கோவையில் (Coimbatore) 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐஜி ரம்யா பாரதி (IG Ramya Bharathi) தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று மே 23-ந் தேதி செய்தியாளர்களிடம் ஐ.ஜி. ரம்யா பாரதி கூறியதாவது: கடந்த 21.05.2026 அன்று இரவு சுமார் 8:30 மணி அளவில் கோவை மாவட்ட சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளப்பாளையம், பாரதிபுரம், அருணகிரிநாதர் வீதியில் வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி, மாலை சுமார் 5 மணி அளவில் காணாமல் போனதாக காவல் அவசர உதவி எண் ‘100’ மூலம் தகவல் கிடைக்கப்பெற்றது.
தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு, புகார் பெற்று, அதே இரவு சுமார் 10 மணி அளவில் குழந்தை காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காணாமல் போன சிறுமியைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி (வயது 33 த/பெ காசிநாதன்), இவர் சிறுமியின் குடும்பத்திற்குப் பழக்கமான, அண்டை வீட்டில் வசிப்பவர். இவர் சிறுமியை அழைத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள மரியா ரோஸ் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் பதுங்கியிருந்த குற்றவாளி கார்த்தியை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற அவர், மேல் மாடியில் இருந்து குதித்ததில் அவருக்கு வலது கை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், குற்றவாளி கார்த்தி-சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகில் உள்ள தென்னந்தோட்டத்தில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் நடைபெற்ற விசாரணையில், பாரதிபுரம், பள்ளப்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (வயது 30 த/பெ. ராமசாமி) என்பவர், முக்கிய குற்றவாளிக்கு உறுதுணையாக இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கார்த்தி தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவ்வழக்கு சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை தொடர்புடையது என்பதால், வழக்கில் போக்சோ (POCSO) சட்டப் பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் மேற்கொண்ட துரிதமான நடவடிக்கை மற்றும் காவல்துறையினரின் தயார் நிலை காரணமாக, 24 மணி நேரத்திற்குள் வழக்கு கண்டறியப்பட்டு, வழக்கின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விரைவாக அரசின் தரப்பிலிருந்து நிவாரண உதவித் தொகை கிடைக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு ஐஜி ரம்யா பாரதி கூறினார்.
