கோவையில் 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், காவல் ஆய்வாளரை அரிவாளால் தாக்கித் தப்ப முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்திப் பிடிக்கப்பட்டார்.
கோவையில் நேற்று போத்தனூர் அருகே 14 வயது சிறுமியை இரு சக்கர வாகனத்தில் கடத்திப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகச் சந்தோஷ், தவசி ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இந்நிலையில், சிறுமியை கடத்திச் சென்று கஞ்சிக்கோணாம்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை மிரட்டப் பயன்படுத்திய அரிவாளைப் பறிமுதல் செய்யும் நோக்கில், கைது செய்யப்பட்ட தவசியை சம்பவம் நடந்த பகுதிக்குக் காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
அப்போது தவசி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக் காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியைத் தாக்கினார். இதில் காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளி காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, பலமுறை எச்சரித்தும் அரிவாளைக் கீழே போடாததால் தற்காப்புக்காகக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தவசியின் இடது காலில் காயம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, காயமடைந்த தவசிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல், அரிவாள் தாக்குதலில் காயமடைந்த காவல் ஆய்வாளர் சுவர்ணவள்ளியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த வழக்கில் சந்தோஷ் மற்றும் தவசி ஆகிய இருவர் மீதும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாகக் கோவை மாநகரக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் எனக் கோவை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
