நடிகர், தவெக தலைவர், முதலமைச்சர்.. விஜய்யை சித்தரிக்கும் 3 விநாயகர் சிலைகள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

நடிகர், அரசியல் தலைவர், முதலமைச்சர் என ட்ரெண்டிங் சைகையுடன் முதலமைச்சர் விஜய்யின் கெட்டப்பில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 14) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமக்களுக்கு இடையூறின்றி விழாக்கள் நடத்தவும், சிலைகள் கரைப்பு ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் அந்தந்த மாவட்ட அமைப்பாளர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ரசாயனப் பொருட்களைத் தவிர்த்து, முற்றிலும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளையே வழிபாட்டிற்கு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் நடிகரும், தவெக தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய்யை குறிக்கும் வகையில் 3 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ‘கில்லி’ படத்தில் வரும் நடிகர் விஜய், தவெக தலைவராகத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சைக்கிளில் சென்ற விஜய் மற்றும் சட்டமன்றத்தில் விஜய்யின் ட்ரெண்டிங் சைகை ஆகியவற்றை குறிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

விஜய் ரசிகர்கள் வைத்துள்ள இந்த சிலைகள் சமூக வலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ADVERTISEMENT

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ரசிகர்கள், “நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடி வருகிறோம். தலைவர் விஜய் மீது அதிக பாசமும் பற்றும் கொண்ட முரட்டு ரசிகர்களாக இருப்பதால், அவர் நடிக்கும் படங்களில் வரும் தோற்றங்களைப் போல சித்தரித்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவோம். ‘லியோ’, ‘ராயப்பன்’, ‘பிகில்’ போன்ற வடிவங்களில் சிலைகளை வைத்துள்ளோம். கடந்த ஆண்டு 2026 தேர்தலில் வெற்றி பெற்று விஜய்தான் முதல்வர் ஆவார் என்ற வகையில் ‘சிஎம் விநாயகர்’ சிலையை வைத்தோம். அதற்கு நிறைய தடைகள் வந்தன; அப்போதே அதைச் சந்தித்து சிஎம் விநாயகரை வைத்தோம்.

இன்று எங்கள் தளபதி முதல்வராக உள்ளார்; அதனால் அவர் கடந்து வந்த பாதையைச் சித்தரிக்கும் வகையில் தற்போது ‘கில்லி’ சிலை, தேர்தல் பிரச்சாரத்திற்குச் சைக்கிளில் விஜய் சென்றது, தற்போது சிஎம் ஆகிவிட்டதால் சட்டசபையில் அவர் செய்த முதல் சைகை வைரலானது. இதையெல்லாம் குறிக்கும் வகையில் விநாயகர் சிலைகளை வைத்துள்ளோம். இது நாங்கள் வழக்கமாகச் செய்வதுதான். நாங்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதோடு மட்டுமில்லாமல், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்வோம்; விளக்கு பூஜை எடுப்போம்; அன்னதானம் செய்வோம். இதனாலேயே கொருக்குப்பேட்டையில் நாங்கள் வைக்கும் விநாயகர் எப்போதும் ட்ரெண்டிங் ஆக இருக்கும். இதைப்பார்த்து கடந்த மூன்று மாதங்களாகப் பக்குவமாகச் செய்துள்ளோம். இதற்கு மொத்தம் 90 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது. அரசியலில் வந்தால் தடைகள் இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். இந்த முறை எங்கள் தலைவர் முதல்வராக உள்ளார். அதனால் நாங்கள் தைரியமாக சிலை வைக்கலாம் என்ற நம்பிக்கையில் வைத்துள்ளோம்” என்றனர்.

ADVERTISEMENT

அதேபோல், திருப்பூரில் நடிகர் ரஜினிகாந்த் உருவத்தில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடித்த ‘தர்மன்’, ‘ஜெயிலர் 2’ ரஜினி கெட்டப்பில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரஜினியின் தீவிர ரசிகரான ரஜினி ரஞ்சித் இதனை அசத்தலாகச் செய்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share