நா.மணி
ஒரு தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்ற உடனேயே சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது, ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் உரிமையா? அல்லது வாக்களித்த மக்களுக்கும் பொது நிதிக்கும் இழைக்கப்படும் அநீதியா?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இந்த இரண்டு கேள்விகளை மிகத் தீவிரமாக நம்முன் நிறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
வளர்ந்து வரும் தேர்தல் செலவுகள்
2021 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒதுக்கீடு ரூ.795 கோடியாகவும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒதுக்கீடு ரூ.1,009 கோடியாகவும் இருந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகை கணிசமாக உயர்ந்துள்ளது.
ரூ.1,302 கோடியை 234 தொகுதிகளால் வகுத்தால், ஒரு தொகுதிக்கான தேர்தல் நடத்தும் செலவு சராசரியாக ரூ.5.56 கோடி.
வாக்கிற்கு எங்கே மதிப்பு?

இது, ஒரு வேட்பாளருக்கோ அல்லது வெற்றி பெற்ற ஒருவருக்கோ செலவிடப்பட்ட தொகை அல்ல. தேர்தல் நிர்வாகம், வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு, பணியாளர்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், போக்குவரத்து, கண்காணிப்பு உள்ளிட்ட ஒட்டு மொத்த தேர்தல் நிர்வாகச் செலவின் சராசரி.
மக்கள் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு, நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர், சில நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்தால்,
வாக்காளர்களின் தீர்ப்புக்கு என்ன மதிப்பு?
ஜனநாயக ஒழுக்கத்தை நிராகரித்தல்
ஒரு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது அந்த நபர் ஐந்து ஆண்டுகள் தமது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே. அவர் ஒரு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தால், அந்தக் கட்சியின் கொள்கை, சின்னம், தேர்தல் அறிக்கை ஆகியவற்றையும் அடிப்படையாகக் கொண்டே பலர் வாக்களித்திருப்பார்கள்.
அத்தகைய சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே வேறு அரசியல் நோக்கத்திற்காகப் பதவியைத் துறப்பது, வாக்காளர்களின் அரசியல் நம்பிக்கையைப் காலாவதி ஆக்குகிறது. இது ஒழுக்க ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் ஏற்றுக் கொள்ளத்தக்க தல்ல.
சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு…

2026 தேர்தலுக்குப் பிறகு சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வேறு அரசியல் அணியில் இணைந்தனர். இதன் விளைவாக அந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. தற்போது மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு எப்படி செல்லப் போகிறது? தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், சட்டமன்ற உறுப்பினர் என்பது தனிநபரின் தனிச்சொத்து அல்ல. அது சட்டப்பூர்வமாக இந்திய ஜனநாயகம் அவருக்கு அளித்த பொறுப்பு.
நீதிமன்றத் தலையீடு

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி (Article 190(3)(b)) ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது ராஜினாமாவை பேரவைத் தலைவரிடம் வழங்கலாம். ராஜினாமா தன்னார்வமானதா, உண்மையானதா என்பதை சபாநாயகர் பரிசீலனை செய்து
ஏற்றுக் கொண்டால் அந்த இடம் காலியானது என்று அறிவிக்கப்படுகிறது.
பின்னர் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சட்ட நடைமுறை தொடங்குகிறது. ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி (151A). அதற்கு சில விதிவிலக்குகளும் உள்ளன.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையேயான வழக்கில் உச்சநீதிமன்றம் விரிவாக ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவர் ராஜினாமா செய்வதோடு அந்தப் பிரச்சினை முடிந்து விடுவதில்லை.அவரது ராஜினாமா ஒரு புதிய தேர்தலை உருவாக்குகிறது.
அந்தப் புதிய தேர்தலுக்கு மீண்டும் அரசு அலுவலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். பாதுகாப்புப் படைகள் பயன்படுத்தப்பட வேண்டும். வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும். தேர்தல் பணியாளர்கள் பயிற்சி பெற வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வர வேண்டும். இதற்கெல்லாம் மீண்டும் மக்கள் பணமே செலவாகிறது என எச்சரிக்கை செய்கிறது.
பொது நிதி இழப்பின் அளவுகோல்
2026 பொதுத் தேர்தலுக்காக ரூ.1,302 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனை 234 தொகுதிகளால் வகுத்தால் ஒரு தொகுதிக்கு சராசரியாக ரூ.5.56 கோடி வருகிறது.
இதிலிருந்து, “ஒவ்வொரு ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.விடமும் ரூ.5.56 கோடியை வசூலிக்க வேண்டும்” என்பது, தற்போதைய சட்ட ரீதியாக சாத்தியம் இல்லை. ஆனால் அப்படி ஓர் சட்டத்தை கொண்டு வந்து பொதுநிதி இழப்பை தடுக்கும் அளவுகோலாக முன் வைக்க வேண்டும்.
ஒரு தனிநபரின் அரசியல் முடிவுக்காக, சுய லாபத்திற்காக ஒரு தொகுதி மக்கள் ஏன் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டும்? “ராஜினாமா செய்வது என் அரசியல் உரிமை” என ஒருவர் வாதிடலாம். அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்பதை கடைக் கோடி மனிதர்களும் புரிந்து கொண்டு எள்ளி நகையாடுகின்றனர்.
அரசியல் அபாயம்
இவையெல்லாவற்றையும் தாண்டி, ஜனநாயகத்தில் உரிமைகளுக்கு இணையாக பொறுப்புகளும் உண்டு என்பதை ராஜினாமா செய்தவர்கள் மறந்து விடுகின்றனர். ஒரு தனிநபர் தனது பதவியைத் துறக்கும் உரிமையைப் பயன்படுத்தும்போது, அதனால் ஏற்படும் பொதுச் செலவு, வாக்காளர்களின் சிரமம், நிர்வாகச் சுமை, வளர்ச்சிப் பணிகளில் ஏற்படும் இடையூறு ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சி மாறுவதற்காக அல்லது வேறு அரசியல் பதவியைப் பெறுவதற்காக மட்டும் பதவி ராஜினாமா செய்யும் நடைமுறை அதிகரித்தால், தேர்தல் என்பது மக்களின் தீர்ப்பாக இல்லாமல் அரசியல்வாதிகளின் அரசியல் பேரத்தின் ஒரு கருவியாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
ராஜினாமாக்களை தடுக்க தேவைப்படும் சீர் திருத்தங்கள்?

