Decoding India’s Official Languages: இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட அறிக்கையில், இந்தி இந்தியாவின் அலுவல் மொழி என்று குறிப்பிட்டது தொடர்பாக விவாதங்கள் நடைபெறுகின்றன.
இந்தி அலுவல் மொழி தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. 1949 செப்டம்பர் 14 அன்று, தேவநாகரி எழுத்து வடிவிலான இந்தியை இந்திய ஒன்றியத்தின்- மத்திய அரசின் அலுவல் மொழியாக அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தி தினத்தை முன்னிட்டு அமித் ஷா வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில வரலாற்றுத் தகவல்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன.
இந்தி மட்டுமே அலுவல் மொழியா?
”இந்தி அலுவல் மொழி” என அமித்ஷா குறிப்பிடுகிறார். அதாவது இந்தி மட்டுமே, ‘இந்தியாவின்’ ‘மத்திய அரசின்’ அலுவல் மொழி என்கிற தொனியை அமித்ஷா அறிக்கை வெளிப்படுத்துகிறது.
உண்மை என்ன?
இந்திய அரசியலமைப்பில் “தேசிய மொழி” என்ற அந்தஸ்து எந்த மொழிக்கும் வழங்கப்படவில்லை. தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. மாநிலங்கள் தங்களுக்கான அலுவல் மொழிகளை உரிய சட்டங்கள் மூலம் தீர்மானித்துக்கொள்ளவும் அரசியலமைப்பு அனுமதிக்கிறது.
1950 ஜனவரி 26 அன்று அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோதே, தேவநாகரி எழுத்து வடிவிலான இந்தி இந்திய ஒன்றியத்தின்- மத்திய அரசின் அலுவல் மொழியாகியது.
அதேநேரம், மத்திய அரசின் அலுவல் பணிகளில் ஆங்கிலத்தை மேலும் 15 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தவும் அரசியலமைப்பின் 343-வது பிரிவு அனுமதித்தது.
1950 முதல் 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக இருந்தது என்று கூற முடியாது; இந்தி- மத்திய அரசின் அலுவல் மொழியாக இருந்ததுடன் ஆங்கிலமும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது.

1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போர்
இந்த 15 ஆண்டு காலம் 1965 ஜனவரி 26-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்ததால், ஆங்கிலத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டு இந்தி மட்டுமே ஒன்றியத்தின் அலுவல் மொழியாகிவிடுமோ என்ற அச்சம் இந்தி பேசாத மாநிலங்களில் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக மாணவர்களும் பொதுமக்களும் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்கள், காவல்துறை துப்பாக்கிச் சூடு, தீக்குளிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர் என்கிறது அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள்.
ஆனால் தமிழ்நாட்டின் 1965-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான போரில் ராணுவம்- போலீசின் அடக்குமுறைகளுக்கும் துப்பாக்கிச் சூடுகளுக்கும் பலியானோர் எண்ணிக்கை 300-க்கும் அதிகம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
1963-ம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டம், 1965-க்குப் பிறகும் மத்திய அரசின் அலுவல் பணிகள் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இந்தியுடன் ஆங்கிலத்தையும் தொடர்ந்து பயன்படுத்த வழிவகுத்தது. 1965 போராட்டங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்ட அரசியல் உறுதிமொழிகளைத் தொடர்ந்து, 1967-ல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம் ஆங்கிலத்தின் தொடர்ச்சியான பயன்பாடு உறுதிப்படுத்தப்பட்டது.
அரசியல் சாசனம் சொல்வது என்ன?

அரசியல் சாசனத்தின் 343-வது பிரிவு ஒன்றியத்தின் அலுவல் மொழி
- (1) ஒன்றியத்தின் அலுவல் மொழி, தேவநாகரி எழுத்து வடிவிலான இந்தியாக இருக்கும்.
ஒன்றியத்தின் அலுவல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் எண்களின் வடிவம், இந்திய எண்களின் சர்வதேச வடிவமாக இருக்கும்.
(2) உட்பிரிவு (1)-ல் என்ன கூறப்பட்டிருந்தாலும், இந்த அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு, அரசியல் சாசனம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஒன்றியத்தின் எந்த அலுவல் பணிகளுக்கு ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டதோ, அந்தப் பணிகள் அனைத்திற்கும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
ஆனால், அந்த 15 ஆண்டு காலத்திற்குள் ஒன்றியத்தின் எந்த அலுவல் பணிக்கும் ஆங்கிலத்துடன் இந்தியையும், இந்திய எண்களின் சர்வதேச வடிவத்துடன் தேவநாகரி வடிவிலான எண்களையும் பயன்படுத்தக் குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் அனுமதி வழங்கலாம்.
