கோவை சிறுமி வழக்கு : விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முதல்வர் விஜய் உத்தரவு!

Published On:

| By Kavi

கோவை சிறுமி கொலை வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போனார்.

ADVERTISEMENT

பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தேடியும் சிறுமி கிடைக்காததால், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற தங்களது மகள் வீடு திரும்பவில்லை என்று அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

ADVERTISEMENT

அங்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். 

இந்த சூழலில் சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதர் பகுதியில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

ADVERTISEMENT

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அச்சிறுமியின் உடலை மீட்டனர். தொடர்ந்து, மாயமான சிறுமியும் இறந்துகிடந்த சிறுமியும் ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டது. 

இதை அறிந்த மேற்கு மண்டல ஐஜி ரம்யா பாரதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.  டிஜிபி சந்திப் ராய் ரத்தோரும் கோவைக்கு வருகை தந்தார்

இதைத் தொடர்ந்து கார்த்திக் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

இதில் கார்த்தி சிறுமியின் குடும்பத்தினர் வசிக்கும் அதே காம்பவுண்டில் வாடகைக்கு குடியிருந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. ஒரு வாரத்துக்கு முன் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு குடிபெயர்ந்து விட்டான். 

எனினும் முன்னதாக ஒரே காம்பவுண்டில் வசித்ததால் அந்த சிறுமிக்கு கார்த்திக் நல்ல அறிமுகமானவராக இருந்துள்ளார். இதை பயன்படுத்தி, சாக்லேட் வாங்கி தருவதாக கூறி, அழைத்துச் சென்று கார்த்திக் கொலை செய்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமியின் முகம் சிதைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதற்கிடையே குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் வைக்கப்பட்டது.  அப்போது எங்கள் குழந்தையின் இறப்புக்கு நீதி வேண்டும் கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று  சிறுமியின் குடும்பத்தினரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தற்போது உடற்கூறு ஆய்வு முடிந்து சிறுமியின் உடலும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழலில் சிறுமியின் கொலை வழக்கில் விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share