வீட்டு உபயோகத்துக்கான மானிய விலையிலான சமையல் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

அக்டோபர் 1 முதல் என்ன புதிய விதி?
மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டரை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை (Biometric Aadhaar Authentication – BAA) முடித்திருக்க வேண்டும்.
ஆதார் பயோமெட்ரிக் எதற்காக?
வீட்டு உபயோகத்துக்காக அரசு மானியத்துடன் வழங்கும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் உண்மையான, தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்படுகிறது.
ஒவ்வொரு சமையல் கேஸ் இணைப்பையும் ஆதார் மூலம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருடன் உறுதிப்படுத்துவதன் மூலம், வீட்டு உபயோக சிலிண்டர்கள் வணிக மற்றும் தொழில் பயன்பாட்டுக்குத் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும். ஒரே நபர் பெயரில் அல்லது தகுதியில்லாமல் இருக்கும் இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கவும், மானியம் யாருக்குச் செல்கிறது என்பதை வெளிப்படையாக வைத்திருக்கவும் இந்த நடைமுறை உதவும்.
அக்டோபர் 1 முதல் என்ன நடக்கும்?
“ஏற்கெனவே ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் ஏதாவது செய்ய வேண்டுமா?” எனில், மீண்டும் அதைச் செய்ய வேண்டியதில்லை. அவர்களுக்கு தற்போது இருப்பதைப் போலவே சிலிண்டர் விநியோகம் தொடரும்..
ஆனால் இதுவரை ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்கள், மானிய விலை சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டுமென்றால் முதலில் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். அதை முடித்த பிறகு வழக்கம்போல மானிய விலை சிலிண்டரை முன்பதிவு செய்ய முடியும்.
எப்படி பயோமெட்ரிக் சரிபார்ப்பு செய்வது?
இதற்காக அனைவரும் கேஸ் ஏஜென்சிக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்களுக்கு பல வழிகள் வழங்கப்பட்டுள்ளன.
- சிலிண்டரை விநியோகம் செய்ய வரும் ஊழியரிடமே பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கலாம்.
- எண்ணெய் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் விநியோக ஊழியர் அந்த இடத்திலேயே சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.
- வாடிக்கையாளர் தனது விநியோகஸ்தரின் அலுவலகத்துக்குச் சென்று ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கலாம்.
- சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களின் மொபைல் செயலிகள் மூலமாகவும் வாடிக்கையாளர்கள் சுயமாக e-KYC நடைமுறையை முடிக்கலாம்.
- Indane வாடிக்கையாளர்கள் IndianOil ONE, Bharatgas வாடிக்கையாளர்கள் HelloBPCL, HP Gas வாடிக்கையாளர்கள் HP PAY செயலியைப் பயன்படுத்தலாம்.
- சுயமாக e-KYC செய்வது எப்படி என்பதற்கான வீடியோ வழிகாட்டுதல்களும் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.
பயோமெட்ரிக் செய்ய விரும்பவில்லை என்றால் சிலிண்டர் கிடைக்காதா?
கிடைக்கும். ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பைச் செய்ய விரும்பாதவர்கள் அல்லது அதைச் செய்ய முடியாதவர்களுக்கு சிலிண்டர் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்படாது.
அவர்கள் தங்களது எண்ணெய் நிறுவனத்தின் இணையதளம், மொபைல் செயலி, WhatsApp chatbot, IVRS உள்ளிட்ட டிஜிட்டல் வழிகளில், பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ள விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்தவர்களுக்கு மானியம் கிடைக்காது. எண்ணெய் நிறுவனத்திடம் உள்ளூர் அளவில் இருப்பு இருந்தால் 5 கிலோ அல்லது 10 கிலோ சிலிண்டர்கள் சந்தை விலையில் வழங்கப்படும்.
அதாவது, ஆதார் பயோமெட்ரிக் செய்யவில்லை என்பதற்காக சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் போகாது. ஆனால் வழக்கமான மானிய விலை சிலிண்டரைப் பெற முடியாது.
2026 செப்டம்பர் 19-ந் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 27.43 கோடி வீட்டு உபயோக சிலிண்டர் வாடிக்கையாளர்கள் ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடித்துள்ளனர். இது மொத்த வாடிக்கையாளர்களில் 89.9 சதவிகிதம் ஆகும்.
பலமுறை நீட்டிக்கப்பட்ட காலக்கெடு
ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்க வாடிக்கையாளர்களுக்கு முதலில் 2026-ம் ஆண்டு ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்குவதற்காக காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
ஜூலை 31, ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 15, ஆகஸ்ட் 23, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 7 என பலமுறை நீட்டிக்கப்பட்டு, இறுதியாக செப்டம்பர் 14, 2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
வாடிக்கையாளர்களை ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்கச் செய்வதற்காக எண்ணெய் நிறுவனங்கள் 2023 அக்டோபர் மாதம் முதலே நாடு முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுவரை 12 கோடிக்கும் அதிகமான SMS மற்றும் WhatsApp தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பயோமெட்ரிக் சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களை விநியோகஸ்தர்கள் மற்றும் சிலிண்டர் விநியோக ஊழியர்கள் தனித்தனியாகத் தொடர்புகொண்டும் வருகின்றனர்.
கேஸ் ஏஜென்சிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.
உதவி தேவைப்பட்டால் 1800 2333 555 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
