4 கோவில்களின் 3084 ஏக்கர் நிலம்.. விஜய் அரசின் உத்தரவால் வெடித்த சர்ச்சை!

Published On:

| By Mathi

Controversy Erupts Over Vijay Govt's Order Regarding 3,084 Acres of Temple Land Across Four Temples

கரூரில் (இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 4 கோவில்களின் 3084 ஏக்கர் நிலத்தை 3,390 பேருக்கு பட்டா வழங்க முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையாகி உள்ளது.

தமிழ்நாடு மைனர் இனாம் (ஒழிப்பும் மற்றும் ரயத்துவாரியாக மாற்றலும்) சட்டம், 1963′ நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, கோவில் பெயரில் இருந்த நிலங்களுக்குச் சட்டப்பூர்வமாகத் தனிநபர்கள் பெயரில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

இவ்வாறு முறையாகப் பட்டா பெற்றிருந்தும், அந்த நிலங்கள் அனைத்தும் அறநிலையத்துறையின் ‘Prohibitory Module’ (பத்திரப்பதிவு தடை ) பிரிவில் தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதனால், அந்த நிலங்களைப் பட்டாதாரர்கள் விற்பனை செய்யவோ அல்லது பரிமாற்றம் செய்யவோ முடியாமல் பல ஆண்டுகளாகத் தடை நீடித்தது.

இந்தச் சிக்கலைத் தீர்க்கக் கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரையை ஏற்று, அறநிலையத்துறை ஆணையர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இதன்படி, வருவாய்த்துறை ஆவணங்களைச் சரிபார்த்து, உண்மையான பட்டாதாரர்கள் பெயரில் உள்ள நிலங்கள் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்குமாறு அந்தந்த கோவில் செயல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த உத்தரவின் கீழ் கரூர் மாவட்டத்தில் உள்ள 4 முக்கியக் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் வருகின்றன.

  • அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (புகழிமலை) பகுதியில் 3 கிராமங்களில் உள்ள 78 புல எண்களில் அமைந்துள்ள 214.29 ஏக்கர் நிலங்கள் மற்றும் 719 பட்டாதாரர்கள் உள்ளனர்.
  • அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் (கரூர்) பகுதியில் 4 கிராமங்களில் உள்ள 39 புல எண்களில் அமைந்துள்ள 204.52 ஏக்கர் நிலங்கள் மற்றும் 637 பட்டாதாரர்கள் உள்ளனர்.
  • அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோவில் (குப்புச்சிபாளையம்) பகுதியில் 1 கிராமத்தில் உள்ள 19 புல எண்களில் அமைந்துள்ள 132.49 ஏக்கர் நிலங்கள் மற்றும் 334 பட்டாதாரர்கள் உள்ளனர்.
  • அருள்மிகு விக்ருதீஸ்வரர் திருக்கோவில் (வெஞ்சமாங்கூடலூர்) பகுதியில் 7 கிராமங்களில் உள்ள 335 புல எண்களில் அமைந்துள்ள 2533.65 ஏக்கர் நிலங்கள் மற்றும் 1700 பட்டாதாரர்கள் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, 15 கிராமங்களில் உள்ள 471 புல எண்களைக் கொண்ட 3084.95 ஏக்கர் நிலங்கள் மூலம் 3390 பட்டாதாரர்கள் இந்த உத்தரவால் பயன்பெற உள்ளனர்.

ADVERTISEMENT

பாஜக கண்டனம்

தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளதாவது: கரூர் மாவட்டத்திலுள்ள புகழிமலை பாலசுப்ரமணியன் திருக்கோயில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், குச்சிபாளையம் ரவீஸ்வரர் திருக்கோயில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட நான்கு திருக்கோயில்களுக்கும் பாத்தியப்பட்ட 3084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை உத்தரவை நீக்கி ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க வழிவகை செய்யும் பொருட்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையருக்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரைத்துள்ள அறிவிப்பாணை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த விஷயத்தில் சட்டவிரோதமாகவும், அறத்திற்கு புறம்பாகவும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமும், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் செயல்பட அனுமதித்த தவெக அரசின் இந்து விரோத செயல்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தவெகவை சேர்ந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கோயில் நிலம் கோயிலுக்கே சொந்தம் பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படாது என்று உறுதிமொழி அளித்தார்.