(3) இந்தப் பிரிவில் என்ன கூறப்பட்டிருந்தாலும், மேற்கூறப்பட்ட 15 ஆண்டு காலம் முடிந்த பிறகு,
(a) ஆங்கில மொழியையோ; அல்லது
(b) தேவநாகரி வடிவிலான எண்களையோ,
நாடாளுமன்றம் சட்டத்தில் குறிப்பிடும் அலுவல் பணிகளுக்குப் பயன்படுத்துவதற்கு நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம்.

1963 அலுவல் மொழிகள் சட்டம் சொல்வது என்ன?
1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டம்
1963-ஆம் ஆண்டின் சட்ட எண் 19 [10 மே 1963]
மத்திய அரசின் அலுவல் பணிகள், நாடாளுமன்ற நடவடிக்கைகள், மத்திய மற்றும் மாநிலச் சட்டங்கள், உயர் நீதிமன்றங்களின் சில பணிகள் ஆகியவற்றில் எந்தெந்த மொழிகளைப் பயன்படுத்தலாம் என்பதை வரையறுக்கும் சட்டம்.
இந்தியக் குடியரசின் 14-வது ஆண்டில் நாடாளுமன்றத்தால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுகிறது:
- சட்டத்தின் பெயரும் நடைமுறைக்கு வரும் நாளும்
(1) இந்தச் சட்டம், 1963-ஆம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டம் என்று அழைக்கப்படும்.
(2) இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு 1965 ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வரும்.
இந்தச் சட்டத்தின் மற்ற பிரிவுகள், மத்திய அரசு அரசிதழில் அறிவிக்கும் தேதிகளில் நடைமுறைக்கு வரும். வெவ்வேறு பிரிவுகளுக்கு வெவ்வேறு தேதிகளை மத்திய அரசு நிர்ணயிக்கலாம்.
- வரையறைகள்
இந்தச் சட்டத்தில், சொல்லப்பட்டுள்ள இடத்திற்கேற்ப வேறு பொருள் தேவைப்படாதவரை:
(a) “நிர்ணயிக்கப்பட்ட நாள்” என்பது, மூன்றாவது பிரிவைப் பொறுத்தவரை 1965 ஜனவரி 26-ஆம் தேதியைக் குறிக்கும்.
இந்தச் சட்டத்தின் மற்ற பிரிவுகளைப் பொறுத்தவரை, அந்தந்தப் பிரிவுகள் நடைமுறைக்கு வரும் நாளைக் குறிக்கும்.
(b) “இந்தி” என்பது தேவநாகரி எழுத்து வடிவிலான இந்தியைக் குறிக்கும்.
- மத்திய அரசின் அலுவல் பணிகள் மற்றும் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தின் தொடர்ச்சியான பயன்பாடு
(1) அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட 15 ஆண்டுகள் முடிந்தபோதிலும், நிர்ணயிக்கப்பட்ட நாளான 1965 ஜனவரி 26 முதல் இந்தியுடன் ஆங்கிலத்தையும் பின்வரும் பணிகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம்:
(a) அந்த நாளுக்கு முன்பு ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசின் அனைத்து அலுவல் பணிகளுக்கும்;
(b) நாடாளுமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும்.
இந்தியைத் தனது அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளாத ஒரு மாநிலத்துடன் மத்திய அரசு தொடர்புகொள்ளும்போது ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டும்.
இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்ட ஒரு மாநிலம், இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளாத மற்றொரு மாநிலத்துடன் இந்தியில் தொடர்புகொண்டால், அந்தத் தகவலுடன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட வேண்டும்.
அதேநேரம், இந்தியைத் தனது அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளாத ஒரு மாநிலம், மத்திய அரசுடனோ இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்ட மற்றொரு மாநிலத்துடனோ இந்தியில் தொடர்புகொள்வதை இந்தப் பிரிவு தடுக்காது.
இரண்டு மாநிலங்களும் ஒப்புக்கொண்டால், அவை தங்களுக்கிடையிலான தொடர்புக்கு இந்தியைப் பயன்படுத்தலாம். அத்தகைய சூழலில், அந்த மாநிலத்துடனான தொடர்பில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவது கட்டாயமல்ல.
