வலுவடையும் வங்க கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… திண்டுக்கல் உட்பட 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Published On:

| By Mathi

TN Rain Alert

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (செப்டம்பர் 21) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல் உட்பட 21 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செப்டம்பர் 19-ம் தேதி மாலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று செப்டம்பர் 20-ம் தேதி காலை நிலவரப்படி கிழக்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவியது.

ADVERTISEMENT

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று செப்டம்பர் 21-ம் தேதி கிழக்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து நாளை (செப்டம்பர் 22) மேற்கு மத்திய வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என்று கணித்திருந்தது.

எந்த 21 மாவட்டங்களில் கனமழை?

ADVERTISEMENT

மேலும் இன்று நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சி ஆகிய 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்தப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு 9.54 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், வட தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று காலை வரை பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வட தமிழக கடலோரத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து 10 முதல் 15 நாட் வேகத்திலும், அவ்வப்போது 20 நாட் வரையிலும் காற்று வீசக்கூடும். மழை மற்றும் இடியுடன் கூடிய மழையின்போது பார்வைத்திறன் குறையக்கூடும்; கனமழை பெய்யும் பகுதிகளில் பார்வைத்திறன் மிகவும் குறைய வாய்ப்புள்ளது. கடல் லேசானது முதல் மிதமான கொந்தளிப்புடன் காணப்படும்.

மேலும், சென்னை பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் வரையிலான கடற்கரைப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 1.3 முதல் 1.4 மீட்டர் வரை இருக்கக்கூடும் என தனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை செப்டம்பர் 22 இரவு 7 மணி வரை நீடிக்கிறது. துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த பணிகளில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. அங்கு தென்மேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து 15 முதல் 20 நாட் வேகத்திலும், அவ்வப்போது 25 நாட் வரையிலும் காற்று வீசக்கூடும். காற்றின் வேகம் அதிகரிக்கும் நேரங்களில் கடல் கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.

இதேபோல் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு கடல் அலை தொடர்பான தனி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share