‘பூண்டு மிளகு குழம்பு’ விவகாரம்: பெண் இன்ஃப்ளூயன்சர்கள் பரபரப்பு புகார்.. மணி ப்ரோ விவகாரத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

இன்றைய அவசர உலகில் தினமும் மூன்று வேளையும் வீடுகளில் சமைத்து சாப்பிடுவது என்பது பலருக்கும் சவாலான விஷயமாக மாறியுள்ளது. குறிப்பாக, பெண்களும் வேலைக்குச் செல்லும் சூழலில் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஆன்லைன் உணவுப் பொருட்கள் வர்த்தகம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தக் கால மாற்றத்தை வீடுகளில் இருக்கும் பெண்கள் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, மசாலா பொடி வகைகள் தொடங்கி ‘பூண்டு மிளகு குழம்பு’ போன்ற ரெடி-மிக்ஸ் உணவுப் பொருட்களைத் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், சாதாரண முயற்சியாகத் தொடங்கிய பல பெண்கள் இன்று தொழில்முனைவோராக வெற்றிகரமாக வலம் வருகின்றனர்.

ADVERTISEMENT

இவர்களின் தயாரிப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துகள் வெளியாகி வந்தன. “உணவின் சுவை அருமையாக இருக்கிறது; வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கிறது” என்று ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர். அதே நேரத்தில், “இது வீடுகளில் இருக்கும் பெண்களைச் சோம்பேறிகளாக்குகிறது” என்றும் சிலர் விமர்சித்து வந்தனர். ஆரம்பத்தில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பயன்பாடு குறித்துத் தொடங்கிய இந்த விமர்சனங்கள், ஒரு கட்டத்தில் தனிநபர் தாக்குதலாக மாறத் தொடங்கியது.

சமூக வலைத்தளங்களில் ‘மணி ப்ரோ’ என்பவர், இந்த பெண் இன்ஃப்ளூயன்சர்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலை மிக அதிகமாக உள்ளதாகவும், அவற்றின் தரத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும் கூறித் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்த வீடியோக்களுக்கு இணையவாசிகளிடையே ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி எழுந்தது.

ADVERTISEMENT

தொழில் சார்ந்த விமர்சனங்களைத் தாண்டி, மணி ப்ரோ என்பவர் தங்களை ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசி இழிவுபடுத்தியதாகப் பாதிக்கப்பட்ட பெண் இன்ஃப்ளூயன்சர்கள் குற்றம் சாட்டினர். இதைத் தொடர்ந்து, தங்களை இணைய வழியில் கடுமையாக இழிவுபடுத்தி அச்சுறுத்தல் விடுத்த யூடியூபர் மணி ப்ரோ மீது பெண் தொழில்முனைவோர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், மணிகண்டன் என்ற நபர், தங்கள் மீது ஆபாசமான விமர்சனங்களை முன்வைத்ததாக கூறியுள்ளனர்.

இப்பிரச்சனை குறித்து மின்னம்பலம் தரப்பில் புகார் அளித்த பெண் தொழில்முனைவோர் ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நாங்கள் முறைப்படி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். அது தொடர்பான சட்டப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இது குறித்து இப்போது மேலும் பேச விரும்பவில்லை” என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share