(2) துணைப்பிரிவு (1)-ல் என்ன கூறப்பட்டிருந்தாலும், பின்வரும் இடங்களுக்கிடையிலான தகவல் தொடர்பில் இந்தியோ அல்லது ஆங்கிலமோ பயன்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் இந்தியைப் பணிமொழியாகப் பயன்படுத்தத் தேவையான அறிவைப் பெறும் வரை, அந்தத் தகவலின் ஆங்கில அல்லது இந்தி மொழிபெயர்ப்பும் வழங்கப்பட வேண்டும்:
(i) மத்திய அரசின் ஒரு அமைச்சகம், துறை அல்லது அலுவலகத்துக்கும் மற்றொரு அமைச்சகம், துறை அல்லது அலுவலகத்துக்கும் இடையிலான தொடர்பு;
(ii) மத்திய அரசின் அமைச்சகம், துறை அல்லது அலுவலகத்துக்கும், மத்திய அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் அல்லது நிறுவனத்தின் அலுவலகத்துக்கும் இடையிலான தொடர்பு;
(iii) மத்திய அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம் அல்லது அதன் அலுவலகத்துக்கும், மற்றொரு நிறுவனம் அல்லது அதன் அலுவலகத்துக்கும் இடையிலான தொடர்பு.
(3) துணைப்பிரிவு (1)-ல் என்ன கூறப்பட்டிருந்தாலும், பின்வரும் ஆவணங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளும் பயன்படுத்தப்பட வேண்டும்:
(i) மத்திய அரசு, அதன் அமைச்சகம், துறை அல்லது அலுவலகம் வெளியிடும் தீர்மானங்கள், பொது உத்தரவுகள், விதிகள், அறிவிக்கைகள், நிர்வாக அறிக்கைகள், பிற அறிக்கைகள் மற்றும் செய்தி அறிக்கைகள்;
மத்திய அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அலுவலகங்கள் வெளியிடும் மேற்கண்ட ஆவணங்களுக்கும் இது பொருந்தும்.
(ii) நாடாளுமன்றத்தின் ஒரு அவையிலோ, இரண்டு அவைகளிலுமோ தாக்கல் செய்யப்படும் நிர்வாக அறிக்கைகள், பிற அறிக்கைகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள்;
(iii) மத்திய அரசு, அதன் அமைச்சகம், துறை அல்லது அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள்; வழங்கப்படும் உரிமங்கள், அனுமதிகள், அறிவிப்புகள் மற்றும் ஒப்பந்தப்புள்ளி படிவங்கள்;
மத்திய அரசுக்குச் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அலுவலகங்கள் சார்பில் வெளியிடப்படும் மேற்கண்ட ஆவணங்களுக்கும் இது பொருந்தும்.
(4) துணைப்பிரிவுகள் (1), (2), (3) ஆகியவற்றில் உள்ள விதிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், மத்திய அரசின் அமைச்சகம், துறை, பிரிவு அல்லது அலுவலகத்தின் பணிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அலுவல் பணிகளில் பயன்படுத்த வேண்டிய மொழி அல்லது மொழிகள் குறித்து, எட்டாவது பிரிவின் கீழ் மத்திய அரசு விதிகளை உருவாக்கலாம்.
அத்தகைய விதிகளை உருவாக்கும்போது, அலுவல் பணிகளை விரைவாகவும் திறமையாகவும் முடிப்பது, பொதுமக்களின் நலன் ஆகியவை உரிய முறையில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பாக, மத்திய அரசுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒருவர் இந்தி அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மொழியில் திறமை பெற்றிருந்தால், அவர் தனது பணியைத் திறம்படச் செய்வதை அந்த விதிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் திறமை பெறவில்லை என்ற காரணத்தால் எந்த ஊழியரும் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் அந்த விதிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
(5) துணைப்பிரிவு (1)-ன் (a) பிரிவும், துணைப்பிரிவுகள் (2), (3), (4) ஆகியவையும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்து மாநிலங்களின் சட்டமன்றங்களும், மேற்கண்ட பணிகளில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
அந்தத் தீர்மானங்களைப் பரிசீலித்த பிறகு, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளும் ஆங்கிலப் பயன்பாட்டை நிறுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
இந்த இரண்டு நடைமுறைகளும் நிறைவடையும் வரை, மேற்கண்ட பணிகளில் ஆங்கிலத்தின் பயன்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
- அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு
(1) மூன்றாவது பிரிவு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 10 ஆண்டுகள் முடிந்த பிறகு, அலுவல் மொழிக்கான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
இதற்கான தீர்மானம், குடியரசுத் தலைவரின் முன் அனுமதியுடன் நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஓர் அவையில் முன்மொழியப்பட்டு, இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
(2) இந்தக் குழுவில் மொத்தம் 30 உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.
