ஆந்திராவை நோக்கி நகரும் மோன்தா புயல் : ரயில், விமான சேவைகள் கடும் பாதிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

train flight

மோன்தா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது ஆந்திராவின் மசூலிபட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து 270 கி.மீ தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள நிலையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வடக்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் புயல் மசூலிப்பட்டினம் -கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திராவில் இன்று மாலை அல்லது இரவில் தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் காக்கிநாடா துறைமுகத்தில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. சென்னை எண்ணூரில் 12 செ.மீ. மழை பதிவானது. புயல் கரையை கடக்கும் நிலையில் தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் மற்றும் விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 67 ரயில்களும், 12 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ரயில் சேவை பாதிப்பு

மோன்தா புயலின் தாக்கத்தின் காரணமாக ஆந்திராவில் இன்றும் நாளையும் 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்ட்ரல் – ஹவுரா, சென்ட்ரல்-விசாகப்பட்டினம், விழுப்புரம்-காரக்பூர், திருச்சி-ஹவுரா உள்ளிட்ட 11 ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல் – விசாகப்பட்டினம் சூப்பர் பாஸ்ட் ரயில், புவனேஸ்வர் – புதுச்சேரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், புதுச்சேரி – புவனேஸ்வர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூரு – நியூ தின்சுகியா ஜங்ஷன், பெங்களூரு – ஹாதியா, பெங்களூரு – அகர்தலா, பெங்களூரு – ஹவுரா ஜங்ஷன், பெங்களூரு – மால்டா டவுன் வாஸ்கோடகாமா ஷாலிமர் ரயில்கள் 12 மணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம் பெங்களூரு ஹாடியா எக்ஸ்பிரஸ் ரெயில் விஜயவாடா, வாராங்கல், சந்த் போர்ட், பிலாச்பூர், ஜர்சுகுடா ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

விமான சேவை பாதிப்பு

இந்நிலையில் மோன்தா புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜயவாடா விசாகப்பட்டினம், ராஜமுந்திரி உள்ளிட்ட 12 இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share