கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. இடுக்கி, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று செப்டம்பர் 20-ந் தேதி பெருமழை கொட்டியது. மலை மாவட்டங்களில் பெய்த கனமழையால் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
மண்சரிவில் சிக்கி 2 பேர் பலி
இடுக்கி மாவட்டம் வட்டவாடா அருகேயுள்ள கொட்டக்கம்பூர் பகுதியில் நேற்று பிற்பகல் கனமழை பெய்தது. இடைவிடாமல் கனமழை கொட்டியதால் அப்பகுதியில் தோட்டங்களில் பணிபுரிந்தவர்கள் தற்காலிக கொட்டகை ஒன்றில் தஞ்சமடைந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து அந்த கொட்டகை மீது விழுந்தது.
இதில் பாலகிருஷ்ணன், அவரது சகோதரி சின்னு ஆகியோர் உயிரிழந்தனர். பாலகிருஷ்ணனின் மனைவி மாரியம்மாள் படுகாயமடைந்தார்.
கோட்டயம் மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. வாகமன் சுற்றுலா சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த சங்கீதா அருள் லால் என்ற பெண், வேலத்துச்சேரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கினார். சாலையில் திடீரென மண் சரிந்து விழுந்ததில் சங்கீதா மண்ணுக்குள் சிக்கிக் கொண்டார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு பெண் காயங்களுடன் உயிர் தப்பினார்.
கோட்டயம் மாவட்டம் பூஞ்சார் பகுதியில் ஏற்பட்ட மற்றொரு மண் சரிவில் வீடு ஒன்று மண்ணுக்குள் புதைந்தது. இதில் 80 வயதான ஜோசப் என்பவர் உயிரிழந்தார். அவரது இரண்டு மகள்கள் மீட்கப்பட்டனர்.
மேலும் ஈராட்டுப்பேட்டை – வாகமன் சாலையில் காரிக்காடு டாப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு கார்கள் சேதமடைந்தன. இதில் பயணித்தவர்கள் உயிர் தப்பினர்.
9 பேரை அடித்து சென்ற வெள்ளம்
மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகே பூக்கோட்டும்பாடம் பகுதியில் உள்ள கோட்டப்புழா ஆற்றில் நேற்று மாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 9 பேர் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் மீட்கப்பட்டனர். 2 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. எஞ்சிய 4 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
வானிலை மையம் எச்சரிக்கை
கோட்டயம் மாவட்டத்தின் வாகமன், வெள்ளிக்குளம், தீக்கோய் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை தொடர்வதால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம், வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் உருவாகும் குறைந்த காற்றழுத்தப் பகுதியின் தாக்கத்தால், கேரளாவில் வரும் 24-ம் தேதி வரை சில இடங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