ஆனால் கரூரில் 3084 ஏக்கர் திருக்கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்திரப்பதிவு செய்து தர கரூர் மாவட்ட ஆட்சியரும், திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரும் பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவு பிறப்பித்துள்ள செயலுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?

மதசார்பற்ற சமூகநீதி என சொல்லிக்கொண்டே இந்து விரோத செயல்களை தனது ஆட்சியில் அனுமதிப்பதன் மூலமாகவும், இந்து விரோத செயல்களை அமைதியாக வேடிக்கை பார்த்து அதைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதன் மூலமாகவும் தவெக இன்னொரு திமுக என்பதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நிரூபித்து வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி தான் மாறி இருக்கிறதே தவிர இந்துக்களுக்கு எதிராகவும், இந்து கோயில்களுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் இந்து விரோத செயல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

கோயில்களின் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959 உருவாக்கப்பட்டது.

எந்த நோக்கத்திற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம் 1959 உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகமே செயல்படுவது காலக்கொடுமை.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் திருக்கோயில் சொத்துகளைப் பாதுகாப்பது இந்து சமய அறநிலையத் துறையின் மற்றும் அரசின் சட்டப்பூர்வ கடமை என்றும், கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு அல்லது சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு உட்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஆகவே கரூர் மாவட்டத்திலுள்ள மேற்குறிப்பிட்டுள்ள நான்கு திருக்கோயில்களுக்கும் பாத்தியப்பட்ட 3,084 ஏக்கர் நிலம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவை உடனடியாக நிறுத்தி வைக்க முதல்வர் விஜய், தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துகிறேன்.

விசுவ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென் தமிழ்நாடு மாநில தலைவர் ராமகிருஷ்ணன், வட தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் ஆண்டாள் பி சொக்கலிங்கம் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 கோவில்களுக்குச் சொந்தமான, 25,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 3,085 ஏக்கர் நிலங்கள், இந்து சமய அறநிலையத்துறையால் ஆக்கிரமிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன என்று இந்து சமய ஆர்வலர் டி.ஆர்.ரமேஷ் அவர்கள் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இத்தகைய இந்து விரோதப் போக்கை விஸ்வ ஹிந்து பரிஷத் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஜூலை 10-ஆம் தேதியன்று, கரூர் த.வெ.க அரசியல் கூட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு, அரசு வேலை வழங்குவதற்காக மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொள்ளும் பொது நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர், அதிமுக கட்சியிலிருந்து தற்போது த.வெ.கவிற்குத் தாவிய திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் கோவில் இனாம் நிலங்களில் வசித்துவந்த மக்கள் அவர்களது சொத்துகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும், இப்பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு முதலமைச்சர் விஜயை வலியுறுத்தினார்.

சில மணி நேரத்தில் ஜூலை 9-ஆம் தேதியிட்ட ஒரு அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது.

அதில் கரூர் மாவட்டத்திலுள்ள புகழிமலை பாலசுப்பிரமணிய திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில், குச்சிபாளையம் ரவீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட நான்கு திருக்கோவில்களுக்கும் பாத்தியப்பட்ட 3,084 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கான தடை உத்தரவை நீக்கி ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் மதிப்புள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து ஒப்படைக்க வழிவகை செய்வதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் திருக்கோவில் சொத்துகளைப் பாதுகாப்பது இந்து சமய அறநிலையத் துறையின் மற்றும் அரசின் சட்டப்பூர்வ கடமை என்றும், கோவில் சொத்துகள் ஆக்கிரமிப்பு அல்லது சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு உட்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அடிமனை பிரச்சனையில், ‘அடிமனை அரங்கனுக்கே சொந்தம்; அதில் வசிப்போர் அடிமனைக்குச் சொந்தம் கொண்டாட முடியாது; இந்த இடங்களுக்கு கடந்த காலங்களில் வழங்கிய பட்டாக்களையும் ரத்து செய்ய வேண்டும்’ என திருச்சி மாவட்ட நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளதை (FEB 21, 2026) தமிழக அரசு நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழக அரசுக்கு சில கேள்விகள்:

