டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டாயமாகும் சீருடை!

Published On:

| By Mathi

TASMAC Uniform

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் கட்டாயமாக சீருடை அணிந்து பணியாற்ற வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான விரிவான சுற்றறிக்கையை டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் கே.நந்தகுமார் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 4,048 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படுகின்றன. அவற்றில் மொத்தம் 22,877 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 6,473 பேர் மேற்பார்வையாளர்கள், 14,379 பேர் விற்பனையாளர்கள், 2,025 பேர் உதவி விற்பனையாளர்கள்.

ADVERTISEMENT

இவர்களில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் இளநீல நிற சட்டை மற்றும் அடர் நீல நிற பேண்ட் அணிய வேண்டும். விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் இளம்பழுப்பு நிற சட்டை மற்றும் அடர் சாம்பல் நிற பேண்ட் அணிய வேண்டும்.

சட்டையின் இடது மார்புப் பகுதியில் TASMAC லோகோ கட்டாயமாக இடம்பெற வேண்டும். சட்டையை டக்-இன் செய்தோ அல்லது செய்யாமலோ அணிந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுதோறும் 3 செட் சீருடைகளுக்காக ரூ.6,000 சீருடைப்படி வழங்கப்படும். அதாவது ஒரு செட்டுக்கு ரூ.2,000 வீதம் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் துணி மற்றும் தையல் செலவு அடங்கும். நடப்பு 2026-27 நிதியாண்டுக்கான தொகையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தகுதியான ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏப்ரல் 1ஆம் தேதி இந்தத் தொகையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்கு மாவட்டம் சீருடையின் நிறம் மாறுபடுவதைத் தவிர்க்க, சீருடைக்கான அங்கீகரிக்கப்பட்ட துணிகளை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் அக்டோபர் 31-ம் தேதிக்கு துணிகளை வாங்கி, நவம்பர் 10-க்குள் மூன்று செட் சீருடைகளையும் தைத்து முடிக்க வேண்டும். நவம்பர் 15 முதல் வேலை நேரம் முழுவதும் சீருடை அணிவது கட்டாயம்.

ADVERTISEMENT

சீருடைப்படி பெற்ற பிறகும் உரிய காரணமின்றி சீருடை வாங்காமல் அல்லது அணியாமல் இருக்கும் ஊழியர்களிடமிருந்து வழங்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுவதுடன், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share