மதுரையில் மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து மூன்று விமானங்கள் வானத்தில் வட்டமடித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. அமைச்சர் வன்னியரசுடன் கோயம்புத்தூரில் தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானம் அவசரமாக மதுரையில் தரையிறங்கியது.
மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்கிறது.
இதனால் நவி மும்பையில் இருந்து 1:25 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் 3:25 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நிலையில் வானிலை மாற்றம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டமிட்டு பின்னர் 167 பயணிகளுடன் 4.20 மணிக்கு தரையிறங்கியது
மேலும் ஹைதராபாத்தில் இருந்து 3:00 மணிக்கு புறப்பட்டு மதுரை விமான நிலையத்திற்கு 4:40 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் மோசமான வானிலை காரணமாக உசிலம்பட்டி அருகே 20 நிமிடத்திற்கு மேலாக வட்டமடித்து 202 பயணிகளுடன் பத்திரமாக மாலை 5 மணிக்கு தரையிறங்கியது.
இந்த நிலையில் சென்னையிலிருந்து 2:15 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் புறப்பட்ட இண்டிகோ விமானம் சரியாக 3:20 மணிக்கு கோவையில் தரையிறங்க வேண்டிய நிலையில் திடீர் கன மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டமடித்து தரையிறங்க முடியாமல் பின்னர் மதுரை கிளம்பியது. மதுரை விமான நிலையத்தில் மாலை 4:10 மணிக்கு அவசரமாக தரையிறங்கியது.
இந்த சென்னை கோயம்புத்தூர் இண்டிகோ விமானத்தில் அமைச்சர் வன்னியரசு உட்பட 158 பயணிகள் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டனர். வானிலை சரியான பிறகு நவி மும்பை விமானமும் ஹைதராபாத் விமானமும் தரையிறங்கிய பின்னர் அமைச்சர் வன்னியரசு வந்த விமானம் மீண்டும் கோவைக்கு புறப்பட்டுச் சென்றது
மதுரை, கோயம்புத்தூர் பகுதியில் தொடர் மழையினால் மோசமான வானிலை காரணமாக அடுத்தடுத்து மூன்று விமானங்கள் வானத்தில் வட்டமடித்தது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
