பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்குவது குறித்து முதல்வர் விஜய் ஆலோசித்து முடிவெடுப்பார் என்று அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வருகிறது.
இந்த பரிசு பொருட்களுடன் ரொக்க பணமும் வழங்கப்படும். 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்க பணத்தை வழங்கினார்.
தற்போது ஆட்சி மாறி இருக்கும் நிலையில் 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு பணம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று ( செப்டம்பர் 12) கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்த உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணனிடம் பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “பொங்கல் பண்டிகைக்கு இன்னும் காலம் இருக்கிறது. பரிசு பொருட்கள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கைத்தறி துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். வேட்டி, சேலைக்கு டெண்டர் போடப்பட்டிருக்கிறது.
அதேபோன்று வேற பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பது பற்றி முதல்வர் ஆய்வு செய்து ஆலோசித்து முடிவெடுப்பார்” என்று பதிலளித்தார்.
