சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் ஐபிஎஸ் இன்று (மே 22) காலை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, நிர்வாக வசதிக்கு ஏற்ற வகையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். பல்வேறு முக்கியத் துறைகளுக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் பதவிக்கு, கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் இருந்த கூடுதல் டிஜிபி ஏ.அமல்ராஜை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.
அமல்ராஜ் ஐபிஎஸ்-இன் பின்னணி
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அமல்ராஜ், 1996-ம் ஆண்டு இந்திய காவல் பணியில் (IPS) சேர்ந்தார். திருப்பூரில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக (ASP) தனது காவல் பணியைத் தொடங்கிய இவர், தர்மபுரி, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் எஸ்பியாகப் பணியாற்றினார். பின்னர் டிஐஜி மற்றும் ஐஜியாக பதவி உயர்வு பெற்று சேலம், கோவை, திருச்சி ஆகிய மாநகரங்களின் காவல் ஆணையராகவும், சென்னை காவல் தலைமையகத்தின் கூடுதல் ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார்.
கூடுதல் டிஜிபியாக (ADGP) பதவி உயர்வு பெற்ற பிறகு, தாம்பரம் மாநகர காவல் ஆணையராக இருமுறை பணியாற்றியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையராக (112-வது கமிஷனர்) நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றுள்ளார்.
முன்னதாக சென்னை மாநகர காவல் ஆணையராகப் பொறுப்பு வகித்த அபின் தினேஷ் மோடக் ஐபிஎஸ், சி.பி.சி.ஐ.டி. (CB-CID) குற்றப்பிரிவு ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
