கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை: பி.என்.பாளையத்தில் அதிகபட்சமாக 210 மி.மீ பதிவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, பி.என்.பாளையம் பகுதியில் அதி கனமழை கொட்டித்தீர்த்துள்ளது.

கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள மழையளவு அறிக்கையின்படி, (செப். 20 காலை 7.30 முதல் செப். 21 காலை 7.30 வரை), மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட பி.என்.பாளையத்தில் ‘அதி கனமழை’ பெய்துள்ளது. அந்த வகையில் 210 மி.மீ (21 செ.மீ) மழை பதிவாகி உள்ளது.

ADVERTISEMENT

இதற்கு அடுத்தபடியாக, பேரூர் தாலுகா சிறுவாணி அடிவாரம் பகுதியில் 92 மி.மீ மழையும், வால்பாறை தாலுகா சின்னக்கல்லார் பகுதியில் 66 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. இந்த இரு இடங்களிலும் ‘கனமழை’ (Heavy Rainfall) பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நல்ல மழை பெய்துள்ளது. வால்பாறை பிஏபி (PAP) பகுதியில் 53 மி.மீ, வால்பாறை தாலுகா அலுவலகத்தில் 50 மி.மீ, சோலையாரில் 49 மி.மீ மற்றும் சின்கோனாவில் 40 மி.மீ என இப்பகுதிகளில் பரவலாக மிதமான மழை பதிவாகியுள்ளது. மேலும், தொண்டாமுத்தூர் பிடிஓ (BDO) அலுவலகம் (3.5 மி.மீ), பில்லூர் அணை (3 மி.மீ) ஆகிய இடங்களில் லேசான மழையும், போத்தனூர், ஆழியார் ஆகிய இடங்களில் மிக லேசான மழையும் பெய்துள்ளது.

ADVERTISEMENT

அதேவேளையில், கோவையின் பிற முக்கியப் பகுதிகளான பீளமேடு விமான நிலையம், மேட்டுப்பாளையம், அன்னூர், கோவை தெற்கு, சூலூர், மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் எவ்வித மழைப்பொழிவும் இன்றி வறண்ட நிலையே காணப்பட்டது (0 மி.மீ).

மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 570.30 மி.மீ மழையும், சராசரியாக 24.80 மி.மீ மழையும் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் மழை காரணமாக பெரியநாயக்கன்பாளையம் – வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல் கழிவுநீர் வாய்க்காலில் நீர் கரைபுரண்டு ஓடியது. இதுகுறித்த ஆபத்தை உணராமல் வாகனங்களை இயக்க முயன்றவர்களைச் சுற்றி இருந்தவர்கள் பதறி தடுத்த பரபரப்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share