5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தடை நீட்டிப்பு – உயர்நீதிமன்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை நீட்டிக்கப்படுவதாக இன்று (செப்டம்பர் 8) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் மற்றும் மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

ADVERTISEMENT

இதனால் தமிழகத்தில் தாராபுரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், திருச்சி கிழக்கு, பெருந்துறை, மதுராந்தகம் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக கட்சியை சேர்ந்த வெங்கடாஜலபதி ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

ADVERTISEMENT

அதில், “வேட்பாளர்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது.

ADVERTISEMENT

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பிலும், தேர்தல் வழக்குகள் முடியும் வரை இடைத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 28ஆம் தேதி நடைபெறும். 5 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தடை நீட்டிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share