர்ந்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அலுவல்சார் துணைத் தலைவராகவும், ஜெ.ஜெயரஞ்சன் செயல் துணைத் தலைவராகவும் இடம்பெற்றனர்.

பேராசிரியர் ராம.சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் ம.விஜயபாஸ்கர் கூடுதல் முழுநேர உறுப்பினராகவும் இடம்பெற்றனர்.

ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.தீனபந்து, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், மருத்துவர் ஜெ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன் ஆகிய ஏழு பேர் பகுதிநேர உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.

தலைமைச் செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரும் அலுவல்சார் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.

ஆட்சி மாறியதும் ராஜினாமா

2026 சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றது.

இதையடுத்து முந்தைய திமுக அரசால் நியமிக்கப்பட்ட மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்ட உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

புதிய உறுப்பினர்களை விஜய் அரசு நியமிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மாநில திட்டக் குழுவையே தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசு இணையதளத்தில் தலைவராக விஜய்

இந்தச் சூழலில் மாநில திட்டக் குழுவின் தற்போதைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாநில திட்டக் குழுவின் தலைவராக தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் குறிப்பிடப்பட்டுள்ளார். அதே இணையதளத்தில் மாநில திட்டக் குழுவின் நிர்வாக அமைப்பில் அலுவல்சார் துணைத் தலைவர், செயல் துணைத் தலைவர், முழுநேர உறுப்பினர், கூடுதல் முழுநேர உறுப்பினர், பகுதிநேர உறுப்பினர்கள், அலுவல்சார் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்-செயலாளர் ஆகிய பதவிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போதைய அலுவல்சார் உறுப்பினர்களாக தலைமைச் செயலாளர் டாக்டர் எம்.சாய்குமார், சஜ்ஜன்சிங் ஆர்.சாவன், எம்.ஏ.சித்திக் ஆகியோரின் பெயர்களும், உறுப்பினர்-செயலாளராக சுதா.சு. பெயரும் அரசு இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

திட்டக் குழுவுக்குப் பதில் வல்லுநர் குழுக்களா?

மாநில திட்டக் குழு என்பது பல்வேறு துறைகள் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்கும் நிரந்தர அமைப்பு.

ஆனால் ஒரே அமைப்பில் நிரந்தரமாக வல்லுநர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அரசு எதிர்கொள்ளும் ஒவ்வொரு முக்கியப் பிரச்சினைக்கும் அந்தந்த துறையில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு தனித்தனி குழுக்களை அமைக்கலாம் என்ற அணுகுமுறையை விஜய் அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

பொருளாதாரப் பிரச்சினைகளுக்குப் பொருளாதார வல்லுநர்கள், சுகாதாரத் திட்டங்களுக்கு மருத்துவ மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள், வேளாண் பிரச்சினைகளுக்கு வேளாண்மை மற்றும் நீர்வள வல்லுநர்கள் என தேவைக்கேற்ப தனித்தனி குழுக்களை உருவாக்குவதன் மூலம் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு நேரடியாக வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற முடியும் என்பது இந்த அணுகுமுறையின் அடிப்படையாக இருக்கிறது.

மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் குழு

இதற்கான உதாரணமாக மத்திய திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும் பொருளாதார வல்லுநருமான மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில் தமிழக அரசு ஏற்கெனவே தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

தமிழக அரசின் சொந்த வரி மற்றும் வரியல்லாத வருவாயை வலுப்படுத்துவது, வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பது, வருவாய் கசிவுகளைக் கண்டறிந்து தடுப்பது மற்றும் மாநிலத்தின் நிதிசார் தற்சார்பை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட பணிகள் இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்று ஒவ்வொரு முக்கியப் பிரச்சினைக்கும் தனித்தனி வல்லுநர் குழுக்களை அமைக்கும் முறையை விரிவுபடுத்துவது குறித்தே விஜய் அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

55 ஆண்டுகால அமைப்புக்கு முடிவா?

1971-ல் கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாநில திட்டக் குழு, பல்வேறு அரசுகளைக் கடந்து 55 ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் கொள்கைத் திட்டமிடலில் முக்கிய அமைப்பாக இருந்து வந்துள்ளது.

மத்திய அரசின் Planning Commission கலைக்கப்பட்ட பின்னரும் தமிழகத்தில் மாநில திட்டக் குழு தொடர்ந்தது. அதிமுக ஆட்சியில் அதன் பெயரும் வடிவமும் மாற்றப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் மீண்டும் மாநில திட்டக் குழு என்ற பெயர் கொண்டுவரப்பட்டது. இப்போது விஜய் தலைமையிலான அரசு அதன் எதிர்காலம் குறித்து ஆலோசித்து வருகிறது.

55 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாநில திட்டக் குழுவை விஜய் அரசு முழுமையாகக் கலைக்குமா? தனித்தனி வல்லுநர் குழுக்களால் அதன் பணிகளை மாற்றுமா? அல்லது புதிய வடிவில் மாநில திட்டக் குழுவையே மறுசீரமைக்குமா? என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியக் கேள்வி.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share