சென்னையில் ஒரே நாளில் 285 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் சமீப நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கண்ணன் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சூழலில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், குற்ற பின்னணி உடைய மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அதன் பேரில் செப்டம்பர் 10ம் தேதி இரவு முதல் நேற்று (செப்டம்பர் 11) மாலை வரை சென்னையில் 285 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில், குற்றப் பின்னணி உடைய மற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றமில்லா நகரமாக மாற்ற, அனைத்து காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் அடங்கிய காவல்குழுவினர்கள், அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் சிறப்பு சோதனைகள் (Special Drive) மேற்கொள்ளப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, சென்னையில் குற்ற பின்னனி உடைய மற்றும் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு எதிராக 10.09.2026 அன்று இரவு முதல் இன்று (11.09.2026) மாலை வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், வடக்கு மண்டலத்தில் 108 நபர்களும், மேற்கு மண்டலத்தில் 38 நபர்களும், தெற்கு மண்டலத்தில் 94 நபர்களும், கிழக்கு மண்டலத்தில் 45 நபர்களும் என மொத்தம் 285 குற்ற பின்னனி உடைய மற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து இது போன்ற சிறப்பு சோதனைகள் மேற்கொண்டு, மேலும் சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
