கொசுக்களால் அல்ல… பூச்சிகளால் பரவும் காய்ச்சல் : எச்சரிக்கையாக இருக்க வேண்டியம் நேரம் இது!

Published On:

| By Kavi

ஸ்க்ரப் டைபஸ் பாக்டீரியா தொற்றால் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த நிலையில், இந்த நோயைப் பற்றி மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். 

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 228 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ADVERTISEMENT

தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,277 ஆக அதிகரித்துள்ளது. 

இப்படி டெங்கு பரவல் குறித்த அச்சம் மற்றும் கவலையும் மக்களிடையே இருந்து வந்த நிலையில் சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலை சேர்ந்த இறுதி ஆண்டு படிக்கும் ஹரிஷ் என்ற 20 வயது மாணவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

ADVERTISEMENT

அண்ணா பல்கலையின் மருதம் மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வந்த ஹரிஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் தான் அவர் உயிரிழந்தார் என்று தகவல்கள் பரவின. 

ADVERTISEMENT

ஆனால் அவரது மாதிரிகளை எடுத்து சென்னை மாநகராட்சி பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. 

அவருக்கு ஸ்க்ரப் டைபஸ் என்செஃபலோபதி பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுவாசக் கோளாறு மற்றும் பல உறுப்புகள் செயலிழந்ததும் தெரியவந்தது என மாநகராட்சி கூறியது.

இந்த பாக்டீரியா பாதிப்பு குறித்து மாநகராட்சி நிர்வாகம் கூறுகையில், “இந்த ஆண்டில் சென்னையில் பதிவான முதல் ஸ்க்ரப் டைபஸ் உயிரிழப்பு இதுவாகும். இதுவரை 173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்க்ரப் டைபஸ் கொசுக்களால் பரவும் நோயல்ல. 

தற்போது கல்வி நிறுவனங்கள் உட்பட சென்னை முழுவதும் கொசு/பூச்சி கட்டுப்பாடு மற்றும் காய்ச்சல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது. 

ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு என்றால் என்ன? 

ஸ்க்ரப் டைபஸ்  என்பது இந்தியா உட்பட ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படும் ‘ஓரியன்சியா சுட்சுகமுஷி’ (orientia tsutsugamunshi) எனும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோய் தொற்று. 

டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா போல இந்த நோய் கொசுக்களால் பரவாது. சிகர்ஸ்( chiggers) என்று அழைக்கப்படும் பூச்சிகளின் லார்வாக்கள் (இளம் பருவ உயிரினங்கள்) கடித்தால் மனிதர்களுக்கு இந்த நோய் ஏற்படும். 

இந்த உண்ணிகள் பொதுவாக அடர்ந்த புதர்கள், வளர்ந்த புல்,. செடி கொடிகள் நிறைந்த பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் காணப்படுகின்றன. 

இந்த பூச்சி கடியால் பாதிப்புகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஏற்படுகின்றன. ஏனென்றால் அங்குள்ள தாவரங்கள் இந்த   உண்ணிகளுக்கு ஏற்ற வாழ்விடங்களாக உள்ளன. 

எனினும் நகர்புறங்களிலும் உள்ள சிறிய அளவிலான செடிகள் மற்றும் புதர்களில் கூட இவை வாழ கூடும். எனவே ஒருவர் பெரிய காடுகளுக்கும் அல்லது கிராமப்புறங்களுக்கோ சென்றால் மட்டுமே இந்த நோய் பரவும் என்பது இல்லை. 

சிறிய புதர்கள் உள்ள இடங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். 

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், தாய்லாந்து, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஸ்க்ரப் டைபஸ் தொற்று பரவலாக காணப்படும் ஒரு நோய் என சுகாதார அமைப்புகள் தெரிவிக்கின்றன. 

வெப்ப மண்டல பகுதிகளில் இந்நோய் ஆண்டு முழுவதும் இருக்கக்கூடும் என்றாலும் பருவமழை காலத்திலும் அதற்குப் பிறகும் தான் இதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும். 