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திற்குள், தனிப்பட்ட அரசியல் காரணத்திற்காக பதவி விலகி இடைத்தேர்தலை ஏற்படுத்தினால், அவரது ராஜினாமா காரணமாக அரசுக்கு ஏற்பட்ட கூடுதல் தேர்தல் செலவை அவரிடமிருந்து வசூலிக்கும் சட்டத்தை உருவாக்குவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும்.
•தேர்தலில் வெற்றி பெற்று, போதிய காரணமின்றி மிகக் குறுகிய காலத்தில் பதவியை ராஜினாமா செய்பவர்களுக்கு குறைந்த பட்ச காலத்தை நிர்ணயம் செய்து தேர்தலில் போட்டியிடத் தடை விதிப்பது குறித்து ஒரு சட்டம் கொண்டு வருவதை பரிசீலனை செய்யலாம்.
•தேர்தல் செலவுகள் முற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தேர்தலுக்கும், தேர்தல் ஆணைய நிர்வாகச் செலவு, காவல்துறை செலவு, பாதுகாப்புச் செலவு, அரசு அலுவலர்களுக்கான செலவு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், போக்குவரத்து செலவு, தேர்தல் பணியாளர் செலவு என அனைத்தையும் தனித்தனியாக பொது இடங்களில் வெளியிட வேண்டும். அப்போதுதான் மக்கள் “ஒரு அரசியல் முடிவுக்காக அல்லது ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய இவ்வளவு பொதுப் பணம் செலவாகிறது?” என்பதை அறிந்து கொள்ள முடியும்.
ஜனநாயக உரிமைகளை கேலி செய்யக் கூடியவர்களை சட்டம் கொண்டு மட்டுமே தண்டிக்க வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிடும் இப்படிப்பட்ட மனிதர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் கட்சி பேதமின்றி அவர்களை நிராகரிக்க வேண்டும்.
அதுவே ஜனநாயகத்தின் மிகச் சிறந்த பாடமாக அமையும்.
ஜனநாயகத்தில் பதவி ஒரு தனிப்பட்ட சொத்து அல்ல. ஒரு எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்யும் சட்ட உரிமை அவருக்கு இருக்கலாம். ஆனால் அவர் வென்ற தொகுதியின் மக்கள் தங்கள் வாக்கைத் திரும்பப் பெற முடியாது. அவர்கள் செலவழித்த நேரத்தைத் திரும்பப் பெற முடியாது. அவர்களுக்காக நடத்தப்பட்ட தேர்தலின் செலவைத் திரும்பப் பெற முடியாது. இந்த அநீதிக்கு என்ன தீர்வு?
ஒரு முக்கியமான ஜனநாயகக் கொள்கையை உருவாக்க வேண்டிய நேரம் இது. “வெற்றி பெற்ற பிறகு மக்களுக்கு அளித்த அரசியல் பொறுப்பை மதிப்பது ஒவ்வொரு அரசியல்வாதியின் கடமை” என்பதை அனைவர் நெஞ்சிலும் பதிய செய்ய வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பதவியைத் துறப்பது வழக்கமான அரசியல் உத்தியாக மாறிவிட்டால், நாளை தேர்தலின் உண்மையான விலை பணத்தில் மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையிலும் செலுத்த வேண்டியிருக்கும். மக்களின் வாக்கு விளையாட்டுப் பொருள் அல்ல. மக்களின் வரிப்பணம் அரசியல் பரிசோதனைக்கான பணமும் அல்ல. தேர்தலில் வென்ற பிறகு பதவியைத் துறப்பவர்கள் வாக்களித்த மக்களையே தண்டிக்கிறார்கள் என்று பொருள்.
