ஆயுத பூஜை (Ayudha Pooja), விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கான நாகர்கோவில்- சர்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில் முன்பதிவு இன்று (செப்டம்பர் 20) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

விடுமுறை கால சிறப்பு ரயிலாக ரயில் எண் 07535 சர்லப்பள்ளி–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2, 9, 16, 23 என வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
சர்லப்பள்ளியில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் இரவு 10.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் நல்கொண்டா, மிரியாலகுடா, குண்டூர், தெனாலி, நெல்லூர் வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்து சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று நாகர்கோவில் சென்றடையும்.
நாகர்கோவில் – சர்லப்பள்ளி
மறுமார்க்கத்தில் 07536 நாகர்கோவில்–சர்லப்பள்ளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், செப்டம்பர் 27 மற்றும் அக்டோபர் 4, 11, 18, 25 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலில் நள்ளிரவு 12.45 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சர்லப்பள்ளி சென்றடையும். இந்த வழித்தடத்திலும் மொத்தம் 5 சேவைகள் இயக்கப்படுகின்றன.
10 ஸ்லீப்பர் பெட்டிகள்
இந்த சிறப்பு ரயிலில் 3 இரண்டடுக்கு ஏசி பெட்டிகள், 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள், 10 ஸ்லீப்பர் பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் மற்றும் 2 லக்கேஜ் கம் பிரேக் வேன் பெட்டிகள் என மொத்தம் 24 பெட்டிகள் இடம்பெறுகின்றன.
இன்று காலை 8 மணிக்கு முன்பதிவு
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப்டம்பர் 20) காலை 8 மணிக்கு தொடங்கும். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் இந்தச் சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