அவர்களில்:
20 பேர் மக்களவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
10 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், ஒற்றை மாற்று வாக்கு முறையைப் பயன்படுத்தும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில், தங்கள் அவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
(3) மத்திய அரசின் அலுவல் பணிகளில் இந்தியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்வது இந்தக் குழுவின் கடமையாகும். ஆய்வுக்குப் பிறகு, குழு தனது பரிந்துரைகளுடன் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.
குடியரசுத் தலைவர் அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்வதுடன், அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்ப வேண்டும்.
(4) குழுவின் அறிக்கையையும், அது தொடர்பாக மாநில அரசுகள் தெரிவித்த கருத்துகளையும் பரிசீலித்த பிறகு, அறிக்கையின் முழுமையான பரிந்துரைகள் அல்லது அதில் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்தக் குடியரசுத் தலைவர் உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.
ஆனால் அவ்வாறு பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவுக்கு முரணாக இருக்கக் கூடாது.
- மத்திய சட்டங்கள் உள்ளிட்டவற்றின் அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பு
(1) நிர்ணயிக்கப்பட்ட நாளான 1965 ஜனவரி 26-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு, குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின் கீழ் அரசிதழில் இந்தியில் வெளியிடப்படும் பின்வரும் ஆவணங்களின் மொழிபெயர்ப்புகள், அவற்றின் அதிகாரப்பூர்வ இந்தி வடிவமாகக் கருதப்படும்:
(a) மத்தியச் சட்டம் அல்லது குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டம்;
(b) அரசியலமைப்புச் சட்டம் அல்லது மத்தியச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவு, விதி, ஒழுங்குமுறை அல்லது துணை விதி.
(2) நிர்ணயிக்கப்பட்ட நாளிலிருந்து, நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஓர் அவையில் அறிமுகப்படுத்தப்படும் அனைத்து மசோதாக்கள் மற்றும் அவற்றில் முன்மொழியப்படும் திருத்தங்களின் அதிகாரப்பூர்வ ஆங்கில வடிவத்துடன், அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட வேண்டும்.
இந்தி மொழிபெயர்ப்பு எந்த முறையில் அதிகாரப்பூர்வமாக்கப்பட வேண்டும் என்பது, இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் விதிகள் மூலம் நிர்ணயிக்கப்படும்.
- சில சூழல்களில் மாநிலச் சட்டங்களின் அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பு
ஒரு மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டங்கள் அல்லது மாநில ஆளுநர் பிறப்பிக்கும் அவசரச் சட்டங்களில் பயன்படுத்துவதற்காக, அந்த மாநிலம் இந்தியைத் தவிர வேறு ஒரு மொழியை நிர்ணயித்திருக்கலாம்.
அத்தகைய சூழலில், அரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவின் உட்பிரிவு (3)-ன்படி தேவைப்படும் ஆங்கில மொழிபெயர்ப்புடன், அந்தச் சட்டம் அல்லது அவசரச் சட்டத்தின் இந்தி மொழிபெயர்ப்பையும் வெளியிடலாம்.
மாநில ஆளுநரின் அதிகாரத்தின் கீழ், மாநில அரசிதழில் அந்த இந்தி மொழிபெயர்ப்பு வெளியிடப்பட வேண்டும்.
அவ்வாறு வெளியிடப்படும் இந்தி மொழிபெயர்ப்பு, அந்த மாநிலச் சட்டம் அல்லது அவசரச் சட்டத்தின் அதிகாரப்பூர்வ இந்தி வடிவமாகக் கருதப்படும்.
- உயர் நீதிமன்றத் தீர்ப்புகளில் இந்தி அல்லது மாநிலத்தின் மற்றொரு அலுவல் மொழியைப் பயன்படுத்துதல்
நிர்ணயிக்கப்பட்ட நாளான 1965 ஜனவரி 26-ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு, ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு, ஆணை அல்லது உத்தரவில் ஆங்கிலத்துடன் இந்தியையோ அந்த மாநிலத்தின் அலுவல் மொழியையோ பயன்படுத்த மாநில ஆளுநர் அனுமதி வழங்கலாம்.
இதற்கு முன்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மாநில ஆளுநர் பெற வேண்டும்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு, ஆணை அல்லது உத்தரவு ஆங்கிலம் அல்லாத வேறு மொழியில் வழங்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வெளியிடப்பட்ட அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட வேண்டும்.
