லண்டனில் ரூ.12,000 கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் விஜய்

Published On:

| By Kavi

லண்டனில் சுமார் 12 ஆயிரம் கோடி முதலீடுகளை முதல்வர் ஈர்த்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் லண்டன் சென்றது தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்தநிலையில் லண்டனில் முதலீடுகளை ஈர்த்தது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதில், ”இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

அதுபோன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres – GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

ADVERTISEMENT

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ‘GCC காரிடார்’ (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share