  • சுமார் 3,500 ஏக்கர் நிலங்கள் அனைத்தும் 1963-ஆம் ஆண்டு இனாம் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்ட உண்மையான ‘சிறு இனாம்’ (Minor Inam) நிலங்கள்தானா என்பதைத் தீர்மானிப்பதில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா? இதில் வேறு வகையான நிலங்களும் சேர்க்கப்பட்டிருந்தால் என்ன செய்வது?
  • 1963-ஆம் ஆண்டின் இனாம் ஒழிப்புச் சட்டத்திற்கு முன்பு, பல்வேறு மதிப்பீடுகளின்படி 9 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் இருந்தன; ஆனால் அச்சட்டத்திற்குப் பிறகு அவை 5 லட்சம் ஏக்கராகக் குறைந்துவிட்டன. அதிலும் குறிப்பாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இத்தகைய பதிவுத் தடைகளை மொத்தமாக நீக்குவது, நிலங்களை மீட்டெடுப்பதற்கும் திரும்பப் பெறுவதற்கும் உதவுமா அல்லது மேலும் பல ஆக்கிரமிப்புகளை ஊக்குவிக்குமா?
  • இதில் எந்தவொரு முறைகேடோ அல்லது தவறுதலோ நடக்கவில்லை என்று பொதுமக்கள் நம்பிக்கொள்ளும் வகையில், ஆவணங்கள், வரலாற்றுரீதியான உரிமை ஆவணங்கள், தீர்வுப் பதிவுகள், பட்டா போன்றவற்றை த.வெ.க அரசு வெளிப்படையாக வெளியிட்டுத் தனது நேர்மையை நிரூபிக்க முடியுமா?

மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பாணை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், அறத்திற்கும் புறம்பானது. மதச்சார்பற்ற நாட்டில் ஹிந்து மத கோவில்கள் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகவே தமிழக அரசு கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதே பெரும்பான்மை ஹிந்துக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

எந்த காரணம் கொண்டும் கோவில் நிலத்தை அரசு பதிவேட்டில் இருந்து மாற்றம் செய்யக் கூடாது. தற்போது அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்க இடம் தர முன்வர வேண்டும். கோவில் நிலம் நம் முன்னோர்கள் கோவில் பராமரிப்பு, பூஜைகள், பூசாரிகள் சம்பளம் போன்றவற்றிற்காகப் பயன்பட நிலம் தந்தனர். நம் முன்னோர்கள் எதற்குத் தந்தார்களோ அதற்குத் தான் அவை பயன்பட வேண்டும்.

எனவே, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உட்பட 4 கோவில்களின் 3,085 ஏக்கர் நிலங்களின் மீதான பத்திரப்பதிவுத் தடையை நீக்க ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவை முதல்வர் ஜோசப் விஜய் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். மீறும் பட்சத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத், அனைத்து ஹிந்து மக்களையும் ஒன்றிணைத்து, மாநிலம் தழுவிய மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் மற்றும் சட்ட நடவடிக்கையிலும் ஈடுபடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

