சென்னையில் இருந்து லண்டன் புறப்பட இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பறவை மோதியதன் காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது.
லண்டனில் இருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் 224 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்களுடன் சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மீது பறவை மோதியது. விமானம் தரையிறங்கும் போது, சுமார் 500 அடி உயரத்தில் பறவை மோதி என்ஜின் பகுதியில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், விமானி சாமர்த்தியமாக விமானத்தைத் தரையிறக்கியதால், அதிலிருந்த 236 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பச் சோதனை நடத்தப்பட்டது. இறுதியில், பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இன்று அதிகாலை சென்னையில் இருந்து லண்டன் செல்ல 202 பயணிகள் தயாராக இருந்தனர். விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, லண்டன் செல்லவிருந்த பயணிகள் அனைவரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் பாதுகாப்பாகச் சென்னையில் உள்ள தனியார் ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விமானப் பழுது நீக்கப்பட்ட பின்னர் அல்லது மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு அவர்கள் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை பரபரப்பு நிலவியது.
