திருநெல்வேலியில் பிரியாணி கடை விளம்பரப் பலகையில் விநாயகர் படம் இடம்பெற்ற சம்பவம் சர்ச்சைக்குள்ளான நிலையில், கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி வி.எம். சத்திரம் பகுதியில் உள்ள அசைவ உணவகம் ஒன்றின் முன்பு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விநாயகர் படத்துடன் கூடிய விளம்பரப் பலகை வைக்கப்பட்டது. அந்தப் படத்தில் விநாயகர் கையில் பிரியாணி வைத்திருப்பது போன்ற சர்ச்சைக்குரிய வகையில் படம் இடம்பெற்றிருந்தது.
இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி நிர்வாகிகளும் தொண்டர்களும் பிரியாணி கடை முன்பாகத் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ள அந்த விளம்பரப் பேனரை உடனடியாக அகற்ற வேண்டும் என காவல்துறையினரிடம் வலியுறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல்துறையினர், சம்பந்தப்பட்ட விளம்பரப் பேனரை அகற்றினர்.
விளம்பரம் தொடர்பாகக் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து முன்னணி நிர்வாகிகளிடம் காவல்துறையினர் உறுதியளித்தனர்.
இது குறித்து நரசிங்கநல்லூரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பிரியாணி கடை உரிமையாளரான கே.டி.சி. நகரைச் சேர்ந்த முருகையா மகன் ஜெயந்த் என்பவரைக் கைது செய்தனர்.
