22 ஆண்டுகளாக தென் தமிழகத்தின் உறவுப் பாலம்… பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று பிறந்த நாள்!

Published On:

| By Mathi

Pothigai Express Turns 22

சென்னை எழும்பூரில் இரவு ரயில் ஏறி உறங்கினால், மறுநாள் காலை தென்காசி மண்ணில் இறங்கலாம். சென்னை- தென் தமிழகத்தை இணைக்கும் முக்கியமான இரவு நேர ரயில்களில் ஒன்றான பொதிகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (Pothigai Express), இன்று (செப்டம்பர் 20) தனது 22 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்கிறது.

2004 செப்டம்பர் 20 அன்று பொதிகை எக்ஸ்பிரஸ் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. தற்போது 12661/12662 என்ற எண்களில் சென்னை எழும்பூர்-செங்கோட்டை இடையே தினசரி இயக்கப்படும் இந்த ரயில், தென்காசி, ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட தென் மாவட்டப் பகுதிகளுக்கு சென்னையுடன் நேரடி ரயில் இணைப்பை வழங்கும் முக்கிய சேவையாக உள்ளது.

ADVERTISEMENT

சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே முன்பு 16105/16106 கொல்லம் மெயில் மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டது. அந்த ரயில் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லம் சென்றது.

ரயில் பாதைகள் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, 12661/12662 சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது மானாமதுரை- விருதுநகர் அகலப்பாதை மாற்றம் முழுமையடையாததால், பொதிகை எக்ஸ்பிரஸ் திருச்சி- திண்டுக்கல்- மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

ADVERTISEMENT

முதலில் தென்காசி… பின்னர் செங்கோட்டை

2004-ல் தொடங்கப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் ஆரம்பத்தில் தென்காசி வரை இயக்கப்பட்டது. பின்னர் 2008-ல் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு செங்கோட்டையே பொதிகையின் தென்முனை நிலையமாக இருந்து வருகிறது.

இதன் மூலம் செங்கோட்டை, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு சென்னை செல்வதற்கான முக்கிய இரவு நேர ரயில் இணைப்பு கிடைத்தது.

ADVERTISEMENT

பொதிகையின் பாதை

தற்போது பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூர்- செங்கோட்டை இடையே தினமும் இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில் விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக செங்கோட்டையை அடைகிறது. தற்போதைய அட்டவணைப்படி பயண தூரம் சுமார் 667 கி.மீ.

சென்னை எழும்பூரிலிருந்து செங்கோட்டை நோக்கிச் செல்லும் ரயில் 12661 என்றும், செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் நோக்கிச் செல்லும் ரயில் 12662 என்றும் இயக்கப்படுகிறது.

டீசலில் இருந்து மின்சாரத்திற்கு…

பொதிகையின் 22 ஆண்டுகால பயணத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஒரு காலத்தில் சென்னைப் பகுதியில் மின்சார என்ஜினிலும், தென் பகுதியில் டீசல் என்ஜினிலும் பொதிகை பயணித்தது.

அகல ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2023 நவம்பர் 1 முதல் செங்கோட்டை–சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படத் தொடங்கியது. இதனை தெற்கு ரயில்வே அப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பொதிகையின் டீசல் என்ஜின் சகாப்தத்திற்கு விடை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

அதேபோல் பழைய ICF பெட்டிகளில் இருந்து நவீன LHB பெட்டிகளுக்கும் பொதிகை மாறியுள்ளது. ரயில் பயணத்தின் பாதுகாப்பு மற்றும் வசதிகளில் ஏற்பட்ட மாற்றத்தின் அடையாளமாகவும் இது அமைந்தது.

சென்னையில் பணிபுரிவோர், மாணவர்கள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என தென்காசி-விருதுநகர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலரின் பயணத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இரவில் சென்னையில் ஏறி, அதிகாலையில் ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை பகுதிகளை அடையும் வசதி காரணமாக, இந்த ரயில் வெறும் போக்குவரத்து சேவையாக இல்லாமல் சென்னைக்கும் தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளுக்கும் இடையேயான உறவுப் பாலமாக வளர்ந்திருக்கிறது.

சென்னையிலிருந்து தென் தமிழகத்திற்குப் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் நினைவுகளில் ‘பொதிகை’க்கு தனி இடம் உண்டு.

அதனால்தான் இன்று பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெறும் தொடக்க நாள் அல்ல… 22 ஆண்டுகளை நிறைவு செய்து, 23-வது ஆண்டில் தடம் பதிக்கிறது தென் தமிழகத்தின் உறவுப் பாலம்!

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share