அறிகுறிகள் என்ன? 

இந்த பூச்சி கடித்த ஒன்று முதல் மூன்று வாரங்களுக்குள் இதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும். காய்ச்சல் தான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். இதனுடன் நடுக்கம், தலைவலி, உடல் வலி மற்றும் சோர்வு ஆகியவை ஏற்படும். 

சில பேருக்கு நிணநீர் முனைகளில் வீக்கம், குமட்டல் அல்லது வயிற்றில் அசௌகரியம் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.

அதோடு இந்த பூச்சி கடித்த இடத்தில் சிகரெட்டால் சுட்டது போன்ற கருமையான புண் காய்ந்து தழும்புகள் போன்று இருக்கும். இதையும் மருத்துவர்கள் பரிசோதிப்பார்கள். இது வலி இல்லாதது. அக்குள், இடுக்கு பகுதி , இடுப்பு அல்லது கழுத்து போன்ற இடங்களில் இது தோன்றக்கூடும். எனினும் எல்லா நோயாளிகளுக்கும் இத்தகைய தழும்பு ஏற்படுவதில்லை.

சிலருக்கு உடலில் தடிப்புகள் ஏற்படும். இது பெரும்பாலும் வயிற்றுப் பகுதிகளில் தொடங்கி கை கால்களுக்கு பரவும். ஆரம்பத்திலேயே இதற்கு சிகிச்சை அளிக்காவிட்டால் நோய் தீவிரமடைந்து நுரையீரல் அழற்சி, மூளைக்காய்ச்சல், சிறுநீரக பாதிப்பு, மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு போன்ற ஆபத்தான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 

ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பை கண்டறிவது ஏன் கடினமாக உள்ளது? 

பருவ மழை காலத்தில் காய்ச்சலை ஏற்படுத்தும் பல தொற்று நோய்களின் அறிகுறிகளுடன் ஸ்க்ரப் டைபஸ் அறிகுறிகள் ஒத்தியிருப்பதால் அதை பெரும்பாலும் கண்டறியப்படாமல் போகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஆரம்பத்தில் நோயாளிகளுக்கு டெங்கு மலேரியா அல்லது வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படலாம். 

ரத்த பரிசோதனைகள் மற்றும் பி சி ஆர் போன்ற மூலக்கூறு பரிசோதனைகள் நோய் தொற்றை உறுதிப்படுத்த உதவும். 

ஸ்கிரப் டைபஸ் நோய்க்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், நோய் தீவிரமாக உள்ளவர்கள் அல்லது பிற உடல் நல சிக்கல்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை பெற வேண்டும். 

ஆரம்பத்திலேயே சிகிச்சையை தொடங்குவது முக்கியம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நோய் முற்றி உறுப்புகள் செயலிழப்பு வரை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். 

தடுக்கும் வழிகள்? 

இதற்கு இதுவரை பிரத்தியேக தடுப்பூசி எதுவும் இல்லை. எனினும் இந்த பூச்சிகள் கடிக்காமல் தற்காத்துக் கொள்வதன் மூலமும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வதன் மூலமும் இந்நோயை தடுக்கலாம். 

புதர்கள், அடர்ந்த புற்கள் நிறைந்துள்ள இடங்களுக்குச் செல்லும் போது முழுக்கை சட்டையுடன், நீண்ட பேன்டுகளை அணிய வேண்டும். 

எலிகள் மூலமே இந்த உண்ணிகள் அதிகம் பரவுவதால் வீடுகளிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் எலிகள் வராதவாறு குப்பைகளை சரியாக அப்புறப்படுத்த வேண்டும். 

புல்வெளிகள் அல்லது தோட்டங்களில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் ஆடைகளை துவைத்து சுடுநீரில் சோப்பு போட்டு குளிப்பது நல்லது.

ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான மழை காலத்தில் இந்த நோய் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share