மதுரை தமிழ்செல்வனுக்கு நீதி கேட்டு போராட்டம்… பெண்களை இழுத்துச் சென்று கைது செய்த போலீஸ்!

Published On:

| By Kavi

மதுரையில் மாணவன் தமிழ்செல்வன் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மதுரை கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த யோகலட்சுமி – கருப்பசாமி தம்பதியின் மகன் தமிழ்ச்செல்வன். சமீபத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற தமிழ்ச்செல்வன் வீடு திரும்பவில்லை.

ADVERTISEMENT

அவரை தேடிய நிலையில் உடலில் காயங்களுடன் முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து கூடல் புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் மாணவனின் மரணத்தை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி “தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்” சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று (செப்டம்பர் 14) மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

காவல்துறையினருக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.

“தமிழ்செல்வனுக்கு நீதி வேண்டும்… ஏன் இந்த அமைதி… அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

அப்போது சிலர் ஆணையர் அலுவலகத்தை நோக்கி ஓடிய நிலையில் அவர்களை தடுத்து நிறுத்தி.போலீசார் இழுத்துச் சென்றனர். குறிப்பாக தமிழ்செல்வனின் உறவினரான ஒரு பெண்ணை போலீசார் பலவந்தமாக இழுத்துச் செல்லும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்களை இழுத்துச் சென்று கைது செய்த போது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இரு தரப்புக்கும் லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பாக மாணவனின் தாயார் கூறுகையில் ‘என் மகன் இறந்து ஒன்பது நாள் ஆகிவிட்டது. இன்னும் மார்ச்சுவரில் இருக்கிறான். அவன் ஒரு அப்பாவி. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும்’ என கண்ணீர் மல்க கூறினார்.

இந்தப் போராட்டம் காரணமாக காவல் ஆணையர் அலுவலகம் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்படுவதால் அழகர்கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share