2028 அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜே.டி. வான்ஸுக்கு ஆதரவு மறுத்த டிரம்ப்

Published On:

| By Kavi

அமெரிக்காவின் அடுத்த அதிபர் தேர்தலுக்கான அரசியல் கணக்குகள் இப்போதே சூடுபிடித்துள்ள நிலையில், துணை அதிபர் ஜே.டி. வான்ஸை 2028 தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக ஆதரிப்பது குறித்து டொனால்ட் டிரம்ப் அவசர முடிவெடுக்க மறுத்துள்ளார். 

“இப்போதே முடிவு செய்ய வேண்டியதில்லை”

ADVERTISEMENT

அயர்லாந்தின் ஷானன் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்பிடம், 2028 அதிபர் தேர்தலில் வான்ஸை ஆதரிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது குறித்து பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்ற வகையில் கருத்து தெரிவித்தார்.

அதே நேரத்தில், வான்ஸை அவர் பாராட்டவும் தவறவில்லை. வான்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், குடியரசுக் கட்சியில் திறமையான பலர் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். 

ADVERTISEMENT

வான்ஸ் – ரூபியோ இடையே போட்டி?

டிரம்பின் அடுத்த வாரிசு யார் என்ற விவாதத்தில் ஜே.டி. வான்ஸுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் பெயரும் தொடர்ந்து பேசப்படுகிறது. இருவரையும் டிரம்ப் இதற்கு முன்பு பலமுறை பாராட்டியுள்ளார்.

ADVERTISEMENT

ஆகஸ்ட் மாதம் நடந்த தனிப்பட்ட சந்திப்பில், “இறுதியில் நாம் ஜே.டியை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று டிரம்ப் கூறியதாக தகவல் வெளியானது. இதனால் வான்ஸுக்கு டிரம்பின் ஆதரவு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது. 

மிட் டெர்ம் தேர்தலுக்குப் பிறகே தெளிவு?

ஆனால், வான்ஸ் தனது 2028 தேர்தல் திட்டத்தை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க மிட் டெர்ம் தேர்தலுக்குப் பிறகே இதுகுறித்த முடிவுகள் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே குடியரசுக் கட்சிக்குள் அடுத்த தலைமுறை குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. டிரம்ப் ஆதிக்கம் தொடர்ந்தாலும், 2028 தேர்தலுக்கான வாரிசு அரசியல் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகவே இந்த நகர்வுகள் பார்க்கப்படுகின்றன. 


Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share