தமிழக முதல்வர் விஜய் குறித்து டீப் பேக் வீடியோவை பரப்பிய ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் விஜய் குறித்த வீடியோக்கள் வட மாநிலங்களில் அதிகளவு வலம் வந்தது. அதில் நிதி உதவி பெற இந்த எண்ணை அழைக்கலாம் என குறிப்பிட்ட வாட்ஸ் அப் எண்ணும் பகிரப்பட்டது. அதுபோன்று பாகிஸ்தான் ஐடிகளிலும் முதல்வர் விஜய் குறித்த வீடியோக்கள் பரவின.
இந்த டீப் பேக் வீடியோக்கள் குறித்து தமிழக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள தகவலில், ”தமிழ்நாடு சிபிசிஐடி (CBCID) சைபர் குற்றப் பிரிவு மேற்கொண்ட வழக்கமான இணையவழி கண்காணிப்பின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் போன்று உருவகப்படுத்தி, இந்தி குரல்வடிவத்துடன் கூடிய Al மூலம் உருவாக்கப்பட்ட ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பரப்பப்பட்டது கண்டறியப்பட்டது.
அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோக்கள், ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் பரப்பப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில், நிதி உதவி பெற ஒரு வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட தனி அறிக்கையின் அடிப்படையில், சிபிசிஐடி சைபர் க்ரைம் செல் குற்ற எண் 01/2026 சட்ட பிரிவுகள் 204, 318(2), 319(2), 336(3) & 340(2) (BNS 2023) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் பிரிவுகள் 66C & 66D ஆகியவற்றின் கீழ் 01.09.2026 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
மோசடி செய்பவர்கள் இந்த Al வீடியோக்களைப் பயன்படுத்தி மத்தியப் பிரதேசம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பலரை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இந்த டீப் ஃபேக் AI வீடியோக்களை நீக்கியதுடன், சேவை வழங்குநரிடமிருந்து தகவல்களைப் பெற்ற சிபிசிஐடி, டிஜிட்டல் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்து, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் சந்தேக நபர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, சிபிசிஐடி உயரதிகாரிகளின் மேற்பார்வையில் பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான காவல் ஒருங்கிணைப்பு மூலம் கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டு குற்றவாளியைக் கண்டுபிடிக்க ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு 2 தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
ராஜஸ்தான் காவல்துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டம், லட்சுமண்கர், பூந்தோலியைச் சேர்ந்த ஜஹூர் கானின் மகன் ஷயாபு கான் (28) என்பவர் 12.09.2026 அன்று ஆல்வார் மாவட்டத்தின் உட்பகுதியில் கைது செய்யப்பட்டார். குற்றத்திற்க்காக பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்கள், சிம் கார்டுகள் மற்றும் சிபியு (CPU) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், மேற்படி குற்றவாளியின் டிஜிட்டல் தடங்களைப் பின்தொடர்ந்தபோது, மத்தியப் பிரதேசத்தில் இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவரை சிபிசிஐடி கண்டறிந்தது. அவரின் வாக்குமூலம் மற்றும் அவர் கொடுத்த ஆதாரங்கள் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஷயாபு கானுக்கு எதிராக வழக்கைப் பலப்படுத்த உதவி புரிந்துள்ளன.
குற்றவாளி தனியாகச் செயல்பட்டாரா அல்லது ஏதேனும் பெரிய நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகச் செயல்பட்டாரா என்பதைக் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், இதுபோன்ற பல வீடியோக்கள் பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஃபேஸ்புக் ஐடிகளில் பகிரப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், வெளிநாட்டு குற்றவாளிகளைக் கண்டறியவும். அவர்களுக்கு உள்ளூர் அளவில் உதவியவர்களை வெளிக்கொண்டு வரவும் தீவிர டிஜிட்டல் விசாரணை நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறியதாக இருந்தாலும், குற்றவாளிகளின் மறைவிடங்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், சட்டத்தின் செயல்பாடானது எப்போதும் மோசடியை விட வேகமாகச் சென்றடையும் என்ற தெளிவான செய்தியை இந்த அதிரடி நடவடிக்கை உணர்த்தியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையின் சார்பில், பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், போலி வீடியோக்களில் பரப்பப்படும் தொலைபேசி எண்களுக்குப் பதிலளிக்கவோ, வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ வேண்டாம் என்றும். மேலும் இந்த வகை ஆன்லைன் மோசடிகள் குறித்துத் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