காங்கிரஸ் ஆதரவு

கரூர் எம்.பி. ஜோதிமணி (காங்கிரஸ்) : கரூர் மாவட்டம் புகழூர், வாங்கல், குப்பிச்சிபாளையம், வெஞ்சமாங்கூடலூர் மேல்பாகம், கீழ்பாகம், புங்கம்பாடி மற்றும் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பத்திரப்பதிவு தடையை நீக்கி, மீண்டும் பத்திரப்பதிவு நடைபெற வழிவகை செய்த முதலமைச்சர், வருவாய்த் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்களுக்கும்
கரூர் மாவட்ட மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சென்றோம். அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இடையே நேரடி சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. தொடர்ந்து வருவாய்த் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினேன். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும் பிரச்சினையின் தன்மை மற்றும் தீவிரம் குறித்து விரிவாக விளக்கிக்கூறினேன். அவரும் பொறுமையுடன் கேட்டு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டார்.

இதன் அடிப்படையில் இப்பொழுது பாதிக்கப்பட்ட எமது மக்களின் ஒரு பகுதியினருக்கு நியாயமான தீர்வு கிடைத்துள்ளது.

இந்த நிலங்கள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் வழக்கம்போல தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். “ரூ.25,000 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்களை அரசு கரூர் மக்களுக்கு பட்டா போட்டு
வழங்கிவிட்டது” என்ற பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

உண்மை என்னவென்றால், இந்நிலங்கள் நூற்றாண்டுகளாக மக்களின் பயன்பாட்டிலும் உரிமையிலும் இருந்து வரும் நிலங்கள். 1967ஆம் ஆண்டு இனாம் நில ஒழிப்பு சட்டத்தின் கீழ் இந்நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நில உரிமை தொடர்பான பதிவுகள் முறையாக மாற்றப்பட வேண்டியிருந்த நிலையில், அறநிலையத் துறை ஆவணங்களில் மட்டும் மக்களின் பெயரில் பட்டா உள்ள நிலங்களையும் சேர்த்து கோவில் பெயரிலேயே வைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், சட்டத்திற்குப் புறம்பாக,வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்காமல் பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க கடிதம் கொடுக்கப்பட்டு பத்திரப்பதிவுத் துறையும் எவ்வித ஆவணங்களையும் கோராமல்,வருவாய்த்துறையிடம் கருத்துக் கேட்காமல் பத்திரப்பதிவை அநீதியாக நிறுத்தி வைத்தது.

சம்பந்தப்பட்ட துறைகளின் உரிய ஆய்வு மற்றும் வருவாய்த் துறையின் சரிபார்ப்பு இல்லாமல் பத்திரப்பதிவுக்கு தடைகள் விதிக்கப்பட்டதால், விவசாயிகள், நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கோவில் நிலம் அல்ல. இவை முழுமையாக மக்களின் உரிமையில் உள்ள, மக்களின் பெயரில் பட்டா பெற்றுள்ள நிலங்கள். விவசாய நிலங்களாக இருந்தால் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்; குடியிருப்பு பகுதிகளாக இருந்தால் மக்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ள பிற பகுதிகளிலும் உரிய ஆய்வு செய்து படிப்படியாக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த நேரத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களது நெடிய அனுபவம் மிகுந்த, விரைவான செயல்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தம்பி ரமேஷ்-ன் அர்ப்பணிப்பு மிகுந்த, விரைவான, நடவடிக்கைகளையும் நன்றியோடு நினைவுகூற விரும்புகிறேன்.

கோவில் நிலங்களைப் பாதுகாப்பதில் உறுதியோடு உள்ள அதே நேரத்தில் மக்களுக்கு உரிமையுள்ள நிலங்களை தவறாகக் கையகப்படுத்திவிடக்கூடாது என்கிற அவரது கவனம் பாராட்டுக்குரியது.

இந்த முயற்சியில் எங்கள் தரப்பு நியாத்தைப் புரிந்துகொண்டு செயல்பட்ட வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் இ.ஆ.ப, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

அண்ணாமலை சொல்வது என்ன?

வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை: கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.

இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் “திருக்கோவில் சொத்துகள்” என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.

இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.

தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.

எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share