- விதிகளை உருவாக்கும் அதிகாரம்
(1) இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, மத்திய அரசு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டு விதிகளை உருவாக்கலாம்.
(2) இந்தப் பிரிவின் கீழ் உருவாக்கப்படும் ஒவ்வொரு விதியும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். அந்த விதி மொத்தம் 30 நாட்கள் அவைகளின் பரிசீலனையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் ஒரே கூட்டத்தொடரிலோ அல்லது தொடர்ந்து நடைபெறும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டத்தொடர்களிலோ இருக்கலாம்.
அந்தக் காலம் முடிவடைவதற்கு முன்பு இரண்டு அவைகளும் அந்த விதியில் மாற்றம் செய்ய ஒப்புக்கொண்டால், மாற்றப்பட்ட வடிவில் மட்டுமே அந்த விதி நடைமுறையில் இருக்கும்.
அந்த விதி உருவாக்கப்படக் கூடாது என்று இரண்டு அவைகளும் ஒப்புக்கொண்டால், அதன்பிறகு அந்த விதி நடைமுறையில் இருக்காது.
ஆனால் விதியில் செய்யப்பட்ட மாற்றமோ, விதி ரத்து செய்யப்பட்டதோ, அந்த மாற்றம் அல்லது ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அந்த விதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் செல்லுபடித் தன்மையைப் பாதிக்காது.
- ஜம்மு–காஷ்மீருக்குப் பொருந்தாத சில விதிகள்
இந்தப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு ஜம்மு–காஷ்மீர் மறுசீரமைப்பு — மத்தியச் சட்டங்களைத் தழுவுதல் — ஆணையின் கீழ், 18 மார்ச் 2020 அன்று வெளியிடப்பட்ட S.O.1123(E) அறிவிக்கை மூலமும், லடாக் யூனியன் பிரதேச மறுசீரமைப்பு — மத்தியச் சட்டங்களைத் தழுவுதல் — ஆணையின் கீழ் 23 அக்டோபர் 2020 அன்று வெளியிடப்பட்ட S.O.3774(E) அறிவிக்கை மூலமும் இந்தப் பிரிவு நீக்கப்பட்டது.
நடைமுறைக்கு வந்த தேதிகள்
பிரிவு 5(1): 10 ஜனவரி 1965 அன்று வெளியிடப்பட்ட S.O.94 அறிவிக்கையின்படி நடைமுறைக்கு வந்தது.
பிரிவு 6: 19 மே 1969 அன்று வெளியிடப்பட்ட S.O.1945 அறிவிக்கையின்படி நடைமுறைக்கு வந்தது.
பிரிவு 7: 7 மார்ச் 1970 அன்று வெளியிடப்பட்ட S.O.841 அறிவிக்கையின்படி நடைமுறைக்கு வந்தது.
பிரிவு 5(2): 1 அக்டோபர் 1976 அன்று வெளியிடப்பட்ட S.O.655(E) அறிவிக்கையின்படி நடைமுறைக்கு வந்தது.
சட்டத் திருத்தங்கள்
மூன்றாவது பிரிவு, 1968-ஆம் ஆண்டு சட்ட எண் 1-ன் இரண்டாவது பிரிவின் மூலம் மாற்றப்பட்டது. இந்த மாற்றம் 8 ஜனவரி 1968 முதல் நடைமுறைக்கு வந்தது.
நான்காவது பிரிவின் நிபந்தனை, 1968-ஆம் ஆண்டு சட்ட எண் 1-ன் மூன்றாவது பிரிவின் மூலம் சேர்க்கப்பட்டது. இது 8 ஜனவரி 1968 முதல் நடைமுறைக்கு வந்தது.
எட்டாவது பிரிவில் இடம்பெற்ற சில சொற்கள், 1986-ஆம் ஆண்டு சட்ட எண் 4-ன் இரண்டாவது பிரிவு மற்றும் அதன் அட்டவணை மூலம் மாற்றப்பட்டன. இந்த மாற்றம் 15 மே 1986 முதல் நடைமுறைக்கு வந்தது.
எது உண்மை?
ஆகையால் இந்தி இந்திய ஒன்றியத்தின் அதாவது மத்திய அரசின் அலுவல் மொழி என்பது உண்மை. ஆனால் இந்தி மட்டும்தான் இந்தியாவின் அலுவல் மொழி என்பது உண்மையல்ல. இந்தியாவுக்கு அரசியலமைப்பால் அறிவிக்கப்பட்ட தேசிய மொழியும் கிடையாது என்பதுதான் உண்மை.
