மதுரை- கோயம்புத்தூர் இடையே திண்டுக்கல், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக கூடுதல் பகல்நேர ரயில் சேவையை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.
மதுரை–கோயம்புத்தூர் இடையே பழனி, பொள்ளாச்சி வழியாக முன்பு 06479/06480 பழனி–மதுரை–பழனி மற்றும் 06462/06463 பழனி–கோயம்புத்தூர்–பழனி ஆகிய முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் தனித்தனியாக இயக்கப்பட்டு வந்தன.
இந்த இரண்டு ரயில் சேவைகளையும் ஒன்றாக இணைத்த தெற்கு ரயில்வே, 2022-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் மதுரை–கோயம்புத்தூர் இடையே நேரடி பகல்நேர ரயிலை அறிமுகப்படுத்தியது. அதுவே தற்போது 16722 மதுரை–கோயம்புத்தூர் மற்றும் 16721 கோயம்புத்தூர்–மதுரை ரயில்களாக இயக்கப்பட்டு வருகின்றன. அப்போது இந்த ரயிலில் 12 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 SLR பெட்டிகள் இடம்பெற்றிருந்தன.
தற்போதைய நேரம் என்ன?
தற்போது 16722 மதுரை- கோயம்புத்தூர் முன்பதிவில்லா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் தினமும் காலை 7.10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படுகிறது.
காலை 8.25 மணிக்கு திண்டுக்கல், 9.30 மணிக்கு பழனி, 10.10 மணிக்கு உடுமலைப்பேட்டை, 10.40 மணிக்கு பொள்ளாச்சி, 11.05 மணிக்கு கிணத்துக்கடவு, 11.40 மணிக்கு போத்தனூர் வழியாக மதியம் 12.15 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடைகிறது.
மதுரை முதல் கோயம்புத்தூர் வரை இந்த வழித்தடத்தின் மொத்த தூரம் 233 கி.மீ. பயண நேரம் 5 மணி 5 நிமிடங்கள்.
மறுமார்க்கத்தில் 16721 கோயம்புத்தூர்-மதுரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் பிற்பகல் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல் வழியாக மதுரையை சென்றடைகிறது.
9 மணி நேர இடைவெளி..
இதில் பயணிகள் சுட்டிக்காட்டும் முக்கிய பிரச்சினை பகல்நேர ரயில் சேவையில் இருக்கும் நீண்ட இடைவெளிதான்.
16722 மதுரை- கோயம்புத்தூர் ரயில் காலை 8.25 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது. அதன் பிறகு திண்டுக்கல்–பழனி–உடுமலைப்பேட்டை–பொள்ளாச்சி மார்க்கத்தில் செல்லும் அடுத்த தினசரி ரயிலான 16344 அம்ரிதா எக்ஸ்பிரஸ் மாலை 5.10 மணிக்குத்தான் திண்டுக்கல்லில் இருந்து புறப்படுகிறது.
இதனால் காலை 8.25 மணி முதல் மாலை 5.10 மணி வரை 8 மணி 45 நிமிடங்கள் தினசரி ரயில் சேவையில் இடைவெளி ஏற்படுகிறது.
முக்கியமான வழித்தடம்
மதுரை- திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம்- பழனி- உடுமலைப்பேட்டை- பொள்ளாச்சி–கிணத்துக்கடவு–போத்தனூர்–கோயம்புத்தூர் என தென் மற்றும் மேற்கு தமிழகத்தின் முக்கிய நகரங்களை இந்த ரயில் பாதை இணைக்கிறது.
மதுரையில் இருந்து பழனி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மட்டுமின்றி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கோயம்புத்தூர் செல்பவர்களுக்கும் இந்த வழித்தடம் முக்கியமானதாக உள்ளது.
மதுரை- கோயம்புத்தூர் நேரடி ரயில் சேவை தொடங்கி நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், திண்டுக்கல்லில் காலை ரயில் சென்ற பிறகு அடுத்த தினசரி ரயிலுக்கு 8 மணி 45 நிமிட இடைவெளி நீடிக்கிறது.
எனவே, மதுரை–கோயம்புத்தூர் இடையே பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வழியாக கூடுதல் பகல் நேர ரயிலை இயக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் திண்டுக்கல்–கோயம்புத்தூர் இடையே புதிய பகல் நேர ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பதே இந்த வழித்தட பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
