சாலமன் பாப்பையா மறைவு: விஜய் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Solomon Pappaiah

பிரபல பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (செப்டம்பர் 11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் ச. ஜோசப் விஜய் தனது எக்ஸ் பதிவில், “தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

ADVERTISEMENT

தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியதில் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் பங்கு மகத்தானது. அவரது மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “சிரித்த முகம் – சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.

திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.

ADVERTISEMENT

பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.

தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.

கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.

தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த தமிழறிஞர், பேராசிரியர், பட்டிமன்ற நடுவர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தனது நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களைச் சிரிக்க வைத்ததோடு, தமிழ் மொழியின் பெருமையையும், நம் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் பேராசியர் சாலமன் பாப்பையா அவர்கள்.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், தனது நகைச்சுவை கலந்த பேச்சாற்றலால் தலைமுறைகளை மகிழ்வித்தவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி என்னை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் மிகுந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழர்களின் இல்லங்களில் எந்தப் பண்டிகை வந்தாலும், பட்டிமன்றம் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் சாலமன் பாப்பையா அவர்கள். எளிமையான தமிழ், நகைச்சுவை ததும்பும் பேச்சு, ஆழமான சிந்தனை என தனது தனித்துவமான ஆளுமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது குரலும், கருத்துகளும், கலகலப்பான பேச்சும் எண்ணற்ற குடும்பங்களின் பண்டிகை மகிழ்ச்சியில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே இருந்தன. ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த அவரது இழப்பு, தமிழ் உலகிற்கே பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்தாலும், அவரது தமிழும், நகைச்சுவையும், பட்டிமன்றப் பேச்சாற்றலும் என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “தலைசிறந்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், பிரபல பட்டிமன்ற பேச்சாளருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

எளிமையான தமிழ் மொழியில் நயமான மற்றும் நகைச்சுவையான கருத்துக்களால் பட்டிமன்றங்களை சிறப்பித்த திரு.சாலமன் பாப்பையா அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக தமிழ் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share